ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35

ஒழுக்கமின்மையை எதிர்நோக்கும் ஐ.தே.க. படுதோல்வி அடைவது நிச்சயம்

ஒழுக்கமின்மையை எதிர்நோக்கும் ஐ.தே.க. படுதோல்வி அடைவது நிச்சயம்

மேல் மாகாண சபை, தென் மாகாணசபை தேர்தல்கள் மார்ச் மாதம் 29ம் திகதியன்று நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்ற போதிலும், இந் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் மக்கள் ஆதரவை எடைபோட்டு பார்க்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இவ்விரண்டு மாகாணசபைத் தேர்தல்களிலும் மூன்றில் இரண்டிற்கும் கூடுதலான ஆசனப்பலத்துடன் வெற்றியடையும் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ஏற்க னவே மக்கள் ஆதரவை இழந்து பலவீனமான நிலையில் இருக்கி ன்றது. தற்போது கட்சியில் எழுந்துள்ள குத்து வெட்டுக்களும் முரண்பாடுகளும் இக்கட்சி என்றுமில்லாதவாறு இவ்விரு மாகாண சபைத் தேர்தல்களிலும் படுதோல்வியடைவது உறுதியாகிவிட்ட தென்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

ஒரு கட்சியில் சிறந்த தலைமைத்துவமும், ஒழுக்கமும், நேர்மையும் நிலை கொண்டிருந்தால் தான் அக்கட்சி மக்கள் ஆதரவுடன் எந்தத் தேர்தலிலும் வெற்றியடைய முடியுமென்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் பேராதரவு சான்று பகர்வதாக அமைந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரே வேட்பாளர்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் பல்வேறு பிரச்சி னைகள் எழுந்துள்ளன. களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான பாலித்த தெவரப்பெரும மேல்மாகாண சபைத் தேர்தலில் தனது மகனை ஒரு வேட்பாளராக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பித்திருந்த போதிலும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்தக் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாதென்று அறிவித்ததை அடுத்து, பாலித்த தெவரப்பெரும ஆத்திரமடைந்த நிலையில் கெட்ட வார்த்தைகளினால் கட்சித் தலைவரை ஏசி அவமானப்படு த்தியவாறு அவரை கைகளால் தாக்கச் சென்றுள்ளார். எனினும் உரிய நேரத்தில் கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமர துங்கவும், ரஞ்சன் ராமநாயக்கவும் கட்சித்தலைவரை பாலித்த தெவரப்பெருமவின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

கட்சித் தலைவரை தாக்க எத்தனிப்பது ஒரு பாரதூரமான குற்றம் என்பதனால் பாலித்த தெவரப்பெருமவை கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைப்பதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ரவி கருணாநாயக்கவும் கட்சியுடன் ஏற்பட்ட முரண் பாட்டின் காரணமாக வேட்பாளர்களை தெரிவு செய்யும் குழுவில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

ஓர் ஊடக வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரை கட்சி வேட்பாளராக நியமிக்கக்கூடாதென்று எதிர்ப்பு தெரிவித்தே ரவி கருணாநாயக்க இந்த முடிவை எடுத்துள்ளார். அதேவேளையில், கொழும்பு மாநகர மேயரின் துணைவியார் பெரோஸா முஸம்மில் அவர்க ளின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படாத காரணத்தி னால் அந்தப் பெண்மணி கட்சியின் செயற்குழுவில் இருந்து விலகியிருக்கிறார். தென்மாகாணத்திலுள்ள ஐக்கிய தேசியக்கட்சி யின் முக்கியஸ்தர்களில் ஒருவரான வஜிர அபேவர்தன, வேட்பாளர் நியமனம் குறித்து முரண்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இவ்விதம் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே கட்சியில் முரண் பாடுகள் ஏற்பட்டால் தேர்தலின் போது விருப்பு வாக்குகளுக்காக மேலும் மோதல்கள் ஏற்படுவதை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தீர்த்து வைக்க முடியாத கஷ்ட நிலையும் ஏற்படும். அதுபோன்றே, ஜே.வி.பியிலும் ஒரு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் அக்கட்சியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடையக்கூடிய நிலையில் இன்று இல்லையென்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுபோதையில் இருந்த போதே கட்சித் தலைவரை தாக்க முற்பட்டார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பாராளுமன்றத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட இதுபோன்ற விடயங்களை ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

1970ம் ஆண்டில் திருமதி பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் அவரது சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாணி இளங்கக்கோன், பாராளுமன்ற கூட்டத்தொடர் நள்ளிரவில் நடந்து கொண்டிருந்த போது மது அருந்தி போதையில் வந்து பாராளுமன்றத்திற்குள் முறைகேடாக நடந்து கொண்டதனால் அன்றைய சபாநாயகர் வேறு வழியின்றி அவரை பொலிஸாரின் உதவியுடன் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியில் கொண்டு சென்று விடுமாறு உத்தரவிட்டார்.

அதற்கு பின்னர் அன்றைய சுகாதார அமைச்சர் டபிள்யு.பி.ஜி. ஆரியதாஸ பாராளுமன்றத்திற்கு மதுபோதையில் வந்த போது அவருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.கே.கே.சூரியாரச்சிக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

1960ம் ஆண்டுகளுக்கு முன்னர் பழைய பாராளுமன்றத்தில் உறுப்பி னர்களின் பாவனைக்காக மாத்திரம் மதுசாலை ஒன்று நடத்தப்ப ட்டது. அதனை முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க மூடிவிட்டதை அடுத்து மதுபோதையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்ற பொதுவான வேண்டுகோள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி