ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு 1350 மி. டொலர் இதுவரை செலவு

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு 1350 மி. டொலர் இதுவரை செலவு

இவ்வளவு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு வரலாற்றில் இதுவே முதற் தடவை

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளின் 90 சதவீதமான நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்துள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித் துள்ளார்.

இதே வேளை சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதியமைச்சருமான சரத் அமுனுகம, அரசாங்கம் வடமாகாணத்தின் கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1350 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியி ருப்பதாகவும் இது ரயில் பாதைகளை அமைப்பதற் கும் மின்சார விநியோகத்தை விஸ்தரிப்பதற்கும் நெடுங்சாலைகளை சீரமைப்பதற்கும் நீர்விநியோகம் மற்றும் சுகாதார வசதிகளைப் பெருக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இவ்வளவு பெருந்தொகை பணம் வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர் அமுனுகம வடக்கில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளை சர்வதேச சமூகமும் மனித உரிமைக்கான அமைப்புக்களும் நன்கு தெரிந்துகொண்டுள் ளன என்று கூறினார்.

வடபகுதியின் ரயில் பாதையை விஸ்தரிப்பதற்காக 735 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் துரிதப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. வடபகுதிக்கான இரயில் பயணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஓமந்தையில் இருந்து பலாலி வரையில் 90.5 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை ஒன்று அமைக்கப்படும். இத்துடன் வவுனியா காங்கேசன் துறைக்கான ரயில் பாதையும் மாதவாச்சிய - மடு ரயில் பாதையும் மடு - தலைமன்னார் ரயில் பாதையும் திருத்தியமைக்கப்பட உள்ளன.

யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ. யினால் உடைத்து நாசமாக்கப்பட்ட பாலங்களையும் இப்போது மீள்நிர்மாணம் செய்யும் பணிகளை அரசாங்கம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்த பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல, ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய பாலங்களையும் வீதிகளையும் அமைத்து இப்பிரதேச மக்களை பொருளாதார அபிவிருத்தியுடன் இணைப்பதே தங்கள் இலட்சியமாகும் என்றும் கூறினார்.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ஏ-15 நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பூர்த்தியடைந்திருப்பதாகவும் கூறினார். ஏ15 வீதியில் உள்ள சகல பிரதான பாலங்களை கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிர்மாணித்திருக்கிற தென்றும், இதனால் முன்பிருந்த பாதை படகுச் சேவைகள் இப்போது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

உப்பாறுபாலம் 995 மில்லியன் ரூபா செலவிலும் கங்கை பாலம் 956 மில்லியன் ரூபா செலவிலும் ரல்குழி பாலம் 571 மில்லியன் ரூபா செலவிலும் காயன்கேணி பாலம் 202 மில்லியன் ரூபா செலவிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி