ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

நவக்கிரகங்களின் மகிமையும் பலனும்

நவக்கிரகங்களின் மகிமையும் பலனும்

சூரியன் : ஒரு முகமும் இரண்டு கைகளையும் உடையவர். மாணிக்கம் பதித்த முடியையும், இரத்தின மாலையும் செஞ்சந்தனத்தையும் தரித்தவர். இவரை வழிபடுவதால் கண் சம்பந்தமான நோய்களும் சகல உடற்பிணிகளும் நீங்கப் பெற்று நலமுடன் வாழலாம்.

சந்திரன் : நவக்கிரக மண்டலத்தின் இரண்டாவதாகவும், சூரியனுக்குத் தென் கிழக்கிலும் விளங்குவார். ஒரு முகம் இரண்டு கைகளும் உடையவர். அமைதி தவழும் பார்வை மற்றும் வெண்ணிற ஆடையையும் வெண் சந்தனமும் பல நிற மலர் மாலைகளையும் தரித்தவர். இவரை வழிபடுவதால் ஆயுள் விருத்தியையும் செல்வங்களையும் பெறலாம்.

அங்காரகன் : நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாகும். சூரியனுக்கு தெற்கிலும் விளங்குவார். புன்னகை முகத்துடன் நான்கு கைகளையும் உடையவர். செம்மேனியும் செங்கண்களை யும், செவ்வாயையும் செம்மலர் மாலையையும், செஞ்சந்தனத்தையும் தரித்தவர்.

இவரை வழிபடுவதால் பூமி லாபத்தையும் நினைத்த காரியங்களின் வெற்றியையும் தைரியத்தையும் பெரியோர்களிடத்தில் நன்மதிப்பையும் பெறலாம்.

புதன் : நான்காவதாகவும், சூரியனுக்கு வடகிழக்கிலும் விளங்குபவர். ஒரு முகத்துடன் நான்கு கைகளை உடையவர். இவர் பச்சை நிறத்துடன் அழகு பொலியும் முகத்துடன் மஞ்சள் ஆடையையும் மஞ்சள் சந்தனத்தையும் தரித்தவர். இவரை வழிபடுவதால் அழகு, கல்வி, ஞானம் ஆகியவற்றையும் சீரும் சிறப்பினையும் பெறலாம்.

குரு : ஐந்தாவதாகவும் சூரியனுக்கு வட கிழக்கிலும் விளங்குபவர். ஒரு முகமும் நான்கு கைகளையும் உடையவர். அவர் பொன்னிற மேனியையும் பொன்னிற சந்தனத்தையும் பொன் ஆபரணத்தையும் பொன்னாடையையும் தரித்தவர்.

இவரை வழிபடுவதால் நல்வாழ்க்கையையும் நன்மக்கட் பேற்றினையும் பெறலாம்.

சுக்கிரன் : ஆறாவதாகவும் சூரியனுக்கு கிழக்கிலும் விளங்குபவர். ஒரு முகமும் நான்கு கைகளையும் உடையவர். வெண்ணிற கட்டழகையும் வெண்ணிற மணியையும் வெண்மலர் மாலையையும் வெண்ணிற சந்தனமும் ஒரு கண் பார்வையையும் உடையவர். இவரை வழிபடுவதால் சுபகாரியங்களையும் புகழையும் பெருஞ் செல்வத்தையும் பெறலாம்.

சனிபகவான் : ஏழாவதாகவும் சூரியனுக்கு மேற்கிலும் விளங்குபவர். ஒருமுகம், நான்கு கைகளையும் உடையவர். நீல மேனியையும் சடைமுடியையும் கருநிற வஸ்திரத்தையும், நீலமலர் மாலையையும் தரித்தவர். இவரை வழிபடுவதால் நீண்ட ஆயுளையும் விரும்பிய பலன்களையும் பெறலாம்.

ராகு : எட்டாவதாகவும் சூரியனுக்கு தென்மேற்கிலும் விளங்குபவர். ஒரு முகமும் நான்கு கைகளையும் செதில்கள் அமைந்த பாம்பு உடலையும் உடையவர். காயாமலர் மாலையையும் கருஞ் சந்தனத்தையும் தரித்தவர். இவரை வழிபடுவதால் சகல நோய்களையும் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் பயத்தினையும் நீக்கப் பெறலாம்.

கேது : நவக்கிரக மண்டலத்தில் ஒன்பதாகவும், சூரியனுக்கு வடமேற்கிலும் விளங்குபவர். மூன்று அல்லது ஐந்து தலைகள் கொண்ட பாம்புத் தலைகளோடும் இரண்டு கைகளையும் உடைவர். கருமை கலந்த செந்நிற வடிவத்தோடு பலவர்ண அடைகளையும் பல வர்ண சந்தனத்தையும் தரித்தவர். இவரை வழிபடுவதால் தைரியம், செல்வம், ஞானம் வெற்றி, புகழ் ஆகியவற்றைப் பெறலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி