ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

நீர் வளத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தாவிடின் உலகுக்கு பேராபத்து

நீர் வளத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தாவிடின் உலகுக்கு பேராபத்து

உலக நீர்தினம் இன்று அனுஷ்டிப்பு

நீர் நிலைகளுக்கு அருகில் இருந்துதான் நாகரீகம் வளர்ந்து வந்திருப்பதை நாம் அறிவோம். காற்றுக்கு அடுத்தபடியாக மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர்தான் மிகவும் இன்றியமையாதது என்பதையும் இது உணர்த்துகின்றது.

சிறு புல்பூண்டுகள் முதல் பாரிய மரங்கள், பிராணிகள் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரையிலான அனைத்து உயிர்களுக்கும் நீரின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அத்துடன் இவற்றில் 50 வீதம் முதல் 90 வீதம் வரை நீரே உள்ளடக்கப்பட்டிருப்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.

மனிதன் குடித்து உயிர் வாழ்வதற்கு மட்டுமன்றி, மனிதனின் உணவுத் தேவை அடங்கலாக சகல பாவனைகளுக்கும் நீரே அசியப்படுகிறது.

மனிதனின் ஆரம்ப போக்குவரத்து நீர் வழிப்பாதையூடேதான் நடைபெற்றது. இன்றைய நவீன உலகிலும் கூட பொருள் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு நீர் வழிப்போக்குவரத்தே கைகொடுத்துக் கொண்டிருக்கிறது.

நீரின் தேவை இவ்வாறு மனித வாழ்வுடன் மிகவும் பின்னிப் பிணைந்த ஒன்றாக இருப்பதோடு, உலகம் உள்ள வரையிலும் இந்நிலை தொடர்வதும் தவிர்க்க முடியாததாகும். உலக அமைப்பிலும் கூட தரைப்பரப்பு 30 வீதமாக இருக்கையில், நீர்ப்பாகம் 70 வீதமாக மேலோங்கிக் காணப்படுவதாலும் புவி நீர்க்கோளம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் கவலை தரும் விடயம் என்னவென்றால் 70 வீத நீரப்பரப்பில் 97 வீதம் கடல் பகுதியாகும். இந்நீர் உப்பு உற்பத்திக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் போக்வரத்துக்கும் பயன்படுவதேயன்றி மனிதனின் ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாதென்பதை அனைவரும் அறிவர்.

எஞ்சிய மூன்று வீதத்தில் பெரும்பகுதி வட, தென் துருவங்களில் பனிப்பாறைகளாக உறைந்த நிலையில் காணப்படுகின்றது. மொத்தத்தில் 0.003 வீத நீரே மனிதனின் பாவனைக்கு உகந்த விதத்தில் உள்ளது. இது நதி, ஆறு, ஏரி, குளம், குட்டைகள், நிலக்கீழ் நீர் என்று புவியில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றது.

இந்த சொற்ப நீரும்கூட எதிர்காலத்தில் அருகிப் போகும் பேராபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை பெருகிக் கொண்டு போவதால், நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு குடிகள் மடியும் என்ற அபாய அறிவிப்பை உலக உணவு, சுகாதார அமைப்புக்கள் விடுத்துக்கொண்டிருக்கின்றன.

கடந்த 2012ம் ஆண்டு உலக சனத்தொகை 700 கோடியைத் தாண்டி விட்டது.

(தொடரும்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி