ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

டீசலுக்கு பதில் பெட்ரோல்; ஒபாமா கார் பாதியில் நின்றது

டீசலுக்கு பதில் பெட்ரோல்; ஒபாமா கார் பாதியில் நின்றது

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் காரில் தவறான எரிபொருளை நிரப்பியதால் இஸ்ரேலில் வைத்து அது பாதி வழியில் நின்றுள்ளது.

ஒபாமா நேற்று முன் தினம் இஸ்ரேலை சென்றடைந்ததும் பயன்படுத்திய பாரம்பரியம்மிக்க லிமோசன் காரே இவ்வாறு பாதி வழியில் நின்றுள்ளது. குண்டு துளைக்காத இந்த கார் டீசலில் இயங்கக்கூடியது. ஆனால் அந்தக் காரில் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த தகவலை இஸ்ரேலின் ‘சன்னல் 2’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அயல் நாடான ஜோர்தானில் இருந்து மாற்று லிமோசன் கார் ஜனாதிபதிக்காக வரவழைக்க ப்பட்டுள்ளது.

எனினும் ஒபாமாவின் காரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக மாத்திரமே அமெரிக்க இரகசிய சேவை பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்களை கொண்டு செல்வதாகவும் அவர் விளக்கினார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களின்போது அமெரிக்க விமானப்படையின் சரக்கு விமானம் ஊடாக ஜனாதிபதிக்கான வாகனங்களும் கொண்டுசெல்லப்படுகிறது. எனினும் ஜனாதிபதி பயன்படுத்தும் கார்களின் விபரம் பற்றி ரகசியம் பேணப்படுகிறது. எனினும் இந்த கார்களில் தனிப்பட்ட ஒட்சிசன் விநியோக வசதி, தொலைத் தொடர்புகளுக்கான உபகரணங்கள் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியின் கார் இவ்வாறு பாதி வழியில் பிரச்சினைக்கு உள்ளானது இது முதல் முறையல்ல. 2011ஆம் ஆண்டு அயர்லாந்தில் அமெரிக்காவுக்கான தூதரகத்திலிருந்து வெளியேறியபோதும் இவ்வாறு பிரச்சினைக்குள்ளானது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி