ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 2ம், 3ம் கட்டம் வருட இறுதிக்குள் பூர்த்தி

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 2ம், 3ம் கட்டம் வருட இறுதிக்குள் பூர்த்தி

* 1ம் கட்டத்தினூடாக 300 மெகாவாற் மின்சாரம்

* புத்தளம் மாவட்ட மீனவர் காட்டும் எதிர்ப்பு நியாயமானது

* மின் உற்பத்தியின் நஷ்டத்தை அரசு ஏற்க வேண்டிய நிலை

அமைச்சர் பவித்ரா

மின்சார உற்பத்தியில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய அரசாங்கத்தின் வருமானத்தில் பெரும் தொகையினைச் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள் ளது. மின்சார உற்பத்தியில் அலகு ஒன்றினை உற்பத்தி செய்வதற்கு சுமார் 23 ரூபா 50 சதம் செலவாகின்ற போதிலும் சுமார் பத்து இலட்சம் பாவனையாளர் களிடமிருந்து ஒரு அலகுக்கு 3 ரூபாவையே அறவிடுகின் றோமென மின்சக்தி எரி பொருள் துறை அமைச்சர் திருமதி பவித்ரா வன்னி யாராச்சி தெரிவித்தார்.

நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து அனுராதபுரம் மாவட்டத்திற்கு மின்சாரத்தினை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் புத்தளம் களப்பின் ஊடாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பிகள் இணைக்கப்படவுள்ளன. இதனால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்னாண்டோ தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பவித்ரா மேலும் கூறியதாவது:-

மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நுரைச்சோலையில் அமைக்கப்பட்ட அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது கட்டட நிர்மாணப் பணிகள் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.

அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை இவ்வருடத்தினுள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு நிர்மாணப்பணிகள் முடிவடையும் போது மின்சாரத்தினைக் குறைந்த விலையில் விநியோகிக்க முடியும். தற்போது மின் விநியோகத்தில் பாரிய நஷ்டத்தை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. ஒரு அலகு மின் உற்பத்திக்கு 23 ரூபாய் 50 சதம் செலவாகின்றது. எனினும் முதல் 30 அலகு மின்சாரத்தைப் பயன்படுத்தும் சுமார் பத்து இலட்சம் பாவனையாளர்களி டமிருந்து அலகொன்றுக்கு 3 ரூபாவும், 60 அலகு வரை பாவிக்கும் சுமார் பத்து இலட்சம் பாவனையாளர்களிட மிருந்து ஒரு அலகுக்கு 4 ரூபாவும், 90 அலகுகள் வரைப் பாவிக்கும் பாவனையாளர்களிடமிருந்து ஒரு அலகுக்கு 5 ரூபாவுமாகவே நாம் அறவிடுகின்றோம். இந்த நட்டத்தை ஈடு செய்ய அரசாங்கத்தின் வருமானதில் பாரியளவிலான தொகையினை செலவிட வேண்டியுள்ளது. இந்த நட்டத்தை நிறுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மின்சாரத்தினை கொண்டு செல்வதில் புத்தளம் மீனவர்கள் காட்டும் எதிர்ப்பில் நியாயமுள்ளது.

எனினும் நாம் மாற்று வழிகளை செய்வதற்கு முயற்சித்தோம். ஆனால் அவைகள் சாத்தியமற்றதாகவே உள்ளன. நாம் இனங்கண்ட மாற்று வழிகள் வேறு பல பிரச்சினைகளுக்கு வழி வகுப்பதாய் உள்ளன.

எனவே நாட்டின் நலன்கருதி இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியுள்ளது. எனினும் இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு இது தொடர்பான அறிக்கையினை எனக்குச் சமர்ப்பித்தால் அதற்கு வேண்டிய வழிகளையும் நிதி இதுக்கீடுகளையும் என்னால் செய்து தர முடியும் என்றார்.

இவ்வாறு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, புத்தளம் நகர பிதா கே. ஏ. பாயிஸ் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் எண்டனி பெரேரா வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என். டி. எம். தாஹிர், ஏ. எச். எம். றியாஸ், சிந்தக மயாதுன்ன, புத்தளம் நகர பிதா கே. ஏ. பாயிஸ், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம். எச். எம். மின்ஹாஜ், புத்தளம் பிரதேச சபை தலைவர் திலுக் பத்திரண, பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் உட்பட மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் புத்தளம் பிரதேச மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் இங்கு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி