புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
வாழ்க்கைச் சுமைக்கேற்ப தொழிலாளருக்கு சம்பளம்!

தோட்டத்தை நம்பி வாழும் மக்களின் எதிர்காலத்திற்கு

வாழ்க்கைச் சுமைக்கேற்ப தொழிலாளருக்கு சம்பளம்!

முதலாளிமார் சம்மேளனத்தை நெருக்க தொழிற்சங்கங்கள் முடிவு

மலையகப் பெருந்தோட்டத் துறையையே நம்பி தொழில் செய்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்கால பொருளாதார வளத்தைக் கருத்திற்கொண்டே முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தை அமையுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் தற்போது ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான தோட்டங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தோட்டத்தை நம்பி வாழும் மக்க ளுக்கு அவர்களின் எதிர்கால பொருளாதார ஸ்திரத் தன்மையைக் கருத்திற்கொண்டு பேச்சுகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த பிரதியமைச்சர் சிவலிங்கம், பெருந்தோட்ட மக்களின் பொருளாதார உயர்வினை அடிப்படையாகக் கொண்டவாறு தோட்டக்கம்பனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

விசேடமாக பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்களின் சம்பள உயர்வை கம்பனிகள் வழங்க முன்வரவேண்டும். வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப சகல கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட

வேண்டும் எனக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை காத்திரமானதாக அமையும் என்று பிரதி அமைச்சர் கூறினார்.

தொழிலாளர்களின் சம்பள விடயமாக நடைபெறவிருக்கும் கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்னராக தேசிய பெருந்தோட்ட சம்மேளனத்தை கூட்டுமாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தேசிய பெருந்தோட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான வி.புத்திரசிகாமணியிடம் வேண்டுகோள் விடுப்பதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

ஏற்கனவே இரண்டு சம்மேளனங்கள் இருக்கும் பொழுது மூன்றாவதாக புதிய சம்மேளனம் ஒன்று அவசியம் இல்லை என்ற வி. புத்திரசிகாமணியின் அறிக்கையை ஏற்றுக்கொள்கின்றேன். அதே நேரம் சம்பளத்திற்கான கூட்டு ஒப்பந்தம் நெருங்கி வரும் வரையில் சம்மேளனத்தை கூட்டுவதைப் பற்றி நடவடிக்கை எடுக்காமல் இருந்தது கவலைக்குரிய விடயமாகும். இருப்பினும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் அழைப்பிற்கு பின்பாவது அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து இச்சம்மேளனத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டமைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படாத தொழிற்சங்கங்கள் பலம் மிக்க தொழிற்சங்கங்களாகவும் அரசியல் கட்சிகளாகவும் விளங்கி வருகின்றது. இந்நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத எம்முடன் தொழிலாளர்களின் சம்பள மற்றும் நலன்புரி சம்பந்தமாக கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை எடுப்பது தவறானதாகும்.

ஏற்கனவே தேசிய பெருந்தோட்ட சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.புத்திரசிகாமணி உடன டியாக ஏனைய தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து தொழிலாளர்களின் சம்பளம் விடயமாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு முழு மையான முறையிலே ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.