ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

திரிபோலியில் பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கேட்டது நேட்டோ

திரிபோலியில் பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கேட்டது நேட்டோ

கிளர்ச்சிப்படை மீதும் தவறுதலான தாக்குதல்

லிபிய தலைநகர் திரிபோலியின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக தாக்குதல் இடம்பெற்றதாக நேட்டோ படை ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் அந்த தாக்குதலுக்காக அது மன்னிப்புக் கோரியுள்ளது.

திரிபோலியின் சுக் அல் ஜுமா குடியிருப்பு பகுதியில் நேட்டோ படை நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதலில் 3 அடுக்கு குடியிருப்பு சேதமடைந்தது. இதனால் குழந்தைகள் உட்பட 5 சிவிலியன்கள் செல்லப்பட்டுள்ளனர். இந்த கட்டடத்தில் தாக்குதலின்போது 6 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன.

இந்நிலையில் இந்த தாக்குதல் குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை நேட்டோ படை ஒப்புக்கொண்டுள்ளது. தாக்குதல் இலக்குக்கான ஏவுகணை அமைப்பை தயார் செய்வதில் ஏற்பட்டுள்ள தவறே இதற்கு காரணம் என நேட்டோ கூறியுள்ளது.

நேட்டோ படையால் பொது மக்கள் கொல்லப்பட்டது கவலை அளிக்கும் சம்பவம் என கூறியுள்ள அதன் பேச்சாளர் ஒவானா லுன்கஸ்கு இந்த சம்பவத்துக்காக வருந்துகிறோம் என குறிப்பிட்டார்.

இதேவேளை, லிபியா மீதான நேட்டோ படை தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட மார்ச் மாதம் தொடக்கம் இதுவரை 856 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக லிபிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, திரிபோலி மீதான தாக்குதலுக்கு முன்னதாக நேட்டோ படை எண்ணெய் நகரான பிரெகாவிலும் தவறுதலான தாக்குதலை நடத்தியுள்ளது. அங்கு பயணித்துக் கொண்டிருந்த கிளர்ச்சிப்படை வாகனம் ஒன்றின் மீது நேட்டோ வான் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இந்த தாக்குதலால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என நேட்டோ குறிப்பிட்டுள்ளது.

நேட்டோ லிபியாவில் தாக்குதலை மேற்கொள்வதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருகிறது. இங்கு கடாபி ஆதரவுப் படையோ பொது மக்களுடன் கலந்து தனது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கடாபி ஆதரவுப் படை சாதாரண வாகனங்களிலேயே தனது படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் நேட்டோ படை லிபியாவில் முகம்கொடுக்கும் சிரமத்தை தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என கிளர்ச்சிப்படையின் இராணுவ பேச்சாளர் அப்தெல் ரஹ்மான் அபு இன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளர்ச்சிப் படையின் நிர்வாகத்தை முன்னெடுக்க அவசர சர்வதேச நிதி உதவியை தேசிய மாற்று கெளன்ஸில் கோரியுள்ளது. சம்பளம் உட்பட இதர செலவீனங்களாக வரும் 6 மாதங்களுக்கு 3 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக அந்த கெளன்சில் கூறியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி