புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

குறுங்கதை

முகில்வண்ணன்

இறைவன் ஒருநாள் பூமிக்கு வந்தார்.

நீண்ட நாட்களாக ஒருவன் அதிகம் வேண்டுகோள்களை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சிலவற்றையாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது. அவர் வந்து அவனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தார். அவர் மனித உருவில் பாதை ஓரமாக இருந்தார்.

சிறிது நேரத்தில் அவன் அந்த வழியில் வெகு அவசரமாக வந்து கொண்டிருந்தான்.

“தம்பி கொஞ்சம் நில்... “ என்றார்.

“என்ன ஐயா... “ அவர் அருகே சென்றான் அவன்.

“நீ சுவீப் டிக்கட் வாங்கத்தானே செல்கிறாய்? நீ எத்தனை டிக்கட் வாங்கி இருப்பாய்? ஏதாவது கிடைத்ததா? நான் கடவுள் வந்திருக்கிறேன். உனது வேண்டுகோள்களை நிறைவேற்ற என்று கூறினார்.

அவரை மேலும் கீழும் பார்த்த அவன் எதுவும் பேசாமல் நடந்துவிட்டான். ‘இது நான் கடவுள் படத்தைப் பார்த்து மூளையை விட்டுத்தாக்கும்’ என்று எண்ணியபடி நடந்தான் அவன்.

அவனுக்கு முன்னால் மீண்டும் வந்து “நீ விரும்பும் பணம் இதோ” என்று நீட்டினார். “குறளி வித்தையும்” தெரியுமாக்கும். இந்தப் பணம் சற்று நேரத்தில் மறைந்துவிடும்” என்றான். “இதோ உணவு” என்றார். “இதைச் சாப்பிட்டு வயிற்று வலி எனக்கு வரவா?” “உனக்கு ஒரு படமாளிகை அமைத்துத் தருகிறேன்..” என்றார் அவர். என்னென்னவோ செய்து காட்டினார். பேசினார். அவன் நம்பவே இல்லை.

“நான் கடவுள் என்று நம்புவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்றார் அவர்.

“ஆளை விட்டாக் காணும் சாமி” என்று அவன் ஓடி விட்டான்.

திரும்பி வரும்வரை பார்த்திருப்போம். என்று இருந்த போது இன்னொருவன் வந்தான். “என்ன சாமி இங்கே இருக்கிaர்கள்?” என்று கேட்டான்.

“நான் கடவுள் என்று நிரூபிப்பதற்கு ஒருவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

“சினிமாப் படம் பார்த்தாச்சா?” இது வெள்ள பஸ் கேஸ் போல இருக்கிறது எனறு எண்ணிக் கொண்டு அவர் பதில் பேசாமல் சென்று விட்டார். பின்னர் ஒரு சாமியார் வந்தார்.

“என்ன ஐயா இங்கே உட்கார்ந்திருக்கிaங்க?” என்றார் அவரும்.

“நான் கடவுள் வந்திருக்கிறேன். ஒருவரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்” என்றார்.

“ஒரு ஆசிரமம் பக்கத்தில் இருக்கிறது வாருங்கள் போவோம்” என்று அழைத்துச் சென்றார்.

ஆசிரமம் வந்ததும் அங்கிருந்த சாமிமாரை அழைத்து இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “நமது ஆசிரமத்துக்கு புதியவர் ஒருவர் வந்திருக்கிறார். இவர் உங்களை ஆசிர்வதித்தார் என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் உடனடியாக விசேட உணவு தயாரித்துப் பரிமாற வேண்டும்” என்றார் அவர்.

இவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லையே என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

அவர்களுடைய அறிமுகத்தை எண்ணிப் பார்த்தார்... “இவர் கந்தசுவாமிஜீ இவர் தன் மகள் தவறாக நடந்ததால் கொலை செய்து விட்டு சிறை சென்று வந்திருக்கிறார். இவர் சுப்பிரமணிய சுவாமிஜீ இவர் நாலு கொலை ¦ச்யது விட்டு சிறை சென்று வந்திருக்கிறார். இவர் இன்னார்... இதற்கு சிறை சென்றார்.. இப்படி எல்லோரையும் ஒவ்வொன்றாக அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவர்களெல்லாம் சாமியாராகித்தான் ஊர் உலகை இரட்சிக்கப் போகிறார்களா?.... என்று அவர் எண்ணிக் கொண்டார். அவர்கள் கலைந்ததும், அவர் அங்கிருந்து மறைந்துவிட்டார்.

ஒரு பூந்தோட்டத்தில் வந்து அமர்ந்து இருந்தார். அங்கே ஒரு சிறுவன் வந்தான். அவன் கேட்டான் ‘ஐயா ஏன் கவலையோடு இங்கிருக்கிaர்கள்?” என்று.

