ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238

மஹிந்த சிந்தனை எண்ணக்கரு வீடமைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது

மஹிந்த சிந்தனை எண்ணக்கரு வீடமைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையில் உள்ள எல்லோருக்கும் ஒரு வீட்டை கட்டிக் கொடுப்பது என்ற மஹிந்த சிந்தனை எண்ணக்கருவை நிறைவேற்றுவேன் என்று மொறட்டுவை சொயிசாபுரவில் நேற்று நடைபெற்ற உலக குடி யிருப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

“நகரை மீளக்கட்டியெழுப்புவோம்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மொறட்டுவை சொயிசாபுரவில் 1969ம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு 42 வருடங்கள் பழமை வாய்ந்த 3000 வீடுகள் கொண்ட கட்டிடத் தொகுதிகள் 350 மில்லியன் ரூபா செலவில் இப்போது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகள் கொண்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டமும் ஜனாதிப தியினால் நேற்றைய வைபவத்தில் கையளிக்கப்பட்டது. இதனுடன் ஜனாதிபதி அவர்கள் 40 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களையும் வழங்கினார்.

உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு தமிழ், சிங்கள மொழிகளில் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரை, வரைதல், நாடகம் மற்றும் கொழும்பு நகர சிறுவர்களின் நிகழ்ச்சிகளிலும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணமும் பணப் பரிசில்களையும் அவர் வழங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி அவர்கள் நியூயோர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச சினிமா விழாவில் உலகில் சிறந்த நடிகனுக்கான பரிசுபெற்ற நம்நாட்டைச் சேர்ந்த ஜகத் சமில என்ற நடிகருக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு வீட்டையும் இந்த நிகழ்ச்சியின் போது அன்பளிப்பு செய்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்புடைய வகையில் நாட்டின் நாலா பக்கங்களிலும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தமது அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாணத்தில் மாத்திரம் நான்கு ஆண்டு காலத்தில் தமது அரசாங்கம் 3 இலட்சம் வீடுகளை நிர்மாணித்து சாதனையை ஏற்படுத்தி யிருக்கிறது என்று கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் நிம்மதியாக தனது வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்வதற்கு அவனுக்கு தனது குடும்பத்துடனும், உற்றார் உறவி னர்களுடனும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்வதற்கான வசதியான வீடுகள் இருப்பது மிகவும் அவசியம்.

மஹிந்த சிந்தனையில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் அவசி யம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் வாய்ப்புகள் தலைநகரம் கொழும்பிலும், கண்டி, மாத்தறை போன்ற நகரங்களில் மாத்திரம் அதிகமாக இருந்தத னால் மக்கள் வேலை வாய்ப்பைத் தேடி இந்நகரங்களை முற்று கையிட்டனர்.

இதனால் நகரங்களில் வீடில்லாப் பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந் திருந்தது. வீடு இல்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டு மாயின், நாடெங்கிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான தொழிற்சாலைகளையும் அரச நிறுவனங்களையும் ஏற்படுத்தும் திட்டத்தையும் அரசாங்கம் இப்போது செயற்படுத்தி வருகிறது.

கொழும்பில் மட்டும் அல்ல நாட்டின் நாலா பக்கங்களிலும் வீடமைப்புத் திட்டங்கள் இன்று துரித கதியில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இதனால் இன்று வீடில்லாப் பிரச்சினை ஓரளவுக்குக் குறைந்து இருக்கிறது. கொழும்பு போன்ற நகரங்க ளில் வீட்டு வாடகை அதிகரித்து இருப்பதற்கும் வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே பிரதான காரணமாகும். இதனால் அரசாங்கம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் செயற்பாட்டினை இப்போது முன்னெடுத்து வருகிறது.

இன்னும் ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வீட்டைப் பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி அவர்களின் இலட்சியக் கனவு நிச்சயம் நிறைவேறும். இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனா திபதி அவர்கள் மீண்டும் நாட்டில் கூடாரங்களை அமைக்கும் யுகம் ஏற்படுதவதற்கு தமது அரசாங்கம் இடமளிக்காது என்று கூறினார்.

இன்றைய அரசாங்கம் தோற்றுவித்திருக்கும் அபிவிருத்தி யுகத்தில் கட்டிட நிர்மாணத்திற்கும் வீடமைப்புக்கும் முன்னுரிமை அளிக் கப்பட்டுள்ளது. புதிதாக திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவியர் தங்கள் விருப்பத்திற்கு அமைய வசதியான வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் இப்போது வங்கிகளின் ஊடாக குறைந்த வட்டிக்கு வீடமைப்புக் கடன்களை வழங்குகிறது.

மேற்கத்திய நாடுகளில் ஒருவர் கூட வீட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதில்லை. ஒருவர் தொழில்வாய்ப்பைப் பெற்ற உடனேயே அவருக்கு ஒரு வீட்டை குத்தகை அடிப்படையில் பெறக்கூடிய வகையில் அந்நாட்டில் சட்டங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.

அதனால் அவர் தனது முதல் மாத சம்பளத்திலேயே முதலாவது குத்தகைப் பணத்தை அவ்வீட்டுக்கு கட்டாயம் செலுத்தக்கூடிய வகையில் அந்நாடுகளில் தொழில் சட்டங்கள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் சுமார் 30 ஆண்டுகாலம் பணிபுரிந்து இளைப்பாறும் போது, அந்த மனிதன் அந்த வீட்டின் உரிமையாளனாக மாறிவிடுவான்.

அதுபோன்ற திட்டத்தையும் அரசாங்கம் கூடிய விரைவில் மக்களின் நன்மைக்காக நடைமுறைப்படுத்த உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி