ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

முதலிய, ஆகிய, போன்ற...சொற்களின் சரியான பிரயோகம்

முதலிய, ஆகிய, போன்ற...சொற்களின் சரியான பிரயோகம்

மேலே உள்ள மூன்றும் எல்லோராலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாகும். இவை மூன்றும் பொருள் வேறுபாடற்றவை போலவும், ஏறத்தாழ ஒரே பொருளுடைய மாறுபாடற்ற சொற்கள் போலவும் பலருக்குத் தோன்றும். அதனால்தான் இச் சொற்களைப் பலரும் தவறாகவே ஆள்கின்றனர்.

""சேரன், சோழன், பாண்டியன் முதலிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர். இத்தொடர் சரியானது அன்று. இவை முறையே, ""சேரன், சோழன், பாண்டியன் ஆகிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர் என்று இருப்பதே பொருத்தமாகும். இப்போது இம் மூன்று சொற்களுக்கும் இடையிலுள்ள நுட்பமான வேறுபாடு இதைப் படிப்போர்க்கு விளங்கியிருக்கும்.

"முதலிய' என்னும் சொல், முதலாக உடைய அல்லது முதலாவதாக உள்ள என்பன போன்ற பொருள் உள்ள சொல்லாகும். பலவற்றை வரிசையாகச் சொல்ல நேரும்போது எல்லாவற்றையும் சொல்லாமல் அவற்றில் முதலிலுள்ள ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றைச் சொல்லாமல் குறிப்பிடுகின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

"கலைஞர் குறளோவியம் முதலிய இலக்கியங்களைப் படைத்துள்ளார்' என்று சொல்லுவதே சரி. கலைஞர் ஏராளமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். அவற்றை எல்லாம் இங்கே விரிவாக எழுத முடியவில்லை. ஆகவே, அவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தி அத் தகவலை நாம் தந்துவிடுகிறோம். எனவே, பலவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டு வேந்தர்கள் மூவர்தாம். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் என்போராவர். மூன்று பேர் உள்ள வரிசையில் மூவரையும் சொல்லிவிட்டுப் பிறகு "முதலிய' என்னும் சொல்லையும் பயன்படுத்தினால், வேறு சிலரையும் அங்குக் குறிப்பிட வேண்டும். அங்குக் குறிப்பிடத்தக்கார் அம்மூவரை அன்றிப் பிறர் இல்லாத காரணத்தால் அது தவறாகும். ஆகவே, அத்தகைய இடங்களில், சொல்ல வேண்டிய - எல்லாவற்றையும் குறிப்பிட வேண்டிய இடங்களில் ஆகிய, ஆகியவை என்பன போன்ற வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒன்றை மட்டும் சொல்லாமலும், எல்லாவற்றையும் சொல்லாமலும் சிலவற்றை மட்டும் சொல்கின்ற இடங்களில் "போன்ற' என்னும் சொல்லையும் அதன் பிற வடிவங்களையும் பயன்படுத்தலாம்.

சான்றாகக் "கலைஞர் பராசக்தி, மந்திரி குமாரி, நீதிக்குத் தண்டனை, பாசப் பறவைகள் போன்ற திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார்' என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி