ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153
 

திரு இருதய பக்தியில் ஆன்மீகம்

திரு இருதய பக்தியில் ஆன்மீகம்

ஜூன் மாதம் திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம்

நமது குடும்பங்களை திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுப்போம். இல்லங்கள் தோறும் திரு இருதயப் படம் நிறுவி கூடி செபிப்போம். திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்று தகுந்த முறையில் நற்கருணை பெறுவோம்.

முதல் வெள்ளி பக்தி முயற்சிகளை தவறாது அனுசரிப்போம் திரு இருதய பக்தி முயற்சிகளை கடைப்பிடிப்போருக்கு பன்னிரெண்டு அருள் வரங்கள் அளிப்பதாக மார்க்கரீத் அண்ணைக்கு வாக்குறுதி தந்த அன்பு ஆண்டவர் நமது குடும்பங்களை ஆசீர்வாதங்களால் நிரப்புவார். இனி நாம் திரு இருதயப் பக்தியின் ஆன்மீகம் பற்றி சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.

இக்காலத்தில் பழைய பக்தி முயற்சிகளைப் பலர் கைவிட்டுள்ளனர். அவ்வளவு அர்த்தமுள்ளதாக விளங்குவதில்லை என்கின்றனர். அத்தோடு அருங்கொடை இறக்கத்தின் வளர்ச்சியில் விவிலியமும் குணமளிக்கும் சாட்சியங்களும் மக்களை கவர்ந்துள்ளன.

மேலும் இன்றைய சமூக விளிப்புணர்வால் தூண்டப்பட்டு சேவை மனப்பான்மை வளர்ந்திட ஆன்மீகம் உந்து சக்தியாக இருக்க வேண்டுமென்ற புதிய ஆன்மீகமும் உருவாகியுள்ளது. இந்நிலையில் திரு இருதயப் பக்தியை போன நூற்றாண்டு பக்தி முயற்சி என்று மட்டும் கருதிவிட முடியாது. இருபதாம் நூற்றாண்டின் இறையியல் ஆசிரியர் கார்ல் ராணர் இப்பக்தியின் உள்ளார்ந்த அர்த்ங்களை விளக்கியுள்ளார்.

நம் வாழ்வில் அடையாளங்களும் சின்னங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. வாழ்வின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தவும் முக்கிய நிகழ்வுகளை கொண்டாடவும் அடையாளங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. பயன்படுத்தப்படுகின்றன, வாழ்வை வளமாக்குகின்றன. அடையாளங்களில் பல வகை உண்டு. அவைகளில் மனித இயல்போடும், பண்பாட்டோடும் கலந்து உயிரோட்டம் அளிக்கும் அடையாளங்களில் முக்கியமானது அன்பை குறித்துக் காட்டும் சின்னங்கள் ஆகும்.

எல்லா மக்கள் மத்தியிலும் மனித அன்பை குறித்துக் காட்டும் அடையாளம் இதயம். இதயத்தை குறிப்பாக பாசத்திற்கும் காதலுக்கும் ஆழ்ந்த நட்புறவிற்கும் அடையாளப்படுத்துகின்றோம். நம்மானிட முறையிலே தெய்வீக அன்பை குறித்துக்காட்டும் வகையில் இயேசுவின் இதயத்தை காண்கிறோம். சிறப்பாக சிலுவையில் குத்தித் திறக்கப்பட்ட இதயம் இறை அன்பை வெளிப்படுத்தும் அருட் சின்னமாக விளங்குகிறது.

திருச்சபை வரலாற்றில் இச்சின்னம் பற்றிய ஆழ்ந்த மறைவிளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித மார்கரெட் மரியா என்னும் சசோதரிக்கு இயேசுவின் இதயக் காட்சி கிடைத்தது.

இச்சகோதரியின் சாட்சியம் திரு இருதயப் பக்தியை வளர்ப்பதற்கு ஒரு உந்துதலாக இருந்துள்ளது. இன்று இந்த இயேசுவின் இதய பக்தியை எவ்விதம் புரிந்து கொள்வது? விவிலியப் பின்னணியில் இதயம் ஒரு ஆளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆழ்ந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் குறிக்கிறது. வாழ்வில் கொண்டுள்ள ஆழ்ந்த பற்றுதலைக் குறிக்கிறது.

இந்த விவிலியப் பார்வையில் இதய பக்தி இயேசுவோடு கொண்டுள்ள ஆழ்ந்த உறவைச் சுட்டிக்காட்டுவதாக விளங்க வேண்டும். இத்தகைய ஆழ்ந்த உறவிலே மூன்று அம்சங்கள் முக்கியம்.

1. அனுபவ அறிவு (2) உறுதியான பற்றுதல் (3) நெருக்கமாக பின்பற்றுதல். இவ்விதம் இதய பக்தி இயேசுவைப் பற்றி உள்ளார்ந்த விதமாக அறியவும் சிக்கென பற்றிக்கொள்ளவும் அவரைப் போல் வாழவும் அழைக்கிறது. இயேசுவை உள்ளூர அறிந்து கொள்ள நமக்கு வழி என்ன? நற்செய்தியை இதயப் பற்றுதலோடு தியானிப்பது சிறந்த வழியாகும்.

இயேசுவை சிக்கெனப் பற்றிக்கொள்ள எளிய வழி என்ன? நம்மையே நம் உடல், உள்ளம் ஆன்மாவை இயேசுவின் கரங்களில் ஒப்படைத்து அவர் அன்பை மட்டுமே அதிகம் தேடுவது அரிய வழியாகும்.

இயேசுவை நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு ஏற்ற வழி என்ன? “சிலுவையைச் சுமந்து என்னைப் பின் செல்” (மாற் 8:34) “நான் அன்பு செய்தது போல் அன்பு செய்யுங்கள்” (யோவா 15:12) “நான் செய்தது போல் ஒருவருக்கொருவர் செய்யுங்கள் (யோவா 13:14) என்றெல்லாம் இயேசுவே வழிகாட்டியிருக்கின்றார்.

சிறப்பாக அவரிடமிருந்து ஒன்றைக் கற்றுக்கொள்ள அழைப்பு விடுகின்றார். அதுவும் தம் இதயம் போல் இருப்பதற்கு ஒரு வழி காட்டியிருக்கின்றார். அதுவே நமக்கு இதய பக்தியின் இரகசியம் எனலாம்.

“நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத் 11:29) எனவே இதய பக்தியின் சவால் இதுதான். இதயத்தில் கனிவாகவும் மனத்தாழ்மையோடும் வாழ்வதே இதய பக்தி விடுக்கும் அன்றாட அறை கூவர்.

இன்று மக்கள் வாழ்வில் வியாபாரப் பண்பாடும் விளம்பரக் கலாசாரமுமமே மக்கள் இதயத்தை பணப்பற்றுதலால் கடினமாக்கிவிட்டது. எனவே கனிவான உள்ளங்களைக் காண்பது அரிதாகி விட்டது. அது போலவே ஆணவமும் அதிகாரமும் நிறை சமுதாயத்தில் உயர்வு தாழ்வு பெருகிவிட்டதால் எல்லோரையும் சமமாகக் கருதுவதும் பிரிவுடன் பழகுவதும் குறைந்துவிட்டது.

எனவே இன்று அதிகம் தேவைப்படும் இரு உளப்பண்புகள் பிறர் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்ளும் இளகிய இதயம் எல்லோரையும் சமமாகக்காணும் பண்பான இதயம். இந்தப் பண்புகளை வளர்ப்பதுதான் இயேசுவின் இதயப் பக்தி நமக்கு அளிக்கும் அருள்.

இந்த அருள்தான் இயேசுவின் அன்பைப் பருகிடும் பயனாக விளைகிறது. ஆக இயேசுவின் இதய பக்தி நம் இதயங்களைக் கனிய வைத்து நம் உள்ளங்களை பக்குவப்படுத்தும் மார்க்கமாக விளங்கி நம் வாழ்வை வழி நடத்துவதாக.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி