வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

நான்காவது சுற்றில் பெடரர், வீனஸ், செரினா முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ்

நான்காவது சுற்றில் பெடரர், வீனஸ், செரினா முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு, “நடப்பு சம்பியன்” சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினார். பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகள் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸலாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்றில், உலகின் “நம்பர்-2” வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ஆர்னாடு சிலிமெண்டை சந்தித்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பெடரர் 6-2, 6-4,6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் செர்பியாவின் நோவக் டோகோவிச், அவுஸ்திரேலியாவின் ஹெவிட், அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், ஆஸ்திரியாவின் மெல்சர், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், ஜெர்மனியின் டேனியல் பிராண்ட்ஸ் உள்ளிட்டோர் வெற்றிபெற்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

செரினா முன்னேற்றம்;

நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் “நடப்பு சாம்பியன்” அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சுலோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவை சந்தித்தார். இதில் செரினா 6-0, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா, செக்குடியரசின் பெட்ரா கெவிடோவா வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

வீனஸ் அபாரம்

பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் அலிசா கிளைபனோவாவை 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •