புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
தமிழ்தேசியம் பேசி காலத்தை வீணடிக்காது மக்களின் தேவையறிந்து செயற்படுங்கள்

பிரபாவின் தூரநோக்கு மனோவிடம் இல்லை;

தமிழ்தேசியம் பேசி காலத்தை வீணடிக்காது மக்களின் தேவையறிந்து செயற்படுங்கள்

காங்கிரஸ் செயலாளர் சுரேஸ் கங்காதரன் சாட்டை

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததன் மூலமாக பெறப்பட்டிருக்கும் எமது சமூகத்திற்கான நன்மைகளை கொழும்பு மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வெறுமனே வெளியிலிருந்து கூக்குரல் எழுப்புபவர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்பான இன்றைய காலக்கட்டத்தில வடகிழக்கை சார்ந்த மக்களும் தமக்கான நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தைப் பேசி மக்களை திசை திருப்பாமல் மக்களுக்கான தேவைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடு தீர்க்கதரிசனமாகும். நான் முன்னர் இணைந்திருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரின் தனிப்பட்ட முடிவாகும். ஆனால் இன்று எமது கட்சியின் அனைவரின் முடிவிற்கமையவே நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு இருக்கின்றது.

எமது ஜனாதிபதியின் ஊடாக பல நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று தமிழ் பாடசாலைகள் இன்று வளர்ச்சி பெற்று வருகின்றது. கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் இருக்கும் பல பாதைகள் கொன்க்கிரீட் இடப்பட்டுள்ளது. எந்தவொரு பாரளுமன்ற உறுப்பினருக்கும் தனது மாவட்டத்தை தவிர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கான அபிவிருத்தியை செய்ய முடியாது. அதையும் தகர்ததெறிந்து களுத்துறை, கேகாலை மாவட்ட இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்தியை எமது தலைவர் முன்னெடுத்து வருகின்றார். இன்றைய எமது தலைவரின் தீர்க்க தரிசனம் மூலமாக இன்று தமிழ் கல்வி சமூகத் திற்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதனை 8 வருட காலமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டிருந்த எனது முன்னாள் தலைவர் மனோ கணேசனால் நிறைவேற்ற முடிந்ததா?

வடகிழக்கு மக்களின் தாயக போராட்டம் என்பது நியாய பூர்வமாக என்பது வேறு கேள்வி. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் அரசியல் செய்து கொண்டு தமிழ் தேசியம் பேசி வாக்குகளை சூறையாடும் எண்ணம் எமது தலைவருக்கு எப்போதும் இருந்ததில்லை.

நான் முன்னர் அங்கம் வகித்த கட்சியின் மாகாண, மாநகர சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியம் பேசி ஊடக அறிக்கைகள் மூலமாக அரசாங்கத்தை விமர்சிப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மக்களின் பெரும் ஆதரவினைப் பெற்று இருக்கும் இந்த அரசாங்கத்தை விமர்சித்து எமது மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதா அல்லது அரசாங்கம் என்ற சிங்கக் குகைக்குள் நுழைந்து அவர்களிடமிருந்து உரிமைகளை கேட்டுப் பெறுவதா என்பதில் எமது தலைவர் இன்று வெற்றி பெற்றுள்ளார். மண்டியிட்டு நாங்கள் மன்றாடுவதில்லை. மாறாக நிமிர்ந்து நின்று பேசி எமது உரிமைகளையும் தேவைகளையும் பெற்று வருகின்றோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.