வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

கானா அணி அசத்தல் வெற்றி ;

கானா அணி அசத்தல் வெற்றி ;
முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது

உலக கோப்பை உதைபந்து தொடரில், ஆபிரிக்க அணியான கானா அணி, அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக் கில் வீழ்த்தி, முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது. அமெரிக்க அணி பரிதாபமாக வெளியேறியது.

தென் ஆபிரிக்காவில் உலக கோப்பை உதைபந்து தொடரின், “ரவுண்டு- 16” சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதில் அமெரிக்கா- கானா அணிகள் மோதிய போட்டி ரஸ்டன்பார்க் நகரில் நடந்தது. இதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு செல்லும் நோக்கத்தில் இரு அணிகளும் துவக்கத்தில் இருந்தே கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின.

ஆட்டம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில், அமெரிக்க தற்காப்பு பகுதியில் திடீரென தனி ஆளாக நுழைந்த கானா வீரர் கெவில் பிரின்ஸ், 18 மீட்டர் தொலைவில் இருந்து பந்தை, கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்.

இது கோல் கீப்பரை ஏமாற்றி, “சூப்பர்” கோலாக மாறியது. பதிலுக்கு 23 வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டோனோவன் அடித்த பந்து வீணானது. இரு அணியினரும் மேலும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், முதல் பாதியில் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

வீணான போராட்டம்.

இரண்டாவது பாதி துவங்கியது (47 வது நிமிடம்) ஸ்கோரை சமன் செய்ய அமெரிக்க அணிக்கு கிடைத்த வாய்ப்பை, பெய்ஹபர் வீணாக்கினார். 53வது நிமிடத்தில் கானாவின் கியான், கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்து, வெளியே சென்றது.

பெரிய தவறு

இந்நிலையில் போட்டியின் 61வது நிமிடத்தில், தங்கள் கோல் ஏரியாவுக்குள் வைத்து அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சியை கானா வீரர் ஜோனாதன் பவுல் செய்து ‘மஞ்சள் அட்டை’ பெற்றார். இதனால் அமெரிக்காவுக்கு “பெனால்டி கிக்” வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை லண்டன் டோனவன் கோலாக மாற்ற, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. பின் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் ஆட்டநேரடி முடிவில் 1-1 என சமனாக இருந்தது.

கூடுதல் நேரம்

இதையடுத்து போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. இதன் முதன் பாதி ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே (93 வது நிமிடம்) கானாவின் கியான், அருமையான கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்திலும், கானா வீரர்களின் ஆதிக்கம் நீடித்தது எப்படியும் ஸ்கோரை சமன் செய்துவிட வேண்டும் என்ற போராடிய, அமெரிக்க வீரர்களின் போராட்டம் பலிக்கவில்லை. இறுதியில் கானா அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது. வரும் ஜூலை 2ம் திகதி நடக்கும் காலிறுதி போட்டியில் கானா அணி, உருகுவேயை எதிர்த்து விளை யாடுகிறது.

முதன் முறை

கடந்த 2006 உலக கோப்பை தொடரில் தான் ஆபிரிக்காவின் கானா அணி முதன் முறையாக பங்கேற்றது. இதில் “ரவுண்டு-16” சுற்றுடன் வெளியேறியது. தற்போது இரண்டாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற கானா அணி, முதன் முறையாக காலிறுதிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •