ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

இன, மத நல்லுறவை ஏற்படுத்தும் பொறுப்பு சகல மக்களுக்கும் இருக்கிறது

இன, மத நல்லுறவை ஏற்படுத்தும் பொறுப்பு சகல மக்களுக்கும் இருக்கிறது

நாட்டில் சகல வேற்றுமைகளையும் தூக்கியெறியும் காலம் உருவாகியிருக்கிறது

கீனகஹவில வைபவத்தில் ஜனாதிபதி

நாட்டிலுள்ள சகல சமூகங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எஹலிய கொட தொகுதியில் கீனகஹவில என்னும் இடத்திலுள்ள ஸ்ரீ ஆனந்த ராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாது கோபுரத்தை திறந்து வைத்து பேசுகையில் கூறினார்.

எங்கள் நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும், இன ரீதியிலான நல்லிணக்கப்பாட்டையும் மதங்களுக்கிடையிலான நல்லுறவையும் வளர்க்கும் ஒரு பெரும் பொறுப்பு இருக்கிறது. இவ்விதம் ஒவ்வொரு பிரஜையும் நடந்துகொண்டால் பல அநாவசியமான பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் அனுசாசனம் நிகழ்த்தினார். புத்த சாசனத்திற்கு மகத்தான பணியாற்றிய விகாராதிபதி சங்கைக்குரிய குருண்டன் குலமே தர்மவங்ச தேரருக்கு விசேட நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதி அன்பளிப்பு செய்தார்.

மக்களிடையே இன, மத பேதமின்றி நல்லுறவை ஏற்படுத்துவதற்கு எதிராக இருந்த சகல வேற்றுமைகளையும் நாம் தூக்கியெறிந்து விட வேண்டிய காலம் இன்று உருவாகியிருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 22 வயதாகும் வரை நம் நாட்டு மாணவ மாணவியர் முஸ்லிம், தமிழ், மற்றும் சிங்கள பாடசாலைகளில் தனித்தனியாகவே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 22 வயதுக்குப் பின்னரே அவர்களுக்கு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று நாம் கூறுகிறோம் என்றும் அவர் சொன்னார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி; அபிவிருத்தியினால் ஏற்படும் நன்மைகள் பின்தங்கிய கிராமங்களை சென்றடைய வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் அரசாங்கம் குடிநீர், மின்சக்தி தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுத்து வருகிறது என்று கூறினார். யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபகுதியில் பெரும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. கிராமப் பாடசாலைகளில் நல்ல ஆசிரியர்களோ வசதிகளோ இல்லாவிட்டால் அப்பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் விலகிச் செல்வதை எவரும் தடுக்கமுடியாது. நாடு எவ்வளவு தூரம் அபிவிருத்தி அடைந்தாலும் இளம் சந்ததியினர்கள் நற்பண்புகளை கடைப்பிடிக்காவிட்டால் அந்த அபிவிருத்தி எவருக்கும் பயனளிக்காது என்றும் ஜனாதிபதி கூறினார்.

கிராமப்புற பாடசாலைகளின் வசதிகளை அதிகரித்து அங்கு நல்ல ஆசிரியர்களை நியமித்து அப்பாடசாலைகளை வலுவூட்ட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகள் போன்ற மதக் கல்வி அறிவைப் பெறுவதற்கு ஊக்கத்துடன் சென்று கற்றுக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் மாத்திரமே அவர்களின் மதம் என்னவென்று குறிப்பிட்டிருந்தாலும் அவர்களுக்கு தங்கள் மதத்தைப் பற்றியோ தாய்மொழியைப் பற்றியோ எதுவுமே தெரியாதிருக்கிறது. இனிமேல் கல்வி அமைச்சு பாடசாலைகளில் வரலாறு, மதம், மற்றும் தாய்மொழி ஆகியவற்றை சர்வதேச பாடசாலைகளிலும் கட்டாயப் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பவித்ரா வன்னியாராய்ச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் விகாராதிபதியும் உரையாற்றினார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி