ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

வொயெஜர்-1 சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேறியதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை

வொயெஜர்-1 சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேறியதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை

வொயெஜர்-1 விண்கலம் எமது சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் மத்தியில் விவாதம் வலுத்துள்ளது.

கடந்த 1977 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஏவப்பட்ட வொயெஜர்-1 விண்கலம் விண்வெளியில் தொடர்ந்து பயணித்தவாறுள்ளது. இது வேற்று கிரகங்களை ஆராயவே ஏவப்பட்டது. இந்நிலையில் இந்த விண்கலம் தற்போது எமது சூரியனின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டு பயணித்துவருவதாக ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் வொயெஜர் விண்கலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா, மேற்படி விண்கலம் இன்னும் எமது சூரிய குடும்பத்திற்குள்ளேயே இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.

வொயெஜர்-1 விண்கலம் தற்போது பூமியிலிருந்து 18 பில்லியன் கிலோமீற்றர் தொலைவில் பயணித்து வருகிறது. அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவை விட 123 மடங்கு அதிக தொலைவில் இந்த விண்கலம் உள்ளது.

எனினும் இணையத் தளத்தினூடே வெளியான ஜியோபிசிகல் சஞ்சிகையின் ஆய்வுக் கட்டுரையில் வொயெஜர்-1 விண்கலம் சூரிய மண்டலத்தைவிட்டு வெளியேறியிருப்பதாக குறிப்பிடப்பட் டுள்ளது. வொயெஜர்-1 விண்கலம் பயணத்துக்கு சூழல் தொடர்பான தரவுகளை அவதானிக்கும் போது அது சூரிய குடும்பத்தின் எல்லையைத் தாண்டி ஹெலியோபோஸ் என்ற பகுதியை அடைந்திருப்பது உறுதியாவதாக குறிப்பிட்டுள்ளது. வொயெஜர்-1 விண்கலத்திற்கு சூரியனிலிருந்து வெளியாகும் ஆற்றல் துகள்கள் தீவிரம் குறைந்ததாகவும் விண்மீன்களுக்கு இடையிலான வெற்றிடத்தில் இருந்து ஆற்றல் துகள்கள் அல்லது கொஸ்மிக் கதிர்களின் தாக்கம் தீவிரமாக இருப்பதைக் கொண்டே அது சூரிய மண்டலத்தில் இருந்து வெளியேறி இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதன்மூலம் மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருளொன்று சூரிய மண்டலத்திற்கு வெளியில் செல்லும் முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகும்.

வொயெஜர் - 1 விண்கலம் 1989 ஆம்ஆண்டு வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியுன் கிரகங்களில் ஆய்வை முடித்து தொடர்ந்து பயணித்து வருகிறது. அதாவது இந்த விண்கலம் பால்வெளியின் மையத்தை நோக்கிய திசையிலேயே பயணிக்கிறது.

வொயெஜர் விண்கலம் ஏ.சி. 793888 என்ற நட்சத்திரத்தை எட்ட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அந்த நட்சத்திரத்தை எட்ட மேலும் இரண்டு ஒளியாண்டுகளுக்கு மேல் தேவைப்படுகிறது. அதாவது குறித்த இலக்கை எட்ட பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயணிக்க வேண்டி இருக்கும். எவ்வாறாயினும் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வொயெஜர் விண்கலத்திற்கு சக்தியை கொடுக்கும் புளுடானியம் செயலிழக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து இது பூமிக்கு செய்தியை அனுப்பும் டிரான்ஸ்மீட்டர் கருவி செயலிழந்து விடும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி