ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

கொழும்பில் ஹிருனிக்காவுக்கு ஆதரவாளர்களால் பெரு வரவேற்பு

கொழும்பில் ஹிருனிக்காவுக்கு ஆதரவாளர்களால் பெரு வரவேற்பு

* தந்தையின் பிறந்த தினத்தையிட்டு உருவச்சிலை அருகிலிருந்து பிரசார பணிகள் ஆரம்பம்

* மத வழிபாட்டு தலங்களிலும் ஆசீர்வாதம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவி னால் நியமிக்கப்பட்ட ஹிருனிக் கா பிரேமச்சந்திரவுக்கு நேற்று கொழும்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது ஆதரவாளர்கள் இணைந்து இந்த வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கொலன்னாவ பிரதேசத்திலுள்ள தனது தந்தையான முன்னாள் எம். பி. யும், ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் உருவச் சிலைக்கு நேற்றுக்காலை மலர் அஞ்சலி செலுத்திய அவர் தனது கன்னி பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

தனது தாயுடன் வாகன பவனியாக சென்ற அவர் கொலன்னாவ, வெல்லம்பிட்டி, ஆட்டுபட்டித்தெரு, வுல்பண்டோல், புதுக்கடை, பீர் ஸாஹிப் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவேத்தை, மருதானை, டவுன் ஹோல் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்ற அவருக்கு ஆதரவாளர்களால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்திற்கு சென்ற அவரை பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், வரவேற்றதுடன் பொன்னாடை போர்த்தியும், பூச்செண்டுகள் வழங்கியும் கெளரவித்தனர்.

பீர் ஸாஹிப் வீதியிலுள்ள இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி முன்றலில் அமைந்துள்ள ஸியாரத்திற்கும், தெவடகஹவில் அமைந்துள்ள ஷேக் உஸ்மான் வலியுல்லாஹ்வின் ஸியாரத்திற்கும் சென்ற அவர் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதே வேளை மாளிகாவத்தையிலுள்ள அபேசிங்கா ராம விகாரைக்கும் சென்று ஆசி பெற்றுக்கொண்டார்.

இதன் போது பல்வேறு பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங் களில் கருத்துத் தெரிவித்த ஹிருனிக்கா பிரேமசந்திர:

மேல் மாகாண சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடவுள்ள நான் வேட்புமனு தாக்கல் செய்த பின்னரே எனது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருந்தேன்.

எனினும் எனது தந்தையான பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரனின் பிறந்த தினம் இன்றாகும் (நேற்று) எனவே அவரது சேவையை கெளரவித்து மதிப்பளித்து அவரது ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்த பிரசார ஊர்வலத்தை நடத்த தீர்மானித்தேன்.

எனது தந்தை சகல சந்தர்ப்பங்களிலும் அதிகாரங்களுக்கு அப்பால் தொழிலாளர் வர்க்கத்திற்காகவும், சாதாரண மக்களுக்காகவும் சேவையாற்றியவர். அவர்இன, மத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்றியவர் எனவேதான் அவரை அனைவரும் லக்கீ ஐயா! என்று அன்புடன் அழைத்து வந்தனர். அவர் விஷேடமாக கொழும்பு வாழ் மக்களுக்காக முன்னெடுத்த சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே இம்முறை மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.

தனது தந்தை காண்பித்த வழியில் தொடர்ந்து செல்ல இம்முறை தேர்தலில் அதிகூடிய வாக்குகளை வழங்கி முதன்மை வேட்பாளராக என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் அதன் ஊடாக கொழும்பு வாழ் மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன். இது ஒரு ஆரம்பம் மாத்திரமே இந்த ஆரம்பம் உங்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் பாராளுமன்றம் வரை சென்றடையும். பள்ளிவாசல் பிரச்சினையாக இருக்கலாம், தொழில் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு பிரச்சினையாக இருக்கலாம் எனது தந்தை முன்வந்து செயற்பட்டு அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுத் தந்தார்.

அதேபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னையும் அமைப்பாளராக நியமித்துள்ளார். இதன் மூலம் பல சேவைகளை வழங்கவுள்ளேன். அதேநேரம் ஜனாதிபதிக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஆரம்பம் சிறப்பாக அமைந்துள்ளது. அனைத்து மக்களதும் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. அதே போன்று முதல் நாளே எனக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேல் மாகாண சபையின் ஐ தே. க. முன்னாள் உறுப்பினர் சிறிபால கிந்தொடகே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

எனவே அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி