ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153
 

யாழ் தென்னிந்திய திருச்சபையின் மக்கள் பேராயர் அதிவண. கலாநிதி டி.ஜே. அம்பலவாணர் அடிகளார்

யாழ் தென்னிந்திய திருச்சபையின் மக்கள் பேராயர்
அதிவண. கலாநிதி டி.ஜே. அம்பலவாணர் அடிகளார்

40வது அபிஷேக நினைவு தினம் இன்று

யாழ். தமிழ் மக்களிடையே அன்பும் அமைதியும் நிலவிய காலமது. இன, மத பேதமற்ற இரவு, பகல் பொழுதறியா பசுமையான நாட்களில் ஒன்று.

1971 ஆம் ஆண்டு யூன் மாதத்தின் இறுதி நாள். யாழ்ப்பாணக் கிறிஸ்தவ சமூகத்தினரிடையே என்றுமிலாப் பெருமிதமும், புத்துணர்வும், புதுப்பொழிவும், ஆரவாரமும் கொண்ட காட்சியது.

ஆம்! அன்றுதான் யாழ் தென் இந்திய திருச்சபை, தனது இரண்டாவது பேராயராகத் தேர்ந்தெடுத்த வணக்கத்துக்குரிய டேவிட் ஜெயரட்ணம் அம்பலவாணர் (ஜெயம்) அவர்களைத் தன் சொந்த மண்ணிலே, இந்திய, இலங்கை பேராயர்கள், குருமார், மக்கள் எனப் பலர் புடைசூழ பேராயராக அபிஷேகம் செய்து களிகூர்ந்த தினம்.

அத்தினம் 40 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசுமையாக, இனிமையாக எண்ணுக்கடங்காதோரின் இதயத்தில் நிலை கொண்டுள்ளதென்றால், அப்பேராயரை அன்றில் இருந்து அவரின் ஆழமான அன்பினை தூரப்பார்வையூடான சிந்தனையினை வழி நடத்தும் ஆளுமையினை, தேவநற் சாட்சியின் ஒப்புதலை, வாழ்வின் விழுமியங்களை தர்க்கரீதியாக சகலரும் உணர்ந்து சுதந்திரத்தோடு வாழ வேண்டுமென்ற அவரின் வேண்டுதலை வெளிப்படுத்த அத்திவாரம் இடப்பட்ட ஓர் அற்புத நாள்.

புங்குடு தீவினைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்திரு ஜே.பி. அம்பலவாணர், அன்னம்மா தம்பதிகள் இந்திய ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ‘எல்லூர்’ இல் கிறிஸ்தவ மதப் பிரசாரகராக சேவையாற்றிய போது ஐந்து பிள்ளைகளில் இரண்டாவது மகனாக 1928 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதியன்று ஜெயம் அவர்கள் உதயமானார்.

வண. டீ. ஆர். அம்பலவாணர், வண. தர்மர் அம்பலவாணர், திரு பாலன் அம்பலவானர், திருமதி அதிசயம் முத்தையா ஆகியோர் அவரின் சகோதரர்கள். 1932ல் தந்தையாரின் சேவைக்காலம் நிறைவு பெற தம் சொந்த மண்ணிற்கே திரும்பினர்.

மகளார் ஜெயம் அவர்கள் வண கென்றி பீற்ரோ அதிபராக இருந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியினை ஆரம்பித்தார். சில வருடங்களின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மேல் வகுப்பினைத் தொடர்ந்தார். அப்போது கல்லூரியின் அதிபராக வண.

சிட்னி கே. பங்கர் அவர்கள் கடமையில் இருந்தார். தந்தையார், வட்டுக்கோட்டைச் சபையின் ஊழியரான வண. சபாபதி குலேந்திரன் அவர்களின் உதவிக் குருவாகப் பணிபுரிந்த வேளையில் இறைவனடி சேர, குடும்பத்தை இயக்கும் பாரிய பொறுப்பு மூத்த ஆண்பிள்ளைகள் மேல் இருப்பதை இருவருமே உணர்ந்து செயலாற்ற வேண்டியிருந்தது.

இரண்டாம் உலகப் போரின் வெற்றி தோல்வியற்ற நிலையும், மேற்குலக, நாடுகளின் ஆதிக்க வல்லமையும், காலனித்துவ ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கான உச்ச நிலை எதிர்ப்பலைகளும், சமதர்மத்தை நாடும் மூன்றாம் உலக நாடுகளின் புதிய சோஷலிச அரசியல் சித்தாந்தங்களும் இளைய தலைமுறையினரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருந்தன.

இந்நிலமைக்குள் சிக்கிக்கொண்ட கிறிஸ்தவ இளைய தலைமுறையினரும் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக அங்கலாய்த்தனர்.

“உயர்ந்த இலட்சியங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டுமென்ற அமெரிக்கர்களின் போக்கையும், நடைமுறை சாத்தியத்தில் உண்மைக்குப் புறம்பாக இரட்டை வேடமிட்டு செயற்பட முடியாதென்கின்ற பிரித்தானியக் கொள்கையையும் கலந்த ஒரு வடிவமாக” யாழ்ப்பாணக் கல்லூரி காட்சியளித்த அவ்வேளையில் தென் இந்தியத் திருச்சபை உருவாகியது.

இதன் முதலாவது பேராயராக தென் இந்திய ஐக்கிய சபையின் தலைவரான வண. கலாநிதி சபாபதி குலேந்திரன் அவர்கள் இந்தியாவில் யாழ்ப்பாணப் பேராயராக அபிஷேகம் செய்யப்பட்டார்.

அமெரிக்க மிஷனரிமார்களின் கைகளில் இருந்த பொறுப்புக்கள் யாவும் உள்ளூர் மக்கள் வசமாயிற்று. அதன் அடிப்ப டையில் திருச்சபையில் ஏற்பட்ட மாற்றங் களும், தேவைகளும், உள்நாட்டரசியல் மாற்றங்களுமே ஜெயம் அவர்களின் ‘எதிர்கால வாழ்வின் நிச்சயங்களுக்கு’ கருவமைத்துக் கொடுக்க அவரில் அதிதூர பார்வை நோக்கலும் அதற்கான எதிர்பார்ப்புகளும் முனைப்புகளும் மனதில் குடிகொண்டன.

பேராயரின் சமகால நெருங்கிய கல்லூரி மாணவரும், பேராசிரியருமான கலாநிதி ஏனஸ்ற் எச். சம்பியன் அவர்கள் குறிப்பிட்டதை இங்கு குறிப்பிடவேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி