ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

சல்வார் கமிசுக்குள் மறைத்து பிறவுண் சுகர் கடத்தல்

சல்வார் கமிசுக்குள் மறைத்து பிறவுண் சுகர் கடத்தல்

* விமான நிலையத்தில் முறியடிப்பு

* ஒரு கிலோ 18 கிராம் நிறை: 6 மில்லியன் பெறுமதி

* சென்னை, திருச்சியிலிருந்து வந்த இருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங் கைக்கு சுமார் ஆறு மில்லியன் ரூபா பெறுமதியான பிர வுண் சுகர் போதைப் பொருள் கடத்தி வந்த சந் தேக நபர்கள் இருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாளிகாவத்தையைச் சேர்ந்த பெண்ணொருவரும் இந்தியப் பிரஜையான ஆணொருவருமே ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ மற்றும் 18 கிராம் நிறைகொண்ட பிரவுன் சுகர் பக்கற்றுக்கள் மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரியான நிஹால் அழகப்பெரும தினகரனுக்குத் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் புடவை வியாபாரம் தொடர்பில் அடிக்கடி இந்தியா சென்று வருபவராவார். சுமார் 40 வயதுடைய இப்பெண்மணி சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் யு. எல். 132 என்ற விமானத்தினூடாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவர் கொண்டு வந்திருந்த ஆடை பொதிகளை சோதனை செய்தபோதே சல்வார் கமிசுகளுக்குள் கடதாசி போன்று மிக மெல்லியதாக அடைக்கப்பட்டிருந்த 05 ப்ரவுண் சுகர் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பக்கற்றுக்களிலிருந்த மொத்த போதைப்பொருளின் நிறை 529 கிராமெனவும் அவ்வதிகாரி கூறினார்.

இதேவேளை அன்றைய தினமே திருச்சியிலிருந்து இலங்கை வந்த 41 வயதான இந்தியப் பிரஜை கொண்டுவந்திருந்த சல்வார் கமிசுகளுக்குள்ளிருந்தும் அதே போன்று மெல்லிதாக பொதி செய்யப்பட்ட 05 ப்ரவுண் சுகர் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நபரிடமிருந்து மீட்கப்பட்ட மொத்த போதைப் பொருளின் நிறை 489 கிராமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விருவரும் ஒருவரையொருவர் அறிந்து வைத்திருப்பதுடன் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டிய சுங்க அதிகாரி நிஹால், மேலதிக விசாரணைகளின் பொருட்டு பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி