ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

பொருந்தா கூட்டணியை சரி செய்ய வேண்டும்

பொருந்தா கூட்டணியை சரி செய்ய வேண்டும்

தி.மு.க.வில் சலசலப்பு

உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளின் “பொருந்தா கூட்டணி” தொடரக் கூடாது என்றும், இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதால் ‘பலிக்கடா’ ஆகப்போவது யார்? என்ற கேள்வி தி.மு.க. கூட்டணியில் உருவாகியுள்ளது.

சட்டசபை தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் இலவச அறிவிப்புகள், வட மாவட்டத்தில் பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் புதிய கூட்டணியை நம்பி தி.மு.க. சட்டசபை தேர்தலை சந்தித்தது. ஆனால் தேர்தல் முடிவு தி.மு.க.வின் கணக்கை தவிடுபொடியாக்கும் வகையில் தலைகீழாக அமைந்தது.

பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள் கைகோர்த்துள்ளதால் 110 தொகுதிகளை கைப்பற்றுவோம் என அக்கட்சிகளின் தலைவர்கள் ராமதாஸ், திருமாவளவன் பேசி வந்தனர். கொங்கு மண்டலத்தில் கொங்கு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததால் அங்கும் தி.மு.க. கூட்டணி 20 தொகுதிகளை கைப்பற்றும் என தி.மு.க. நம்பியது.

அதுவும் கைகூடவில்லை. வட மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஐந்து தொகுதிகளில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஏறக்குறைய 60 தொகுதிகளில் தி.மு.க. மோசமாக தோல்வி அடைந்தது. தி.மு.க.வின் கோட்டை என கருதப்படும் வட மாவட்டங்களில் கோட்டை விடுவதற்கு காரணம், “பொருந்தா கூட்டணி” என தி.மு.க. வினர் வெளிப்படையாக விமர்சனம் செய்யத் துவங்கியுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றிருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்த சில மாதங்களில் ஆளுங்கட்சிக்கு மதிப்பீடு மார்க்குகளை பா.ம.க. குறிக்க ஆரம்பித்தது. சிறப்பு பொருளாதார மண்டலம், சென்னை துணை நகரம், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தியது.

கடந்த 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறி அ.தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. அணியில் சேர்ந்தது. தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு பாயும் பா.ம.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் அக்கட்சி போட்டியிட்ட ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம், வட மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி கணிசமாக வெற்றிபெற்றது.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் திருமாவளவனும் வெற்றி பெற்றார். பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து பா.ம.க.வின் செல்வாக்கு கூடியிருக்கிறது என தவறாக கணித்த தி.மு.க. தலைமை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளை வாரிக் கொடுத்தது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கும் 10 தொகுதிகளை அள்ளிக்கொடுத்தது. வட மாவட்டங்களில் வன்னியர்களும், தலித் சமுதாயத்தினரும் எதிரும், புதிரும் அரசியலை நடத்தி வருகின்றனர். திடீரென இந்த தேர்தலில் இரு சமுதாயத்தின் கட்சித் தலைவர்களும் இணைந்ததை மற்ற ஜாதியினர் மட்டுல்ல வன்னியர், தலித் சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பா.ம.கவும். விடுதலைச் சிறுத்தையும் ஒன்றாக இருந்ததால் தி.மு.க.வுக்கு வழக்கமாக விழ வேண்டிய அக்கட்சி ஓட்டுகளும் விழவில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி