ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

எகிப்தில் மீண்டும் வன்முறை : 51 முர்சி ஆதரவாளர்கள் பலி

எகிப்தில் மீண்டும் வன்முறை : 51 முர்சி ஆதரவாளர்கள் பலி

இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 423 பேர் கைது

எகிப்தில் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

1973 இஸ்ரேல் - அரபு யுத்தத்தின் 40 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட போதே இந்த மோதல் வெடித்தது. அன்றைய தினத்தில் 423 இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்திற்குள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

எனினும் அன்றைய தினத்தில் தஹ்ரிர் சதுக்கத்தில் இராணுவ ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அரபு - இஸ்ரேல் யுத்தத்தின் நினைவு தினத்தை அனுஷ்டித்தனர். 1973 யுத்தத்தில் எகிப்து படையினர் சீனாய் தீபகற்பத்திலிருந்து இஸ்ரேல் படையை பின்வாங்கச் செய்த நிகழ்வையே எகிப்தியர் நேற்று முன்தினம் அனுஷ்டித்தனர்.

தெற்கு கெய்ரோவின் டெல்கா பகுதி மருத்துவ வட்டாரங்கள் ராய்ட்டருக்கு அளித்த தகவலின்படி, கற்கலால் தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைநகர் கெய்ரோவின் பல பகுதிகளிலும் கலவரம் வெடித்துள்ளது. இதில் காடன் சிட்டி மற்றும் நைல் கொர்னிச் பகுதிகளூடாக முர்சி ஆதரவாளர்கள் தஹ்ரிர் சதுக்கத்தை எட்டுவதற்கு ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான இடைவெளி இருந்த போது அவர்களை பாதுகாப்பு தரப்பினர் தடுத்து நிறுத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களின் தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிய பேரணியில் செய்தி சேகரிக்கச் சென்ற அல் ஜkரா தொலைக்காட்சியின் செய்தியாளர் குறித்த பேரணியில் 4000 பேரளவில் பங்கேற்றிருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளார். இராணுவ ஆதரவாளர்களைப் போன்றே தமக்கும் தஹ்ரிர் சதுக்கத்தை பயன்படுத்தும் உரிமை இருப்பதாக எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதே இராணுவம் அதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இராணுவம் தொடர்ந்து பொறுமை காக்காது என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து எகிப்து பிரதமர் ஹஸம் பப்லாவி வெளியிட்ட அறிவிப்பில், தீய சக்திகள் நேசத்துக்கு தொடர்ந்து அபாய சமிக்ஞையாக உள்ளன. ஆனால் அதனது பெருமளவான சக்தி இழந்திருக்கிறது என்று சகோதரத்துவ அமைப்பு மற்றும் அதனது ஆதரவாளர்கள் குறித்து விபரித்திருந்தார்.

மறுபுறத்தில் நூற்றுக்கணக்கான இராணுவ ஆதரவாளர்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் கூடி, இஸ்ரேலை பின்வாங்கச் செய்த நிகழ்வை கொண்டாடினர். இதன்போது இராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில் தஹ்ரிர் சதுக்கத்திற்கு மேலால் யுத்த விமானங்கள், ஹெலிகொப்டர்கள் பறந்தன. இதன்போது அங்கு கூடியிருந்தோர் கைதட்டியும், கோஷமெழுப்பியும் வரவேற்றதோடு, பலரும் இராணுவ சதிப்புரட்சியை முன்னின்று நடத்திய இராணுவ தளபதி அப்தல் பத்தாஹ் அல் சிசியின் புகைப்படம் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி நின்றனர். இதில் பலரும் அல் சிசி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கோரியும் கோஷம் எழுப்பினர்.

எனினும் தலைநகர் கெய்ரோவின் பல பகுதிகளிலும் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மறுபுறத்தில் சுயெஸ்கால்வாய் நகரான இஸ்மைலியாவிலும் முர்சி ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்புக்குமிடையில் மோதல் வெடித்தது.

எகிப்தெங்கும் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்திருந்தது. 268 பேர் காயமடைந்தனர். இதில் பெரும் பாலானவர்கள் கெய்ரோ மற்றும் கிஸா நகரங்களில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சரின் அதிகாரி காலித் அல் காதில் குறிப்பிட்டுள்ளார். தவிர பனிசூப் மற்றும் டெல்கா நகரங்களிலும் மரணம் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி மேற்படி வன்முறையை, "அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான புதிய படுகொலை" என விபரித்துள்ளது. முர்சி ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கும் அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 'பொலிஸார் சிவில் உடையில் தாக்குதல் நடத்தியதோடு, ஸ்னைப்பர் தாக்குதலும் நடத்தினர். கலகக்காரர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவம் பாதுகாப்பு அளித்தது’ என்று சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

முர்சி ஆதரவு பேரணியில் பங்கேற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழக மாணவன் முஸ்தபா ரம்தானின் தலை கல்லடி பட்டு காயத்திற்கு உள்ளாகியுள்ளதோடு அவரது கையில் இரப்பர் குண்டு தாக்கி காயம் ஏற்பட்டுள்ளது. "கிசா நகரின் மகத்தசி பகுதியில் நாம் அமைதியான முறையில் பேரணியில் சேன்றோம்.

ஆனால் பாலத்திற்கு கீழ் பொலிஸ் படை எமக்காக காத்திருப்பதை பார்த்தோம். நாம் அமைதியான முறையிலேயே செயற்படுகிறோம் என்று தொடர்ந்து கூறியபோதும் அவர்கள் எமக்கு எதிராக செயற்பட்டார்கள். ஆரம்பத்தில் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் பின்னர் எம்மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்" என்று விபரிக்கிறார் ரம்தான்.

கடந்த ஜூலை 03 ஆம் திகதி ஜனாதிபதி முர்சி பதவி கவிழ்க்கப் பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியவாதிகள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பெரும்பாலான சிரேஷ்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தடை செய்யப்பட்டு அதனது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி