புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 

மார்ட்டின் லூதர் கிங்

மார்ட்டின் லூதர் கிங்

ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க- அமெரிக்கத் தலைவராக விளங்கிய மார்டின் லூதர் கிங் 1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி அட்லாண்டா ​ேஜார்ஜியாவில் பிறந்தார். அமெரிக்க குருமார்களில் ஒருவராகவும் மனித உரிமை இயக்கத்தின் தலைவராகவும் இருந்த மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். இவர் தனது இளமைக்காலத்தில் சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பணி புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதே ஆண்டில் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நடைபெற உதவியதுடன் மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ​ேஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது.

1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது.

கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுத்துறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது.

மார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கறுப்பினத்தவர்களும், வெள்ளை இனத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடனப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கறுப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கறுப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் ஏனைய இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால் தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்பதை அவர் நம்பினார்.

டென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவொன்றில் கலந்துகொள்ள சென்று ஒரு விடுதியில் தங்கியிருந்த போது வெள்ளையினத் தீவிரவாதியொருவன் லூதர் கிங் மீது துப்பாக்கியால் சுட்டபோது அந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கறுப்பு காந்தி அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' அனுஷ்டிக்கப்படுவதுடன் அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.