புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

சில மனிதர்களும் சில நியாயங்களும்

சில மனிதர்களும் சில நியாயங்களும்

ஆரணி மிகக் குழப்பமான சூழ்நிலையில் இருந்தாள். அமைதியாக இருந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தாள். அந்த அமைதியான சூழலில் அவளின் மனது கதைக்கத் தொடங்கியிருந்தது.

என்னைப்பற்றிப் பல முடிவுகளை என்னைக் கலக்காமலே என் குடும்பம் எடுத்தவிட்டதாகவே உணர்கிறேன். தாஸை நான் சந்தித்தது ஒரு சுவாரஸ்யமான சூழ்நிலையே.

தாஸ் எனக்குத் தெரியாத வாலிபனல்ல. எனக்கு நன்றாகவே தெரிந்தவன்தான். அத்தானின் மாமா மகன் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். அவனுடைய பழக்க வழக்கங்கள் கூட எனக்கு நன்றாகவே தெரியும். அவனுடைய நண்பர்களும் அவனும் செய்கின்ற அட்டகாசங்கள் எல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். அவன் பக்கம் நான் தலை வைத்துப் படுக்கக்கூட விரும்பினதில்லை. ஒரு சமயம் லண்டனில் நடந்த ஒரு கலை விழாவுக்கு நான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வழக்கமாக நான் இவற்றுக்கெல்லாம் செல்வதில்லை. என்னவோ தெரியாது இவற்றில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை.

அன்று தவிர்க்க முடியாமல் சென்றிருந்தேன். அப்போது அந்த மண்டபத்திற்கு போகும் வழியில் நின்ற சில வாலிபர்கள் செய்த வேலைகள் எனக்கு எரிச்சலை மூட்டின.

அந்த வாலிபர் கூட்டத்தில் தாஸ் நின்றிருந்தான். அவர்கள் என்னோடு நடந்து கொண்ட முறை தாஸிற்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கிடையில் நடந்த விவாதம் என் காதுகளில் அரசல் புரசலாக விழுந்தன. நான் கவனிக்காத மாதிரிச் சென்று விட்டேன். எனக்கு அது தேவையில்லாததாகவே இருந்தது.

இது தான் தாஸின் பக்கம் நான் சிந்திக்கத் தொடங்கிய காலகட்டம். இந்தச் சந்தர்ப்பத்தால் தாஸை நான் இராமனாகக் கருதவில்லை. நான் இல்லாமல் வேறு ஒரு பெண் வந்திருந்தால் நிச்சயமாக தாஸ¤ம் சேர்ந்து கிண்டல் பண்ணியிருப்பான்.

ஆனால் தனக்குத் தெரிந்த ஒரு பெண் என்றவுடன் அவளோடு மென்மையாக நடக்க வேண்டுமென்ற அவனது அந்த எண்ணம் எனக்குக் கொஞ்சம் பிடித்தேயிருந்தது. வெறும் பிடிப்பு மட்டும்தான். அந்த நிகழ்வுக்குப் பிறகு நான் அவனைக் காணவுமில்லைக் கதைக்கவமில்லை.

என்னுடைய குடும்பம் எனக்கும் தாஸ¤க்குமிடையில் காதல் வந்துவிட்டதாகவும் இதனால் நான் குடும்ப கெளரவத்தைக் காற்றில் விட்டு விட்டதாகவும் பதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயம் எனக்குத் தெரியாதென்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இதற்காகவே அப்பாவை இலங்கையிலிருந்து கூப்பிட்டுமிருக்கிறார்கள்.

இவர்களுடைய நடவடிக்கை எனக்குப் புரியவேயில்லை. இந்த நிகழ்வுக்குப் பின்பு இன்னுமொரு நிகழ்வு நடந்தது. இதனை நான் தாஸின் நண்பன் ஒருவன் மூலமாகவே அறிந்தேன்.

அன்று தாஸ் எனக்காகக் கதைத்த பிறகு நண்பர்களுக்கிடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் பலமாக இருந்ததாகவும் அதனால் அவர்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதாகவும் அறிந்திருந்தேன். ஒருநாள் இந்த முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்து கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்தக் கைகலப்பில் அவனின் நண்பர்களில் ஒருவன் பலமாகக் காயமடைய தாஸை பொலிஸார் கைது செய்த நிகழ்வு நடந்தது. இந்த நேரங்களில் நான் என்னை அறியாமலேயே பதட்டப்பட ஆரம்பித்தேன். இதனால் அவனின் நண்பனுக்கு அடிக்கடி போன் பண்ணி நிலைமையை அறிந்து கொண்டிருந்தேன். ஏன் இப்படிச் செய்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை. என்னுடைய இந்தப் பதற்றம் அம்மாவைப் பதட்டப்பட வைத்திருக்கிறது.

அம்மாவின் பதட்டம் எல்லாரையும் பதட்டப்பட வைத்திருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தாஸின்மீது ஒரு வகையான அனுதாபம் தான் ஏற்பட்டிருக்கிறது. இது காதலா அல்லது பச்சாதாபமா அல்லது எதிர்காலத்தில் இது காதலாக மாறலாமா என்பது குறித்து என்னால் எதையுமே தீர்மானிக்க முடியவில்லை.

என் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதையொரு செய்யத்தகாத குற்றமாக ஏன் கருதுகிறார்கள். ஏன் என்னோடு இன்னும் கதைக்கத் தயங்குகிறார்கள் என்பதெல்லாம் உண்மையிலேயே புரியாத புதிராகவே இருக்கிறது. நானாககக் கதைக்கவும் எனக்கு விருப்பமில்லை. அதே நேரம் இப்படியொரு ரென்சனோடை இருக்கவும் விருப்பமில்லாமல் இருக்கிறது.

தாஸை பொலிஸ் பிடிச்சுக் கொண்டு போனதும் நான் உண்மையிலேயே கலங்கித்தான் இருந்தேன். எனக்குத் தெரிந்த பல லோயர்களோடு கூட நான் கதைத்தேன். எந்த லோயரும் இந்தப் பொடியன்களுக்காகக் கதைக்கத் தயங்கியதும் எனக்கு வியப்பாகவே இருந்தது. அந்தளவுக்கு இவர்கள் மோசமானவர்களாக என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். அதேநேரம் தாஸின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது அவர்களுக்குள்ளும் மனிதம் வாழ்கிறது என்று நான் எண்ணிக் கொண்டேன்.

இந்தப் பக்கத்தைத்தான் சமூகம் பார்க்கத் தயங்குகிறது. தவறு செய்தால் அவர்களைச் சமூகம் அப்படியே ஒதுக்கி விடுகிறது. அவர்களுக்கும் ஒரு மனம் உள்ளது அவர்களாலும் இந்த சமூகத்தில் கெளரவமாக வாழ முடியும் என்று இந்த சமூகம் எண்ணத் தயங்குவது ஏன் என்பதுதான் புரியவில்லை. வளர்ப்பு முறையாலும் சூழலாலும் பாதிக்கப்பட்ட இவர்கள் எப்போதான் சமூகத்தின் நல்ல பக்கங்களைத் தரிசிப்பது.

ஆரணியின் மனசு அடிக்கடி இப்படிக் கதைத்துக் கொள்வது சாதாரணம். பிரச்சினைகளை நன்றாக அலசிப்பார்ப்பாள். வழக்கறிஞருக்குப் படிக்கிறாள் என்பதை அவள் பிரச்சினைகளை அணுகும் விதத்திலிருந்து கண்டு கொள்ளலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.