ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153
 

உள்ளத்தில் உறையும் இறைவனுடன் அனுதினம் உரையாடுவோம்!

திவ்விய நற்கருணைப் பெருவிழா

உள்ளத்தில் உறையும் இறைவனுடன்
அனுதினம் உரையாடுவோம்!

கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் நற்கருணை ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மறை மாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்களிலும் திவ்விய நற்கருணைப் பெருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் திவ்விய நற்கருணைப் பெருவிழா கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தவத்தில் நடைபெற்றது. பெரு விழாவின் ஒரு அம்சமாக மாபெரும் நற்கருணைப் பவனி புனித அந்தோணியார் திருத்தலத்தில் இருந்து கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயம் வரை இடம்பெற்றது. நற்கருணையின் உன்னதம் குறித்த இக்கட்டுரை இதனையொட்டி பிரசுரமாகிறது.

நாம் உண்ணும் உணவு நமது உடலில் சேர்வதுபோல் இயேசு என்னும் அப்பத்தை (திவ்விய நற்கருணை) உண்ணும் போது இயேசுவைச் சொந்தமாக்க இயலும். திவ்விய நற்கருணை இயேசுவின் உயிருள்ள உடல் என்பதுதான் நமது நம்பிக்கை.

லூக் 24:13-35 ல் நாம் எம்மாவு செல்லும் சீடர்களைக் குறித்து வாசிக்கின்றோம். எம்மாவு என்ற ஊரில் இயேசு சீடரோடு பந்தியில் அமர்ந்திருந்த போது அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். (லூக் 24:30-31) தகுதியுள்ள நிலையில் திவ்விய நற்கருணை வாங்கினால் நமக்கும் இதே எம்மாவு அனுபவம் கிடைக்கும். இது அல்லவா கிடைத்தற்கரிய நற்பேறு.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு 40 நாள் நீடரோடு இருந்தார். அவர்களுக்குக் கற்பித்தார். கட்டளையும் கொடுத்தார். இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது பல மாற்றங்களும் நிகழ்கின்றன. நெருப்பில் இட்ட கரி பற்றி எரிகிறது.

அதுவும் தீக்கனலாகின்றது. நீண்ட நேரம் இரும்பைக் காந்தத்தோடு வைத்தால் இரும்புக்கும் காந்தத் தன்மை கிடைக்கின்றது. அதைப்போன்று எவ்வளவு கொடிய பாவிகளாக இருந்தாலும் தகுதியோடு திவ்விய நற்கருணையைப் பெற்றால் ஆன்மாவில் மாற்றங்கள் வரும்.

லூக் 7:36-50 ல் பாவியான பெண்ணைப் பற்றி வாசிக்கின்றோம். அவர் தம் கண்ணீரால் இயேசுவின் காலடிகளை நனைத்து தம் கூந்தலால் அதைத் துடைத்து நறுமணத் தைலம் பூசினார்.

அப்பெண் பாவ மன்னிப்புப் பெறுகிறார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக் கூறப்படும். இவரும் நினைவு கூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். லூக் 19:1-10 ல் இயேசுவின் பிரசன்னத்தால் வரி தண்டுபவராக இருந்த சக்கேயு மனம் திரும்புகின்றார்.

சமாரியப் பெண் இயேசுவுக்குச் சாட்சியான நிகழ்வு யோவான் நற்செய்தியில் இடம் பெறுகின்றது. (4:41-42). யோவா 11 ஆம் அதிகாரத்தில் இறந்த இலாசரை இயேசு உயிர்த்தெழச் செய்கிறார். அதுவும் இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாள் ஆன பிறகு! இவை அனைத்தும் தகுதியுடைய நிலையில் இயேசுவைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் மாற்றங்களைத்தான் அறிவுறுத்துகின்றன.

ஆண்டவரின் மேலுடையின் ஓரத்தை விசுவாசத்தோடு தொட்ட இரத்தப் போக்குடைய பெண் நலம் பெற்றார் (லூக் 8:43- 48). நெருக்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் எத்தனையோ பேர் இயேசுவைத் தொட்டிருப்பார்கள். ஆனால் அந்தப் பெண் ஒருவர் மட்டும்தான் விசுவாசத்தோடு தொட்டிருப்பார்.

அதனால்தான் புதுமை நடந்தது. அன்று கடைசி இராவுணவின் போது தகுதியற்ற நிலையில் அப்பத்தைப் பெற்ற யூதாசு இஸ் காரியயோத்து அருளின் அப்பத்தையல்ல, சாபனையின் அப்பத்தைத்தான் பெற்றான். இயேசு தூயவர். அதனால் திவ்விய நற்கருணையைப் பெறும் போது நாமும் தூய நிலையில் இருக்க வேண்டும். ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்ற பின்னர்தான் திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் மீட்பாக அமையும்.

எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும் (1 கொரி 11: 27-28).

தாழ்ச்சி நிறைந்த உள்ளம் மிக மிக அவசியம். ஏனென்றால் இறைவன் முன் நாம் வெறும் தூசு. எனவே திவ்விய நற்கருணையைப் பெறுவதற்கு முன்நூற்றுவர் தலைவர் பணிவோடு சொன்னது போல் நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.

உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை (லூக் 7:7) என்று நாம் சொல்ல வேண்டும். திவ்விய நற்கருணையைப் பெற்றுக்கொண்டபின் இறைத் துதி செய்ய வேண்டும், இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். இறை அன்பால் இயேசு நம்மிடம் வருகிறார். அதற்குப் பதில் அன்பாக அவருக்கு வருத்தம் தரும் எதையும் செய்ய மாட்டேன் என்ற உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்.

உலகு சார்ந்த நமது தேவைகளுக்காக வேண்டுதல் செய்யாமல் ஆன்ம நலனுக்கான காரியங்களைப் பற்றியே வேண்டுதல் செய்ய வேண்டும். அதாவது உள்ளத்தில் வாசம்புரியும் ஆண்டவரோடு உரையாட வேண்டும். (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி