ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

பிதுர் மஹா ஸ்நானம் என்னும் மாசிமக நீராடல்

பிதுர் மஹா ஸ்நானம் என்னும் மாசிமக நீராடல்

பெளர்ணமி என்னும் முழுமதி நன்னாள். இந்துக்களின் வாழ்வில் ஒரு முக்கியத் திருநாளாக மாதம் தோறும் கொண்டாடப்படுகின்றது. மாதம் தோறும் பெளர்ணமி நாளும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும் இணைந்து சித்திரை முதல் பங்குனி வரையில் பன்னிரண்டு விசேஷ நாட்களாக அமைந்துள்ளன. சித்திரை - சித்ரா பெளர்ணமி, வைகாசி - உத்திரம் எனப் பன்னிரு நட்சத்திரங்களுமே பெளர்ணமியுடன் சேரும் நன்னாளை திருக் கோயில்களில் விழாக்களாகச் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் பன்னிரண்டு பெளர்ணமி விழாக்களும் சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாக இருப்பினும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலான நாட்கள் முருகனுக்குரிய சிறப்பான திருவிழாக்களாகக் கொண்டாடப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

தட்சனது சாபத்தால் சந்திரன் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்ட, அவனைத் தன் தலையில் சூடிக் காத்தார் பரமேஸ்வரர். எனவே அவர், ‘சந்திரசேகரர்’ ஆனார். சிவபெருமான் அருளால் பிழைத்த சந்திரன் முழுமையாக, பூரணத்துவம் பெறும் நாள் பெளர்ணமியாகும். ஜோதிட ரீதியாக சந்திர கிரகம் மனிதனது மூளையை ஆள்கிறது. அதன் மூலம் மனதைச் செலுத்துகிறது. எனவே சந்திரனுக்கு ‘மதி’ என்ற பெயரும் உண்டு.

‘பெளர்ணமி நன்னாளில் மனிதனது மூளை இயக்கம் பூரணத்துவ நிலையில் இருப்பதால் அன்று சிவ வழிபாடு செய்து (சந்திரனைப் போன்று) திருவருள் பெறலாம்’ என்ற அடிப்படையில் நம் முன்னோர் இம்மரபை ஏற்படுத்தினர். மாதந்தோறும் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கும் நாளாக மேற்குறித்த பன்னிரண்டு நட்சத்திரங்கள் அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கது. மாசி மாதம் மக நட்சத்திர நன்னாளில் திருக்கோயில்களில் இறைவன் புனித நீர் நிலைகளில் நீராடல் செய்வதை அருளாளர்கள் திருமுறைகளில் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருமயிலைக் கபாலீச்சரத்தில் எலும்பைப் பெண்ணாக்கப் பாடிய, ‘பூம்பாவைப் பதிகம்’ குறிப்பிடத் தக்கது. அப்பதிகத்தில் ஒவ்வொரு மாதமும் அக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களை அருமையாகக் காட்டுகிறார்.

‘மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’ என்று மாசி மாதம் மக நன்னாளில் கடலாட்டு விழா நடைபெறுவதைப் பதிவு செய்துள்ளார் சம்பந்தர். ‘மாமாங்கமாடி... மதுரைக் கடலாடி... ஸ்ரீரங்கமாடி.... திருப்பாற்கடலாடி...’ என்று கிராமப்புறங்களில் பாடுவது வழக்கம்.

கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹாமகம் என்னும் புனித நீராடல் விழா நடைபெறும். இது உலகப் பிரசித்தமானது. இங்குள்ள மகாமகத் திருக்குளத்தில் குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும் சமயம், மாசி மாதம் மகநட்சத்திரம் பெளர்ணமி நன்னாளில் பல்லாயிரம் மக்கள் நீராடுவர். அப்போது கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, குமரி, பாலாறு, சரயு ஆகிய நதிகள் வந்து அங்கே கூடுவதாக ஐதீகம். பொதுவாக எல்லா நாட்களிலும் மக்கள் இந்நதிகளில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள். அந்தப் பாவங்களைச் சுமந்து கொள்ளும் இந்நதிகள், சிவபெருமானின் உத்தரவுப்படி மகாமக நன்னாளில் இத்தீர்த்தத்தில் வந்து நீராடித் தங்கள் பாவங்களைக் கரைத்துக் கொள்வதாக ஐதீகம். இதனை ‘பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழிபடும் கோயில்’ என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

மாசி மக நீராடலை ‘பிதுர் மஹா ஸ்நானம்’ என்று ‘மகாபுராண அம்மானை’ நூல் கூறுகின்றது. இதற்கேற்ப மாசி மகத்தன்று இறந்தவர்களுக்கு பித்ரு கடன் தீர்க்க எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கு நடைபெறுவதை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆண்டுதோறும் காணலாம்.

நரலோக வீரன் என்பவன் முதலாம் குலோத்துங்கனது தளபதி. அவன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெருமான் மாசிக் கடலாட அமைத்த மண்டபம், அதற்காக அமைத்த பெருவழி ஆகியவற்றைக் கூறும் கல்வெட்டு, சிதம்பரம் நூற்றுக்கால் மண்டபத்தில் காணப்படுகிறது. இரணிய வர்மன் என்ற அரசன், சிதம்பரம் நடராஜப் பெருமான், திருமஞ்சனமாட ஏற்படுத்திய இடம். (சிதம்பரத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள) பாசமறுத்த துறையாகும். இங்கு மாசி மகத்தன்று தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருப்பராய்த்துறை மகாதேவரான இறைவர்க்கு மாசிமக விழாவில் ‘பெருந்திருவமுது’ (மஹா நைவேத்யம்) செய்ய நிலம் அளித்த செய்தியை முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டில் காணமுடிகிறது.

திருச்செந்தூரில் மாசி மக விழா சிறப்பாக நடைபெற இரண்டாம் வரகுண பாண்டியன் 1400 காசுகளை மூலதனமாக வைத்த செய்தி கல்வெட்டில் உள்ளது. மாசி மக விழாவின் செலவுக்கு நிலமளித்த விவரத்தை நாகப்பட்டினம் கல்வெட்டிலும், அன்று திருமறைக் காட்டில் இறைவனுக்கு நீராடல்செய்து மகாநைவேத்தியம் படைப்பதற்கு நிலமளித்த செய்தியும், மாசி மக நன்னாளில் ‘மாகேஸ்வர பூஜை’ என்னும் சிவனடியார்களுக்கு உணவு வழங்கும் விழாவும் நடைபெற்றுள்ளதை சோழர் காலக் கல்வெட்டிலும் கண்டுணர முடிகிறது.

கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டு ஒன்று. திருச்சிராப்பள்ளியில் உள்ள உறையூரில் வல்லிச்சியார் உற்சவம் மாசி எட்டாம் திருநாளன்று நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறது.

தட்சன், தனக்கு உமாதேவியார் மகளாக வர வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன்படி உமாதேவி அவனுக்கு மகளாகத் தோன்ற திருவுளம் பற்றினாள். இமயமலைச் சாரலில் காளிங்க நிதியில் ஒரு வலம்புரிச் சங்காக மாறித் தவம் புரிந்தாள் தேவி. மாசிப் புனலாட வந்த தட்சன். அந்த சங்கைக் கண்டு மகிழ்ந்து எடுக்க, அம்பிகை சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள். தட்சன் குழந்தையைக் கண்டெடுத்த நன்னாள் மாசி மக நன்னாள் என்று கொண்டாடுகின்றனர்.

மாசி மகத்தன்று வட இந்தியாவில் ‘ஹோலி பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. இரண்ய கசிபுவின் தங்கையின் பெயர் ‘ஹோலிகா’ அவள் மூலம் தன் மகன் பிரகலாதனை அச்சமூட்டி தன் வழிக்குக் கொண்டுவர இரண்ய கசிபு முயற்சித்தான். நெருப்பும் தன்னை எரிக்க முடியாது என்று வரம் பெற்றவள் ஹோலிகா. எனவே அவளை பயன்படுத்தி ஒருநெருப்பு வளையத்திற்குள் பிரகலாதனையும் அழைத்துச் செல்லச் செய்தான். இரண்ய கசிபு ஆனால் ஒளிப்பிழம்பைக் கண்ட பிரகலாதன் நாராயணனை வேண்ட, தீப்பிழம்பு அவனைத் தீண்டவில்லை. ஆனால் ஹோலிகா தீப்புண்பட்டு இறந்தாள். இதையொட்டியே இன்றும் வட நாட்டில் ‘ஹோலிகா’ கொடும்பாவி கட்டிக் கொளுத்துவது வழக்கமாயிற்று. நல்லவற்றுக்கு அழிவு கிடையாது; தீயவற்றுக்கு என்றும் வாழ்வு கிடையாது என்பதை விளக்குவதே ‘ஹோலி’ பண்டிகை. அன்று வண்ண நீரைத் தெளித்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள். மேலும் மாசி மகத்தன்று காம தகனம் நடைபெறுவதை நினைவூட்டும் வகையிலும் மன்மதன் பல வண்ண மலர்கள் தொடர்புடையவன். ஆதலால் பல வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் தெளித்துப் பூசி மகிழ்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி