வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010


ஏகபோக வர்த்தகத்துக்கு இடமளிக்கலாகாது!

ஏகபோக வர்த்தகத்துக்கு இடமளிக்கலாகாது!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியில் தனியார் துறையினரின் ஏகபோகம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற அரிசி, பருப்பு, சீனி, கடலை, பயறு, கோதுமை, கெளபி, மாசி உட்பட ஏராளமான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பொருட்களை தனியார் துறையினரே வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியானது புறக்கோட்டை வர்த்தகர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்து வருவதாக அக்காலம் தொடக்கமே குறை கூறப்பட்டு வருகிறது. தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான விலையை அவ்வர்த்தகர்களே தீர்மானிப்பதாகவும் பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இவ்விவகாரமே பிரச்சினைக்குக் காரணமாகிறது. இறக்குமதியாளர்கள் தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை மொத்த வியாபாரிகளுக்கு விற்கின்றனர். அதன் பின்னர் மொத்த வியாபாரிகள் சற்றுக் கூடுதல் விலை வைத்து சில்லறை வியாபாரிகளுக்குப் பொருட்களை விற்கின்றனர். இறுதியில் சில்லறை வியாபாரிகள் மேலும் சற்று விலைவைத்து மக்களுக்குப் பொருட்களை விற்கின்றனர்.

இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என்ற படிகளைத் தாண்டி அத்தியாவசியப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடையும் போது மூன்று இடங்களில் பொருட்களுக்கு கூடுதல் விலைகள் வைக்கப்படுகின்றன. உற்பத்தியாளர்களால் விற்கப்படுகின்ற பொருட்கள் பாவனையாளர்களைச் சென்றடைகின்ற போது அவற்றின் விலைகள் இரு மடங்காக அதிகரிக்கும் நிலைமையும் ஏற்படுவதுண்டு.

ஒருசில இறக்குமதியாளர்களும், சில மொத்த வியாபாரிகளும், ஒரு தொகை சில்லறை வர்த்தகர்களும் பெருந்தொகைப் பணத்தை இலாபமாகப் பெறுகின்றனர். ஆனால் பல இலட்சக்கணக்கான பாவனையாளர்கள் வீணாக கூடுதல் விலையைக் கொடுத்து பொருட்களை வாங்கும் பரிதாபத்தில் உள்ளனர். வர்த்தகர்கள் கூடுதல் இலாபத்தைப் பெறும் நோக்கில் மக்கள் மீது பெரும் சுமை சுமத் தப்படுகிறது.

அரிசி, பருப்பு, சீனி, தானியங்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இவற்றின் விலைகள் நியாயமானவையாகும். அப்பொருட்கள் இலங்கைக் கடைகளில் விற்பனைக்கு வரும்போது அவற்றின் விலைகள் அதிர்ச்சி தருகின்றன. இரு நாடுகளிலும் உள்ள சந்தை விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்போமானால் விலை வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம்.

நியாயமான முறையில் நோக்குவோமானால் இதனை அநீதியென்றே கூறவேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியானது தனியாரின் கைகளில் இருப்பதனால் உருவாகின்ற பிரச்சினை இதுவாகும். மக்கள் மீது வாழ்க்கைச் செலவு சுமத்தப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாகவும் அமைகிறது.

இத்தகைய குளறுபடியைத் தீர்த்து வைக்கும் நோக்கில் அரசாங்கம் இப்போது நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கமே இறக்குமதி செய்து நியாய விலையில் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவிருக்கிறது. இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென எதிர்பார்க்க முடியும். இறக்குமதிப் பொருட்களை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்க ளின் விலைகளை இதுவரை காலமும் தனியார் துறையினரே தீர்மானித்தனர். இனிமேல் அரசாங்கம் நியாய விலையைத் தீர்மானித்து பொருட்களை விற்பனை செய்யவிருக்கிறது.

உண்மையிலேயே இத்தீர்மானமானது பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது. வர்த்தகமென்பது இலாபமீட்டும் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுகின்ற தொழில் என்பதில் சந்தேகமில்லை. இலாபமின்றி வர்த்தகம் கிடையாது. ஆனால் மக்களுக்கு வீண் சுமை ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கலாகாது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி