ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153
 

லோக்பால் வரம்பில் பிரதமரை உட்படுத்த விரும்பாத கட்சிகளை எதிர்ப்போம்!

லோக்பால் வரம்பில் பிரதமரை உட்படுத்த
விரும்பாத கட்சிகளை எதிர்ப்போம்!

அன்னாஹசாரே கடுமையான நிலைப்பாடு

லோக்பால் வரம்பில் பிரதமரை உள்படுத்தும் விடயத்தில் தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தராதவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களையும் எதிர்க்கத் தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே செவ்வாய்க்கிழமை கூறினார்.

லோக்பால் வரைவு மசோதா குறித்து அன்னா ஹசாரே மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை வலியுறுத்தும் பொருட்டு எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றனர்.

அதேசமயம், பிரதமரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரத் தேவையில்லை என்று பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா உட்பட பலர் லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை உட்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புணே நகர செய்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் அன்னா ஹசாரே செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசினார். அப்போது லோக்பால் மசோதாவின் வரைவுக்குழுவில் உள்ள சமூக ஆர்வலர்களின் நிலைப்பாடுகள் சிலவற்றுக்கு எதிர்க்கட்சிகள் இடையே கூட எதிர்ப்பு இருப்பதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அன்னா ஹசாரே பதிலளிக்கை யில், வலிமையான லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகத்தான் போராடி வருகிறோம். இதன் விசாரணை வரம்புக்குள் பிரதமர் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எங்களுடைய முக்கியமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தராதவர்கள் எதிர்க் கட்சிகளாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது போலவே அவர்களையும் எதிர்க்கத் தயாராக உள்ளோம் என்றார்.

வலிமையான லோக்பால் சட்டம் வருவதற்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று அவர் கூறினார். “லோக்பால் மசோதாவைக் கண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பயமா” என்று செய்தியாளர்கள் ஹசாரேயிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,

“மன்மோகன் சிங்குக்கு லோக்பால் சட்டம் வருவது குறித்து பயமில்லை. ஆனால் அவரை இயக்குவதற்கு ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது” என்று கூறினார்.

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து லோக்பால் மசோதா குறித்து விவாதம் நடத்துவோம். இது தொடர்பாக சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசுவோம் என்றார் அவர். உங்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீங்கள் சோனியாவை சந்திக்க வேண்டிய தேவை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அனைத்து தரப்பினரையும் ஒரு விவாதத்தில் உட்படுத்தச் செய்வதுதான் ஜனநாயகக் கொள்கை” என்றார் அவர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி