வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

ஆறு பேருக்கு பத்மஸ்ரீ விருது

கிரிக்கெட் வீரர் செவாக், பாட்மின்டன் வீராங்கனை சொய்னாநேவல் உட்பட

ஆறு பேருக்கு பத்மஸ்ரீ விருது

இந்திய கிரிக்கெட் வீரர் செவாக் பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் உள்ளிட்ட ஆறு பேர்கள், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச்- ஏப்ரலில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர், இந்த விருதுகளை வீரர்களுக்கு வழங்குவார்.

கடந்த 2002ல் அர்ஜுனா விருது வென்ற இந்திய கிரிக்கெட்டின் அதிரடி வீரர் செவாக், இம்முறை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், பீஜீங் வெண்கல வீரர் விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை), இக்னேஷ் டிர்கி (ஹாக்கி) மற்றும் சச்சின், வினோத் காம்ப்ளியின் பயிற்சியாளராக இருந்த ராம்காந்த் அர்ச்ரேகர் ஆகியோரும் பத்மஸ்ரீ, விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தவிர, இந்தியாவின் முதல் ‘பார்முலா-1’ வீரர், தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயனும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

விருது குறித்து விஜேந்தர் கூறுகையில்;

ஒவ்வொரு முறை நான் வெளிநாடு சென்று வரும் போதெல்லாம் ஏதாவது நல்ல செய்தி, எனக்கு கிடைக்கிறது. இம்முறை சீனாவில் வந்துள்ள எனக்கு, விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றது குறித்து செய்னா நேவல் கூறுகையில்,

விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இதை எனது பயிற்சியாளர், பெற்றோர்கள் மற்றும் எனது முன்னேற் றத்துக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார்.

பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு (துப்பாக்கி சுடுதல்) கடந்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது பீஜிங் வெண்கல வீரர் விஜேந்தருக்கு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். ஆனால் இவர்களுடன் சேர்த்து மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சுஷில் குமாருக்கு, இந்த ஆண்டும் பத்ம விருது வழங்கப்படாதது எல்லோருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, ஹர்பஜன் சிங் இருவருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப் பட்டது. ஆனால் விருது பெறும் விழாவை இருவருமே புறக்கணித்தனர். அவர்களது இந்த செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இவர்கள் மீது பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் விருது பெற்றுள்ள செவாக், விழாவை புறக்கணிக்கமாட்டார் என நம்புவோம்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •