ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு

எகிப்தின் பலம்வாய்ந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தம்மை தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சகோதரத்துவ அமைப்பை கலைக்கும் நீண்டகால அச்சுறுத்தல் முடிவுக்கு வந்திருப்பதாக அதன் வழக்கறிஞர் அப்துல் முனைம் அப்துல் மக்சூத் தெரிவித்துள்ளார்.

கடந்த வார ஆரம்பத்தில் தம்மை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு செய்து கொண்டதன் மூலம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக இஸ்லாமிய அமைப்பின் வழக்கறிஞர் தொலைக்காட்சியினூடே கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு சட்ட விரோதமானது என்றும் அதனை கலைக்க வேண்டும் என்றும் 1954 ம் ஆண்டு அப்போதைய ஆளும் புரட்சி கட்டளை கவுன்ஸில் உத்தரவிட்டது. ஆனால் அந்த தீர்ப்புக்கெதிரான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நீண்டகாலமாக நீடிக்கும் மேன்முறையீட்டை நிராகரிக்குமாறு எகிப்து அரச ஆணையாளர்கள் சபை உச்ச நிர்வாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்தே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சிக்கு இந்த பதிவு செல்லுபடியாகாது என வழக்கறிஞர் அப்துல் மக்சூத் குறிப்பிட்டார்.

கடந்த 2011 ஜனவரி 25 ல் எகிப்து மக்கள் எழுச்சி போராட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சட்ட ரீதியான அங்கீகாரம் குறித்து பல்வேறு அரசியல் தலைமைகளும் கேள்வி எழுப்பின.

குறிப்பாக அதன் நிதி சேகரிப்பு மற்றும் அரசியல் அங்கீகாரம் குறித்தே பலர் கேள்வி எழுப்பினர்.

எனினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சட்ட ரீதியான அங்கீகாரம் குறித்து உச்ச நிர்வாக நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 26ம் திகதி வழங்கப்படவுள்ளது.

கடந்த 1928 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னாள் ஜனாதிபதி கமால் அப்துல் நாஸரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

எகிப்து மக்கள் எழுச்சிக்கு பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அரசியல் கட்சியை தோற்றுவித்து பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் வென்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி