ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென்னாபிரிக்கா 3-0 என சுருட்டியது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென்னாபிரிக்கா 3-0 என சுருட்டியது

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு டெஸ்டில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா 2-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் செஞ்சுரியனில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா 409 ஓட்டங்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டு, ‘பலோஆன்’ பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 14 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த யூனிஸ்கான் (11), அசார் அலி (27) ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த இம்ரான் பர்ஹத் (43) ஆறுதல் தந்தார். தலைவர் மிஸ்பா (5), ஆசாத் சபீக் (6) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சப்ராஸ் அகமது (40), சயீத் அஜ்மல் (31) ஓரளவு கைகொடுத்தனர். ஈயான் அடில் (12), ரஹாத் அலி (22) நிலைக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 235 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. தென்னாபிரிக்கா சார்பில் ஸ்டைன் 4, கைல் அபாட், ரோரி கிளைன்வெல்ட் தலா 2 , ராபின் பிட்டர்சன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணி 3-0 என தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது. தவிர, ஐ. சி. சி. டெஸ்ட் தரவரிசையின் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆட்டநாயகன் விருது தென்னாபிரிக்கவின் கைல் அபாட் வென்றார். தொடர் நாயகன் விருது தென்னாபிரிக்காவின் டிவிலியர்சுக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி