புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

நவாலிய+ர் சோமசுந்தரப் புலவர்

நவாலிய+ர் சோமசுந்தரப் புலவர்

இலங்கையின் மணிமுடிபோல் யாழ்ப்பாணம் விளங்குகிறது. அம்மணிமுடியில் பதித்த மாணிக்கம் போல் விளங்குவது மானிப்பாய். அதற்கு மேற்குப் பக்கத்தில் விளங்குவது நவாலியூர். அவ்வூரில் வன்னியசேகர முதலியார் மரபிற் கதிர்காமர் பிறந்தார். அவர் மனைவி பெயர் இலக்குமிப்பிள்ளை. அவர்களுக்கு நீண்ட காலமாக மக்கட் பேறில்லை. எனவே, அவர்களிருவரும் முருகப் பெருமானை நோக்கித் தவமிருந்தனர். அதன் பயனாக சோமசுந்தரப் புலவர் கி.பி 1880ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி பிறந்தார்.

சோமசுந்தரப் புலவருக்கு ஏடு தொடக்கி ஆரம்பக் கல்வியைக் கற்பித்தவர் மானிப்பாயிலிருந்த அருணாசல உபாத்தியாயர். பின்னர் சிறந்த தமிழ் அறிஞராய் விளங்கியதோடு, ஆங்கிலமும் தமிழுங்கற்றுப் புலமை எய்தினார். பின்னர் வடமொழி நூல்களிலும் பயிற்சி பெற்றார். புலவர் தனது பதினைந்தாவது வயதிலேயே பாடல்களை ஆக்கத் தொடங்கிவிட்டார். யாப்பிலக்கணங் கற்றுக் கொள்வதற்கு முன்னரே தனிப்பாடல்கள் பலவற்றைத் திறம்படப் பாடும் வன்மை புலவருக்கு இயல்பாகவே அமைந்து கொண்டது அதனால், அவரை எல்லோரும் ‘வரகவி’ என்று அழைத்தனர்.

புலவர் சின்னம்மை என்னும் தனது தாய் மாமன் மகளைத் திருமணஞ் செய்து இல்லற வாழ்வை இனிதே நடாத்தி வந்தார். சின்னம்மையார் கல்வியறிவும் நல்லொழுக்கமும் நிறைந்தவர்; கண்வனைத் தெய்வமாக வணங்கும் இயல்புடையவர். விருந்தோம்பலே அவரின் உயர்ந்த குறிக்கோளாகும்.

1925ஆம் ஆண்டு, ‘உயிரிளங்குமரன்’ என்னும் நாடகத்தைப் புலவர் எழுதி நடிப்பித்தார். அந்த நாடகத்தின் அருமை பெருமைகளை அறிந்த இலங்கைத் தமிழ்ப் புலவர்கள் ‘புலவர்’ என்னும் பட்டத்தை அவருக்கு அளித்தனர். இவர் ‘ஆடிப்பிறப்பு’, ‘கத்தரி வெருளி’, முதலிய பாடல்களைப் பாடிப் பரிசும் முதன்மையும் பெற்றார். ‘தங்கத்தாத்தா என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு உண்டு. புலவருடைய தந்தையார் இறந்தபோது அவர் நினைப்புக்குத் ‘தந்தையார் பதிற்றுப் பத்து’ என்னும் விழுமிய நூலை எழுதினார்.

புலவர் ஆசிரியத் தொழிலினின்றும் இளைப்பாரிய பின்னரும், தமது இல்லத்திற் சித்தாந்த வகுப்பும், காவிய வகுப்பும் நடாத்தி வந்தார். புலவர் செய்த பாடல்கள் ஏறத்தாழப் பத்தாயிரமாகும். புலவர் செய்த நூல்களுன் உயிரிளங்குமரன் நாடகமும், இலங்கை வளம், தாலவிலாசம், தந்தையார் பதிற்றுப் பத்து, நாமங்கள் புகழ்மாலை, சிறுவர் செந்தமிழ் விநாயகர் பாமாலை, மரதனோட்டம், முருகன் பாமாலை, கதிரை சிலேடை வெண்பா, அட்டக்கிரிகலம்பகம், சுகாதாரக் கும்பி, நல்லைத்திருப்புகழ், நல்லையந்தாதி, நான் மணிமாலை என்பன சிறந்தவை.

இவ்வாறு சிவவாழ்விலே வைகித் தமிழ்த் தாய்க்கும் பெருந் தொண்டு செய்த பெரும்புலவர் கி.பி 1958ஆம் ஆண்டு யூலை மாதம் 10ம் நாள் சிவபதமெய்தினர்.

ஜே.எப். ஹசானா,

தரம் - 9தி,

ப/ வெளிமட முஸ்லிம் மகா வித்தியாலயம், வெளிமட.


 

மிட்சுபிஷி ஆசிய சித்திர விழா 2015 - 2016

ஆசிய நாடுகளில் யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு சர்வதேச மட்டத்தில் நடத்தும் சித்திரப் போட்டியில் பங்கு பற்றிய பொல் கஹவெல. கு/சா பர்ணா தெத் மாதிரி பாடசாலை தரம்-04 மாணவன் எம். ஆர். மொஹமட் ரனா முன்வைத்த சித்திரம் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்காக பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கொழும்பு ரோயல் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மொஹமட் ரனா பொல்கஹவெல, பந்தாவையைச் சேர்ந்த A.F.M., N.M.F. சாவானா தம்பதியரின் புதல்ராவார்.


 

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.