ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

மகுடம் சூடியது மும்பாய் இந்தியன்ஸ்

சம்பியன் லீக் கிரிக்கெட்;

மகுடம் சூடியது மும்பாய் இந்தியன்ஸ்

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

10 அணிகள் இடையிலான 5வது சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 21ம் திகதி தொடங்கியது. லீக் மற்றும் அரை இறுதி முடிவில் இந்தியாவைச் சேர்ந்த மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் றோயல்சும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் ‘இறுதி யுத்தம்’ இவ்விரு அணிகள் இடையே டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் சகல துறை வீரர் பிராட் ஹாட்ஜிக்குப் பதிலாக குசால் பெரேராவும், மும்மை அணியில் மிட்செல் ஜோன்சனுக்குப் பதிலாக கிளைன் மெக்ஸ்வெல்லும் சேர்க்கப்பட்டனர்.

நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் தலைவர். ராகுல் டிராவிட் முதலில் மும்பை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார். இதன்படி வெயின் சுமித்தும், சச்சின் டெண்டுல்கரும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். தனது கடைசி 20 ஓவர் போட்டியில் ஆடியதால் டெண்டுல்கர் துடுப்பெடுத்தாடிய போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் காதைப் பிளந்தது. ஆனால் அவர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. வொட்சனின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த டெண்டுல்கர் (15) அடுத்த பந்தில் போல்ட் ஆனார்.

இதன் பிறகு களம் இறங்கிய ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் மும்பை அணிக்கு கணிசமான பங்களிப்பை அளித்ததால் 10 ஓவர்களுக்கு (60-1) பிறகு அந்த அணியின் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. வழக்கம் போல் தனது தாக்குதலை தொடுத்த வெய்ன் சுமித் வொட்சனின் ஒரே ஓவரில் ஹெட்ரிக் பவுண்டரி விளாசினார். தனது பங்குக்கு 44 ஓட்டங்கள் சேர்த்த அவர் சுழற்பந்து வீச்சாளர் பிரவின் தாம்பேவின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆனாலும் மும்பையின் ஓட்ட வேகத்தை மட்டும் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பவுண்டரியும், சிக்சரும் சர்வ சாதாரணமாக நாலாபுறமும் பறந்தது. குறிப்பாக தலைவர் ரோகித் ஷர்மாவும் (33) கிளைன் மேக்ஸ்வெல்லும் (37) சிறிது நேரமே களத்தில் நின்றாலும் சரவெடியாய் வெடித்தது. எதிரணி பந்து வீச்சாளர்களை விழிபிதுங்க வைத்துவிட்டனர்.

இறுதிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் (15) ஹர்பஜன்சிங்கும் (7) தங்கள் அணி 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் அந்த அணி 142 ஓட்டங்கள் சேகரித்தது. சம்பியன்ஸ் லீக்கில் மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2010ம் ஆண்டு கயானா வுக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 184 ஓட்டங்கள் எடுத்ததே மும்பை அணியின் சிறந்த ஸ்கோராக இருந்தது.

பின்னர் 203 ஓட்ட ங்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே குசால் பெரேராவின் (8) விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து நிமிர்ந்தினர். மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இவர்கள், சராசரியாக ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வண்ணம் இருந்தனர். 9 ஓவர்களில் ராஜஸ்தான் 100 ஓட்டங்களைக் கடந்து சிலிர்க்க வைத்தது.

இந்த ஜோடி ஆடிய விதத்தால் வெற்றி யாருக்கு என்பது மதில் மீது பூனையாகவே தோன்றியது. ஆட்டம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில், ஸ்கோர் 117 ஓட்டங்களை எட்டிய போது (11. 5 ஓவர்) சாம்சன் 60 ஓட்டங்களில் ஓஜாவின் பந்து வீச்சில் பிடியானார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இதன் பின்னர் மும்பை சுழற்பந்து வீச்சாளர்களின் பிடி படிப்படியாக இறுகவே ராஜஸ்தான் அணியின் உத்வேகம் தளர்ந்தது. அடுத்த வந்த வொட்சன் 8 ஓட்டங்களில் வெளியேறியது. அவர்களுக்கு மேலும் பின்னடைவாகிப் போனது. அத்துடன், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஒரே ஓவரில் முன்று ‘செக்’ வைக்க ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. இதில் தொடர்ச்சியாக 4வது அரைசதத்தை அடித்த ரஹானேயின் (65) விக்கெட்டும் அடங்கும். பின்வரிசையில் இறங்கிய தலைவர் டிராவிட்டாலும் (1) ஒன்றும் செய்ய முடியவில்லை.

ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 169 ஓட்டங்களுக்கு சகல விட்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சம்பியன் கோப்பையை தனதாக்கியது. மும்பை அணி சம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்வது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டும் வாகை சூடியிருந்தது. இந்தக் கோப்பையை வென்று டெண்டுல்கருக்கு சமர்ப்பிப்போம் என்று சூளுரைத்த மும்பை வீரர்கள் அதனை வெற்றிகரமாக செய்து காட்டினர். ஒரே ஆண்டில் ஐ. பி. எல்., சம்பியன்ஸ் லீக் இரண்டையும் ருசித்துள்ளனர்.

மேலும் லீக் சுற்றில் ராஜஸ்தானிடம் அடைந்த தோல்விக்கும் மும்பை பழிதீர்த்துக் கொண்டது. சொந்த மண்ணில் (ஜெய்ப்பூரில்) நடந்த 5 ஆட்டத்திலும் (வெற்றி) அசைக்க முடியாத அணியாக விளங்கிய ராஜஸ்தான் அணி, வேறு மைதானத்திற்கு வந்ததும் தடம் புரண்டு போய்விட்டது.

ரூ. 15 கோடி பரிசு

சம்பியன் ஆன மும்பை அணிக்கு ரூ. 15 கோடியும், 2வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தானுக்கு ரூ. 8 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த ராஜஸ்தான் வீரர் ரஹானேவுக்கு தங்க துடுப்பும் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய ராஜஸ்தான் பந்துவீச்சாளர் 41 வயதான தாம்பேவுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. மும்பை வீரர்கள் ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதையும், வெய்ன் சுமித் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி