புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
இயேசு உயிர்த்தார்! நாமும் உயிர் பெறுவோம்!

இயேசு உயிர்த்தார்! நாமும் உயிர் பெறுவோம்!

கல்லறையால் இயேசுவை கட்டுப்படுத்த முடியவில்லை

“மண்ணின்மீது மனிதனுக்காசை, மனிதன்மீது மண்ணுக்காசை, மண்தான் இறுதியில் ஜெயிக்கிறது” என்று பாடினார் கவிஞர் வைரமுத்து. மண் மனிதர்களை வெற்றிகொள்கிறது என்பது மனிதர்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம். ஆனால் இயேசுவைப் பொறுத்தவரை அது உண்மையில்லை. கல்லறையால் இயேசுவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்ற ஹிட்லருடைய கல்லறை மூடியே கிடக்கிறது. உலகை வென்று வெற்றிக்கொடி நாட்டிய அலெக்சாண்டருடைய கல்லறையை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. வெற்றிக்குமேல் வெற்றியைக் குவித்த நெப்போலியனின் கல்லறை கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஆனால் இயேசுவின் கல்லறை அது வரலாற்றுக் கல்லறை!

எருசலேமில் இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை நுழைவாயிலில் “இவர் இங்கே இல்லை’ என்ற வார்த்தைகள் இன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இயேசுவின் காலியான கல்லறை புதிய நம்பிக்கையின் அடையாளமாகும். இருள் ஒருபோதும் ஒளியை வெற்றிகொள்ள முடியாது. தீமை ஒருபோதும் நன்மையை வெற்றிகொள்ள முடியாது. இயேசுவைச் சாவு தன் மடியில் வைத்திருக்க முடியவில்லை. சூரியனை திரைகொண்டு மூடமுடியுமா? இயேசு வெற்றி வீரராய், பெரும் சுடராய் உயிர்த்தெழுந்தார்.

ஆம், கல்லறை திறந்தது; காரிருள் மறைந்தது. கர்த்தர் இயேசு கர்ம வீரராய் உயிர்த்தெழுந்தார். சாவு வீழ்ந்தது; வாழ்வு வந்தது. மனுக்குலம் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் துள்ளிக் குதித்தது.

இயேசுவைக் கொலை செய்தவர்களின் கனவு நனவாகவில்லை!

“இயேசுவைக் கொன்றுவிட்டோம்; அவனை மண் தின்றுவிட்டது” என்று கொக்கரித்தவர்களின் கனவு நனவாகவில்லை. சரித்திரம் படைக்கவந்த இயேசுவுக்கு சமாதி கட்டிவிட்டோம் என்று சந்தோஷித்தவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. இயேவின் இறப்போடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சமானது.

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் பலனளிக்கும்” என்று கூறிய இயேசு தான் கூறிய இலக்கணத்திற்கு அவரே இலக்கியமானார். சரித்திர நாயகன் இயேசு விசித்திரமாய் உயிர்பெற்றெழுந்தார். சத்தியத்திற்கு சான்றுபகரவந்த இயேசு நித்தியத்திற்கும் வாழுகின்றவராய் உயிர்பெற்றெழுந்தார்.

இலட்சியவாதிகளை அழிக்கலாம்; இலட்சியங்களை அழிக்கமுடியாது சாதாரணமானவர்களுக்கு வாழ்வு சாவில் முடியலாம். ஆனால் மாவீரா்களுக்கு, இலட்சியவாதிகளுக்கு சாவிலும் வாழ்வு தொடர்கிறது. இலட்சியவாதிகளை அழிக்கலாம். ஆனால் அவா்களின் இலட்சியங்களை அழிக்கமுடியாது.

மத்திய அமொிக்காவில் வாழ்ந்த அருட்தந்தை அய்வன் பெட்டன்கூட் 1976இல் கொலைசெய்யப்பட்டார். அவர் அங்கம் அங்கமாக அறுக்கப்பட்டு “நீ ஏழைகளுக்காகப் போராடுவதை நிறுத்து” எனக் கோரப்பட்டார். உடலின் இறுதி அங்கம் அறுக்கப்பட்டு சாகும்வரை, “நான் கோதுமையாக சிதைகிறேன். மீண்டும் முளைப்பேன்” என்று கூறி இறந்தார்.

எல்சல்வதோா் நாட்டு ஆயர் ஒஸ்கார் றொமேரோ “நான் இறந்தாலும் இந்நாட்டு மக்களில் மீண்டும் உயிர்ப்பேன்” என்ற உறுதியோடு இறந்தார்..

இயேசுவின் உயிர்ப்பு விழா ஒரு வெற்றி விழா

கூட்டை உடைத்துக்கொண்டு குஞ்சுகள் வெளிவருவதுபோல, பாறையை உடைத்துக்கொண்டு இயேசு உயிர்த்தார். இயேசுவின் உயிர்ப்பு அவருடைய மானிடப்பிறப்பிற்குக் கிடைத்த வெற்றி. உண்மைக்குக் கிடைத்த வெற்றி. நீதிக்குக் கிடைத்த வெற்றி.

ஆம் இன்று உயிர்ப்பு விழா; கல்லறை பிளந்த விழா; பூமி அதிர்ந்த விழா; பாவம் தோற்ற விழா; மீட்பு மலர்ந்த விழா. இயேசுவின் உயிர்ப்பு சாவின் சக்திகளுக்கு முடிவு கட்டியது. சாத்தானின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

“மரணமே உன் கூர் எங்கே? மரணமே உன் கொடுக்கு எங்கே? எனக் கேட்டவர் சாவுக்கு சாவு மணி அடித்தவராக உயிர்த்து விட்டார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பே கிறிஸ்தவத்தின் அத்திவாரம்

கிறிஸ்தவத்தின் அத்திவாரமாக ஆணிவேராக இருப்பது இயேசுவின் உயிா்ப்பே. இயேசுவின் உயிா்ப்புத்தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை. இயேசுவின் உயிர்ப்புத்தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் மையம். இதைத்தான் பவுலடியார், “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொருளற்றதாகிவிடும்” (1 கொரி. 15: 14) என்கிறார்.

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அப்படியே இருக்கும். மடிந்தால்தான் அது பலன் கொடுக்கும்” என்ற இயேசு கூறிய இலக்கணத்திற்கு அவரே இலக்கியமானார்.

இயேசு கல்லறைக்குள் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டார்!

இயேசுவின் அடக்கம் என்பது புதிய வாழ்வின் தொடக்கம்!, இயேசுவின் மரணம் என்பது புதிய வாழ்வின் ஜெனனம்!, இயேசுவின் இவ்வுலக முடிவு என்பது மறுவுலக வாழ்வின் விடிவு!

உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?

அந்த ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. பிழைப்புத்தேடி சென்றது ஓர் குடும்பம். தந்தை தனது இரு குழந்தைகளையும் சுமந்து சென்றார். நீண்ட பயணத்தால் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்று வழியிலேயே இறந்துவிட்டது. இறந்த குழந்தையை நல்ல இடத்தில் புதைக்கலாம் என நினைத்து தொடர்ந்து சுமந்து சென்றார் தந்தை. இரவானதும் மீண்டும் சுமக்க இயலாமல் ஒரு குழந்தையை இருட்டில் புதைத்துவிட்டு மற்றக் குழந்தையுடன் சென்றார்கள். காலையானதும் தோளில் உறங்கும் குழந்தையை எழுப்பினர். அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரிந்தது உயிருள்ள குழந்தையை வழியில் புதைத்துவிட்டு இறந்த குழந்தையை சுமந்து வந்தனர் என்று!

இப்பெற்றோர் இறந்த குழந்தையில் உயிருள்ளதைத் தேடினர்! உயிருள்ளது இங்கு இல்லை. “உயிரோடு இருப்பவரை ஏன் கல்லறையில் தேடுகிறீர்கள்?” என்று வானதூதர் பெண்களிடம் கேட்கின்றனர். கிறிஸ்தவம் உயிர்த்த கிறிஸ்துவின் கல்லறையைத் தாண்டி தொடர்ந்து வாழ்வது.

யாருக்கு சாவைச் சந்திக்க அச்சம்?

சாவு என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத யதார்த்தம். பிறந்தவர் அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். இதுதான் உலக நியதி. இந்த அடிப்படையான வாழ்வியல் உண்மையை நாம் அறிந்திருந்தாலும் தெரிந்திருந்தாலும் ஏனோ சாவைச் சந்திக்க நாம் பின்வாங்குகிறோம். மரணம் என்பது பொதுவாக நமக்கு அச்சமூட்டும் அனுபவமாகவே உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட தத்துவ ஞானி சோக்ரடீசிடம் அவரைத் தப்புவிக்க நண்பர்கள் கேட்டபோது, அவர், “வாழ்வை அன்பு செய்யாதவர்கள் வாழாதவர்களே!அவர்களே சாவைச் சந்திக்க அச்சம் கொள்வர் ” என்றார். யாருக்கு சாவை சந்திக்க அச்சம்? வாழ்வை உண்மையாக, நேர்மையாக, நிறைவாக வாழாதவர்களே சாவைச் சந்திக்க அச்சம் கொள்வர்.

பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு உண்டு

இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்தோடு அவருடைய வாழ்வு முற்றுப்பெறவில்லை. அவர் உயிர்த்தார். இதன் மூலம் பாடுகள் மரணத்திற்குப் பின்னால் வாழ்வு, உயிர்ப்பு உண்டு என்பதை எண்பித்தார்.

நம்முடைய வாழ்வும் பாடுகள் நிறைந்த வாழ்வுதான்! நம்முடைய வாழ்வும் போராட்டம் நிறைந்த வாழ்வுதான். “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” என்பது எவ்வளவு உண்மை. தாய் பிரசவ வேதனையை ஏற்க மறுத்தால் குழந்தை நலமாகப் பிறக்க முடியாது. நோயாளி மருத்தவாின் ஊசியை ஏற்க மறுத்தால் அவர் நலமடைய முடியாது. “பாடுகள் இன்றி பட்டம் இல்லை” என்பதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது.

நம்முடைய நாளாந்த வாழ்க்கைத் துன்பங்கள், துயரங்கள் மட்டில் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது, மனமுடைந்து போகக்கூடாது, விரக்தி அடையக்கூடாது. நமக்கும் வாழ்வு உண்டு, நமக்கும் உயிர்ப்பு உண்டு என்ற நம்பிக்கையை இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்றது. “ஓவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவென்றால் பகலொன்று வந்திடுமே!” ஆம் பாடுகளின் பின்னால் நமக்கும் வாழ்வு உண்டு, உயிர்ப்பு உண்டு. இயேசுவின் உயிர்ப்பு இந்த நம்பிக்கையை நமக்குத் தருகின்றது.

இயேசுவினுடைய உயிர்ப்பின் சாட்சிகளாவோம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.