புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 

தெளிவத்தை மண்ணில் பெற்றுக்கொண்ட கெளரவத்தை உயரியதாக கருதுகின்றேன்

தெளிவத்தை மண்ணில் பெற்றுக்கொண்ட கெளரவத்தை உயரியதாக கருதுகின்றேன்

தெளிவத்தை இந்து மாமன்ற கௌரவ நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்

பதுளை, தெளிவத்தை தோட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஆங்கிலேயரால் இங்கு குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் அறுபதுகளில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட திராவிட இயக்கத்தின் மறுமலர்ச்சி சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தமிழர் தம் பண்பாட்டினை வளர்த்தெடுக்கும் இயக்கமாக செயற்படத் தொடங்கினர்.

இக்காலப்பகுதியில் தெளிவத்தை தோட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களும் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு வள்ளுவர் மன்றம் போன்ற மன்றங்களை அமைத்து தமது கலை கலாசார பாரம்பரியங்களை எழுத்து, நாடக வடிவில் வளர்க்கத் தொடங்கினர். இவர்களில் மலையகத்தின் மூத்த சிறுகதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், கவிஞர் அமரர் தமிழோவியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தெளிவத்தை தோட்டம் கல்வியில் வளர்ச்சியுறுவதற்கு பாரதி கல்லூரியின் ஸ்தாபகர் பாரதி இராமசாமி உட்பட விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி ஆகியோர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது.

இவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்ட கலை, கல்வி வளர்ச்சியை பின்நாளில் வந்த இளைஞர்களும் பேணிப் பாதுகாத்து பல்துறை ஆளுமையாளர்களை தெளிவத்தையில் உருவாக்கியுள்ளனர். கவிஞர் கண்ணதாசன் கால்பதித்த மண்ணாக பெருமை கொள்ளும் தெளிவத்தைக்குப் புகழ் சேர்த்தவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் தெளிவத்தை இல. 01 தமிழ் வித்தியாலயத்தில் இந்து மாமன்றத்தின் தலைவர் இராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மூத்த சிறுகதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் கலந்து சிறப்பித்தார்.

மாலை 6 மணியளவில் கெளரவத்தைப் பெற்றுக்கொள்ள வந்த அதிதிகள் மேளதாள மங்கல வாத்தியங்களுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய இந்து மாமன்ற தலைவர் இராஜதுரை தனதுரையில் தெளிவத்தை வரலாற்றில் இன்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இம்மண்ணின் புகழை சர்வதேசம் வரை கொண்டுசென்ற தெளிவத்தை ஜோசப், அமரர் தமிழோவியன் ஆகியோருடன் பாரதி இராமசாமி, வைத்தி ஆறுமுகம், கல்வித்துறையில் சாதித்த ரட்ணகுமார், பொலிஸ் அதிகாரி தவக்குமார், தொழிற்சங்கவாதி குமரன், விவசாயத்தோட்டதொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம். கிருஸ்ணசாமி உட்பட 32 பேர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். இவர்களால் நாம் பெருமையடைகின்றோம் என்று குறிப்பிட்டார்.

கலை இலக்கியம், கல்வித்துறை, ஆன்மீகம், சமூகசேவை மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சாதித்தவர்கள் அன்றைய நாளில் கெளரவிக்கப்பட்டனர். முதலாவது கெளரவ விருதினை தெளிவத்தை ஜோசப் பெற்றுக்கொண்டார். அவருக்கு "தெளிவத்தை புகழ்வேந்தன்" என்ற கெளரவ பட்டம் இந்து மாமன்றத்தினரால் வழங்கப்பட்டது. ஏனையோர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டப்பட்டனர். அமரர் தமிழோவியனுக்கான விருதை அவரது துணைவியார் திருமதி புஸ்பலீலாவதி பெற்றுக்கொண்டார்.

தெளிவத்தை ஜோசப் தனதுரையில், இன்றைய நாள் எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். சாஹித்திய ரத்னா உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும் எனக்கு அடையாளத்தையும் எனது எழுத்திற்கு அங்கிகாரத்தையும் பெற்றுக்கொடுத்த தெளிவத்தை மண்ணில் பெற்றுக்கொண்ட இந்த கெளரவத்தை உயரியதாக கருதுகின்றேன். நான் தெளிவத்தையில் கடமையாற்றியபோது எழுதிய சிறுகதைகளால் பலரது எதிர்ப்பிற்கும் கோபத்திற்கும் ஆளானேன். எனது கதைகளின் கருப்பொருளாக எம் மக்களின் வாழ்க்கையும் அவர்கள் அன்றாடம் படும் அவலங்களும் தோட்ட உத்தியோகத்தர்களால் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் காணப்பட்டன.

இதனால் தோட்டத்துரை என்னை அழைத்து நீ.. தோட்டத்தில் தொழில் பார்க்க வேண்டுமானால் எழுதுவதை தூக்கி குப்பையில் போட்டுவிடு என்றார். சமூகத்தின் விடுதலைமீது கொண்ட தீராதபற்றால் தொழிலை உதறித்தள்ளிவிட்டு 1964களில் கொழும்புக்கு சென்றேன். எனது எழுத்துக்கள் அன்றிலிருந்து இன்றுவரை மலையக மக்கள் குறித்து பேசுவனவாக உள்ளன. தெளிவத்தை மண்ணில் பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்கள் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்று இன்னும் பலர் இங்கு உருவாக வேண்டும் என்றார்.

பாரதி இராமசாமி தனதுரையில், தெளிவத்தை மண்ணில் எடுக்கப்படும் இவ்விழா காலம் கடந்து எடுக்கப்பட்டாலும் அர்த்தபூர்வமாக அமைந்துள்ளது. கலை வளர்த்த கலைஞர்களைப் போன்றே வெள்ளைக்கார துரைமாரை எதிர்த்து நாம் கல்வியில் சாதிப்போம் என்று சவால் விட்டு சாதித்துக் காட்டிய அமரர் வைத்தி ஆறுமுகம் உட்பட இன்றைய இளைய தலைமுறையினரும் கெளரவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற விழாக்கள் மூத்தோரின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் என்றார்.

நிகழ்வில் வாத்திய கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள், அதிபர்கள், சமூக சேவையாளர்கள், ஆன்மீக பணி செய்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். அறநெறி பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டதுடன் நிகழ்வை அறிவிப்பாளர் கிளிட்டஸ்குமார், தமிழ் எப். எம். செய்தியாசிரியர் மைக்கல் அருள்ஜேசு ஆகியோர் தொகுத்து வழங்கினர். மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வு அனைவரையும் நெகிழச்செய்தது. செயலாளர் விஜயகாந்த் தனது நன்றியுரையில் நிகழ்வு சிறப்புற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய நலன் விரும்பிகளுக்கும் இந்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் தோட்டப் பொது மக்களுக்கும் தனது நன்றியறிதலை தெரிவித்துக் கொண்டார்.

தெளிவத்தை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு தெளிவத்தை மண்ணின் பெருமையை சர்வதேசம் வரை கொண்டு சென்ற தெளிவத்தை ஜோசப்பிற்கு பெருமை சேர்த்து கொடுத்தது மட்டுமன்றி தெளிவத்தை மண்ணின் புகழை இன்னும் ஒருபடி உயர்த்திக்காட்டிக் கொண்டது என்றே கூறவேண்டும். இந்நிகழ்வு சிறப்புற பங்களிப்பு வழங்கிய அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.