ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

இலங்கை - இந்திய உறவு மிகவும் பலம்பொருந்தியது

இலங்கை - இந்திய உறவு மிகவும் பலம்பொருந்தியது

இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா

இலங்கை, இந்திய உறவு பலம் பொருந்தியது. அதனை மேலும் வலுப்படுத்த இந்தியா வழிசமைக்கு மென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்தார்.

இந்தியாவின் 65 வது குடியரசு தினத்தையொட்டி கொழும்பு 03 இல் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இரு நாடுகளிலும் மிகச்சிறந்த தலைமைத்துவம் காணப்படுகிறது. ஜனநாயக விழுமியங்கள் பின்பற்றப் படுகின்றன. இலங்கை, இந்திய உறவில் பல சவால்கள் இருக்கின்ற போதிலும் அதனை நாம், வெற்றி கொள்வோம். இலங்கையின் தற்போதைய சூழ்நிலை முக்கிய தருணமாகும் எனவும் உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா கூறினார்.

அயல்நாடு என்ற வகையில் இந்தியா இலங்கையுடன் மிக நீண்டகால கலை, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நட்புறவைக் கொண்டுள்ளது. அரசியல் உறவு எதிர்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இரண்டு தடவைகள் கொழும்பு வந்துள்ளார். அதே போன்று இலங்கை வெளிவிவகார அமைச்சரும் ஏற்கனவே புது டில்லி வந்து சென்றதுடன் இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டாவது தடவையாக மீண்டும் டில்லி வரவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை முக்கியமான தருணமாகும். அந்தவகையில் இந்தியா, இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவை பேணி வருமெனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு இந்திய இல்லத்தில் நேற்றுக் காலை இந்திய குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்திய இராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் இந்திய பேண்டு வாத்தியங்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் நேற்றுக் காலை அவரது இல்லத்திலிருந்து அழைத்து வரப்பட்டார். காலை 9 மணியளவில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ஸ்ரீ பிரணாப் முகர்ஜியின் 65 வது குடியரசுதின செய்தியை விடுத்த உயர்ஸ்தானிகர் இறுதியாக இலங்கை இந்திய நட்புறவு தொடர்பில் மேற்கண்டவாறு உரை நிகழ்த்தினார்.

அவர் உரையில் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவின் 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் 2015 இல் முழுமையடையுமெனவும், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் யாழ்தேவி ரயில் சேவை இவ்வருடம் யாழ்ப்பாணம் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் கூறினார்.

சாம்பூர் செயற்திட்டத்திற்கு இந்திய பொறியியலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இத்திட்டம் முழுமையடைந்ததும் இலங்கையர்களுக்கு மின்சார பிரச்சினையினை மேலும் எதிர்நோக்க வேண்டி ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை அரசாங்கம் சுவாமி விவேகானந்தரின் 150 ஆது பிறந்த தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியிட்டமைக்காக இந்தியா சார்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி