புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
மதுரைக்கு வந்த சோதனை போன்று இலங்கைக்குக் கிடைத்த வேதனை

மதுரைக்கு வந்த சோதனை போன்று இலங்கைக்குக் கிடைத்த வேதனை

நாட்டை மீண்டும் ஆள்வதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு தகுதி உள்ளதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உலகம் ஒரு சர்வாதிகாரியாக இனவாதியாகப் பார்த்திருக்கிறது. அவரொரு சிறந்த நகைச்சுவையாளரும் கூட என்பதை இதுவரை பார்த்திருக்க முடியாமல்தான் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை மன்னன் தானேதான் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

அவரது ஆட்சியின்போது பெறப்பட்ட வெளிநாட்டுக்கடன் தொடர்பாகச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போதைய அரசின் ஒரு குற்றச்சாட்டுப் பற்றிய கேள்வி அது. முன்னைய அரசின் கடன்களால் தற்போதைய வருமானங்களை அந்தக் கடன்களைச் செலுத்தவும் அதற்கான வட்டியைச் செலுத்தவுமே போதுமானதாக இருப்பதாகவும் தற்போதைய அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

அதற்குப் பதிலளித்த மஹிந்த அதற்கு என்ன செய்வது என்று குறிப்பிட்டு நாட்டை என்னிடம் தந்தால் நாட்டை நிர்வகித்துக் காட்டுவேன் என்று கூறியுள்ளார். அவர் கடந்த பத்து வருட ஆட்சியின்போது நாட்டை நிர்வகித்த இலட்சணத்தை உலகம் மறந்து விட்டதாக அவர் நினைக்கிறார் போலும். ஓர் இனத்தை அழிப்பதற்கான பயங்கரவாதச் செயல்களுடன் மட்டும் அவர் நின்றுவிடவில்லை. நாட்டின் வளங்களையே மொத்தமாகத் தனது குடும்பத்தினருக்கும் பங்காளர்களுக்கும் சொந்த மாக்குவதில் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டவர் அவர்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தற்போதைய அரசு பொறுப்பல்ல. கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்த மஹிந்த அரசே பொறுப்பாகும். தன்னை ஒரு சிறந்த நிர்வாகியாக இன்று கூறிக்கொண்டு நாட்டை என்னிடம் ஒப்படையுங்கள் என்று குரல் கொடுப்பவர் கடந்த காலங்களில் தமது தலைமையிலான அரசு நாட்டை எவ்வாறு படுகுழிக்குள் தள்ளியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு அந்தத் தவறுகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்து பொருளாதார வளர்ச்சியை எட்டக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்திருந்தால் மஹிந்த ராஜபக்ச ஒரு சிறந்த நிர்வாகி. தகுதிமிக்க தலைவர் என்பதை மக்களே ஒப்புக்கொண்டிருப்பார்கள்.

கடந்த ஜனவரி 8 இல் இடம்பெற்ற தேர்தலிலும் அவருக்கு மக்கள் ஆதரவு நிச்சயமாக இருந்திருக்கும். நாட்டில் இடம்பெற்ற மோசமான நிலைக்குக் காரணகர்த்தாவாக விளங்கிய தென்னிலங்கை அரசியல் தலைமைகள், கட்சிகளிடையே மிக மோசமான தலைவராக இருந்து பெரிய பிரச்சினைகளின் சூத்திரதாரியாக விளங்கிய மஹிந்த வீட்டைக் கொளுத்தும் மன்னனாக இருந்து கொண்டு அதற்கு நெருப்புக் கொள்ளியைக் கொடுக்கக் கூடிய மந்திரியாகத் தம்பி கோத்தபாயவையும் துணைக்கு வைத்துக் கொண்டு இலங்கையை எரியூட்டிய மன்னராகச் செயற்பட்டவர்.

ஒரு மன்னனிடம் இருக்க வேண்டிய பண்புகள் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் நான்கு குணங்களும் என்கிறார் வள்ளுவர். அவர் மன்னனுக்கு என்று குறிப்பிடுவது இன்றைய ஆட்சித் தலைவர்களுக்கானது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இது உரியதே. அரசனுக்குப் பெருமை இவை என்பது வள்ளுவனின் கூற்று.

மஹிந்த இந்த நான்கு பண்புகளும் தன்னிடம் இருப்பதாக எண்ணி தன்னை ஒரு நல்ல நிர்வாகியாகக் கருதுகிறார் போலும். வள்ளுவர் குறிப்பிட்ட அஞ்சாமையை படுகொலைகள் செய்வதிலும் ஈகையை அரச சொத்துக்களைக் கையகப்படுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்குவதிலும் இனவாதத்தின் மூலம் அரசைக் கைப்பற்றுவது எவ்வாறு என்று வியூகம் அமைப்பது பற்றிய அறிவு இந்த மூன்றையும் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஊக்கமும் கொண்டிருந்த அவர், இதைத்தான் வள்ளுவர் முன்கண்டவாறு கூறியுள்ளார் என விளங்கிக் கொண்டு இந்தப் பண்புகள் அனைத்தும் தன்னிடம் உள்ளதால் தன்னை தலை சிறந்த தலைவனாக, நிர்வாகியாக உலகுக்கு அறிமுகப்படுத்த எத்தனிக்கிறாரோ எனவும் கருதவேண்டியுள்ளது.

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. ஏழைகளுக்கு வேண்டியதைக் கொடுத்து அதனால் புகழ்பெற்று வாழ்வதே மக்களின் அபிமானத்தைப்பெறும் பயனாகும். என்று ஒருவன் கீர்த்தியுடன் வாழ்வது பற்றியும் அவர் தெளிவுபடக் கூறியுள்ளார். இந்த இரண்டு குறள்களுமே ஒரு சரியான நிர்வாகி எப்படி அமைவான் என்பதை எடுத்துக் காட்டும்.

இந்த உண்மைகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில் நாடு சீரழியக் காரணமாக மட்டுமன்றி மேலும் சீரழியக் காரணராக வன்முறை வழியில் நடந்து கொண்டு நாட்டை நிர்வகிக்க நானே தகுதியானவன். என்னிடம் ஒப்படையுங்கள் என்று புலம்பினால் என்ன அர்த்தம்? மதுரைக்கு வந்த சோதனை போன்று, மஹிந்தவும் அவரது குழுவினரும் இலங்கைக்குக் கிடைத்த வேதனை.

சர்வாதிகாரம் மிக்க ஊழல் மோசடிகளை முன்னெடுத்து நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளிவிட்ட அந்த ஆட்சித் தலைவரை நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லக் கூடிய சிறந்த நிர்வாகியாகக் கருதி அவர் செல்லும் போராட்டங்களுக்கெல்லாம் கொடி பிடித்து அடியொற்றி நடந்தால் அது இலங்கை மீண்டும் எரிய ஏதுவாகிவிடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.