“நான் கடவுள் வந்திருக்கிறேன். ஒருவரும் நம்புகிறார்களில்லை. நான் ஒருவனுக்கு உதவ வந்தேன். அவனே வேண்டாம் என்று விட்டார். வேறு யாருக்காவது ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

“நான் நம்புகிறேன். நீங்கள் இதுவரை எவருக்கும் வரம் கொடுக்கவில்லையே? நல்லதாகப் போய்விட்டது. எல்லாவற்றையும் எனக்கே தாருங்கள். நான் பரீட்சையில் சித்தி எய்திப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். டாக்டராக வெளிவர வேண்டும். சமுதாயத்துக்கு பணி செய்ய வேண்டும்” என்றான்.

இப்படித்தான் எல்லா மாணவர்களும் பரீட்சையில் சித்தி அடைந்ததும் 108 தேங்காய் உடைக்கிறோம் என்று நேர்த்தி வைக்கிறார்கள். டாக்டராக வந்ததும் தங்கத்தில் மாலை செய்து போடுகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். பின்னர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

“இல்லை கடவுளே நான் கட்டாயம் செய்வேன். இது உறுதி” என்று கால்களில் விழுந்து வணங்கினான் அவன்.

“சரி உன்னளவில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீ கேட்ட எல்லாவற்ற¨யும் இதோ தருகிறேன்” என்ற அவர் கையை உயர்த்தி ஆசிர்வாதம் கொடுத்தார். விழுந்து வணங்கி விட்டுச் சென்று விட்டான் அவன்.

******

சில காலம் சென்றிருக்கும் இறைவன் மீண்டும் அவருக்காக பூமிக்கு வந்தார். அவன் டாக்டராகி இருந்தான். அவனுடைய வைத்தியசாலைக்கே அவர் சென்றார்.

டாக்டரைச் சந்திக்க காசு கட்டிப் பதிய வேண்டும் என்றார் வரவேற்பில் இருந்தவர். டாக்டரை எனக்குத் தெரியும். பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்றார் அவர். அவர் சொல்வதைப் பொருட்படுத்தாது பதிவுக்கு 50/= ரூபாய். டாக்டரைச் சந்தித்து மருந்துச் சீட்டுப் பெற 100 ரூபாய் மருந்துக்கு வேறு காசு என்று கூறிக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பார்வையில் அவன் மயங்க அவர் உள்ளே சென்றார்.

“பதிந்த சீட்டு எங்கே?” என்றார் டாக்டர்.

“ஐயா நான் ஏழை என்னிடம் பணம் இல்லை.... எனக்கு வைத்தியம் செய்ய வேண்டும். நீங்கள் ஏழைகளுக்கு உதவுவதாக அறிந்து தான் வந்திருக்கிறேன்.”

இது சத்திரமல்ல இது ஆஸ்பத்திரி நான் படிக்க எவ்வளவு செலவழித்து இருக்கிறேன் தெரியுமா? இந்த ஆஸ்பத்திரி கட்ட எவ்வளவு செலவழித்து இருக்கிறேன் தெரியுமா? இலவசமாக வைத்தியம் செய்தால் நானும் உங்களைப் போல தெருவுக்குச் செல்ல வேண்டியதுதான்.

“அப்படி என்றால் நீங்கள் டாக்டராகி சமுகப் பணி செய்வேன் என்ற வாக்கு...”

மின்னல் ஒன்று மின்னி மறைந்தது டாக்டருக்கு....

“கடவுளே என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்குத் தந்த வாக்கை காப்பாற்றுகிறேன். எனது பட்டம், பதவி, பணம் இவற்றைப் பறித்து விடாதீர்கள். இறைவா எனது தவறை மன்னித்து விடுங்கள்” என்று கால்களைப் பிடித்துக் கொண்டான்.

இறைவன் எவரிடம் இருந்தும் எதையும் தட்டிப் பறிப்பதில்லை. எவருக்கும் துன்பம் தருவதில்லை. துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தருவதே இறைவனின் செயல். அப்படியானால் மனிதர்கள் துன்பப்படுகிறார்களே என நீ கேட்கலாம். அது அவர்களின் கர்மப் பயன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறார்களே அதுதான். அவர்கள் செய்கின்ற வினையின் பயனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். நல்லது செய்பவர்கள். மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார்கள். கெட்டது செய்பவர்கள் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் செய்வதை எல்லாம் செய்து விட்டு இறைவனைத்தான் திட்டுகிறார்கள். உனக்கு தந்ததைப் பறிக்க நான் வரவில்லை. உன்னைத் திருத்தவே வந்தேன்”

“மன்னித்து விடுங்கள் இறைவா. எனக்குக் கண்திறந்து விட்டது. இனி நான் தவறு செய்ய மாட்டேன் எனது வாக்கைக் காப்பாற்றுவேன்” என்று மீண்டும் அவர் காலில் விழுந்தான் அவன். அங்கே அவரைக் காணவில்லை.

வாக்குக் கொடுக்கக் கூடாது

கொடுத்தால் காப்பாற்ற வேண்டும்

உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.