ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153
 
முயன்றால் எதுவும் முடியும் முன்னேற்றம் விரைவில் தெரியும்

முயன்றால் எதுவும் முடியும் முன்னேற்றம் விரைவில் தெரியும்

நல்ல விடயங்களைத் தெரிந்து கொள்வதற்கு மனதை எப்போதும் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். புதிய புதிய கருத்துகள் மனதினுள் நுழையும் போதுதான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. புதிய சிந்தனைகளைச் செயலாக்கும் போதுதான் புதிய முன்னேற்றமும் வாழ்க்கையில் வளர்ச்சியும் ஏற்படுகின்றது. புதிய தளிர்கள் தான் ஒரு செடியை வளர்ச்சியடையச் செய்கின்றது. அதுபோல் புதிய கருத்துகள் தான் ஒருவரை புதிய செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

மனம் எப்பொழுதும் விழிப் புணர்வுடன் இருக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும். அதற்கு நாம் எதைச் செய்கின்றோமோ அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஏனென்றால், கவனமில்லாமல் ஒன்றைச் செய்யும் போது அதில் முழு வெற்றி கிடைக்காது.

அவ்வாறு வெற்றி கிடைக்காத சமயங்களில் மனச்சோர்வும் விரக்தியும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே எதைச் செய்தாலும் அதில் நம்மைக்கரைத்துக்கொண்டு நம்முடைய திறமைகளையும் தனித்தன்மைகளையும் வெளிக்காட்ட முயல வேண்டும்.

மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக புதுமையாக சிந்திப்பது என்பது வெற்றிக்கு வழிகாட்டும். சகோதர - சகோதரிகளே என்று வித்தியாசமாய் பேச்சைத் தொடங்கியதால் தான் விவேகானந்தர் கவனிக்கப்பட்டார். எங்கும் எப்போதும் தனித்தன்மையாக இருக்க வேண்டும்.

தடம் பதித்து நடக்க விரும்புபவர்கள் ஒரு இலட்சியத்தை வரையறுத் துக்கொள்ள வேண்டும். அதை நோக்கியே தன் பயணத்தை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். நம் இலக்கை நோக்கிய பயணத்தில் வரும் இடையூறுகளைப் பொருட் படுத்தாமல் தொட வேண்டிய சிகரத்தைத் தொட்டே தீருவது என்பதில் பின்வாங்கக் கூடாது.

இந்தத் துறையில் என் பெயர் பதிக் கப்பட வேண்டும் என்ற திடமான முடிவுக்கு வரவேண்டும். அது ஒன்றும் தற்பெருமையல்ல அது தன்னை அடையாளப்படுத்தும் முயற்சியே.

இந்தியத் திருநாட்டின் இளைஞர்க ளின் எழுச்சி நாயகனாக இன்றும் திகழ்ந்துகொண்டு இருப்பவர் போற்றுதலுக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள். விண்வெளித் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது சிறு வயது கனவு. அந்தக் கனவை நனவாக்கிக் காட்டியவர்.

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளைப் புரிந்துகொண்டு அதில் கைதேர்ந்தவராகி விட வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார்.

"மனவெளியில் கனவுகளின் ஆட்சி முயற்சிகளில் செயல் முடிக்கும் எழுச்சி தினந்தோறும் முன்னேற்றத்தின் தொடர்ச்சி முடிக்கின்றசெயல்களே வெற்றியின் வளர்ச்சி"

தோல்வியின் பாடங்கள்

தோல்வி என்பது ஒரு முடிவல்ல. அது ஒரு திருப்புமுனை; வெற்றி நம்மை வெளி உலகிற்குக் காட்டுகின் றது. தோல்விதான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகிறது. மேலும் வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளைவிட, தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு அதிகம்.

எடுக்கின்ற முயற்சிகள் அத்தனையும் வெற்றியடைய வேண்டும் என்று எப்போழுதும் எதிர்பார்க்கக்கூடாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். ஆகவே முடிவு எதுவாயினும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில முயற்சிகள் வெற்றியடையும் பல முயற்சிகளில் வெற்றி கிடைக்காமல் போய்விடும் அதுதான் இயற்கை.

ஒரு பெரிய மாமரத்தை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனை ஆயிரம் பூக்கள் பூக்கிறது. அத்தனைப் பூக்களும் கனியாக மாறுவதில்லை. அதுபோலதான் நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியடை யாது. அதற்காக நாம் முயலாமல் இருந்துவிடக்கூடாது.

முயன்று கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நம் விலாசம் தேடிவரும் நாள் வரும். அது நாளையே வரும் ஆகவே, வெற்றியை எதிர்நோக்கிச் செயல்பட்டாலும் தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு முயற்சி செய்ய வேண்டும்.

குப்பை விடயங்கள் குறித்து எப்பொழுதும் சிந்திக்கக் கூடாது. அதாவது எதிர்மறையானவற்றை எண்ணும்போது மனதில் உள்ள ஆற்றல் குறைவதோடு வாழ்க்கையின் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஏற்ற சூழ்நிலையை அமைத்துக் கொள்ள மனதால் முயலவேண்டும். முடியாவிட்டால் எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனதை உருவாக்க வேண்டும்.

முயற்சியே நிலையானது அதுதான் முடிவுகளை நிர்ணயிப்பது என்பதை உள்ளத்தில் உறுதியாக எழுதிக் கொள்வதோடு அதை அடிக்கடி எண்ணிப்பார்க்க வேண்டும். எந்தப் பிரச்சினையையும் சவாலாக ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் அதில் வெற்றி காண முயற்சி செய்ய வேண்டும். பிரச்சினைகள் ஏற்படும்போது, மற்றவர்களின் உதவியையும், ஆலோசனைகளையும் நாடுவதற்கு முன்னர் நாமாகவே குறைந்தபட்சம் இரு தீர்வுகளையாவது யோசனை செய்ய வேண்டும்.

"முயன்றால் எதுவும் முடியும்

முன்னேற்றம் விரைவில் தெரிவும்

சிந்தித்துப் பார்த்தால் புரியும்

சிகரங்கள் தொட்டிட முடியும்"

தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முதற்படி வெற்றி என்னும் சிகரத்துக்கு ஆதாரமாக இருப்பவை இலட்சியம், முயற்சி, கடின உழைப்பு வெற்றிக்கு முயற்சி தான் மூலதனம் முயற்சிக்கு அடிப்படை தன்னம்பிக்கை! எல்லோரும் மனிதர்கள்தான். ஆனால் தடம் பதித்து நடப்பவர்கள்தான், மாமனிதர்கள்! நாளை நாமும் நினைத்தால் மாமனிதர்கள் ஆகலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி