வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

வடக்கில் சகல வாக்குச் சாவடிகளினுள்ளும் கண்காணிக்கும் பணியில் பெப்ரல்

நாடு முழுவதும் சுமார் 35,000 கண்காணிப்பாளர்கள்

வடக்கில் சகல வாக்குச் சாவடிகளினுள்ளும் கண்காணிக்கும் பணியில் பெப்ரல்

ஜனாதிபதித் தேர்தலின் நிமித்தம் வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சகல வாக்குச் சாவடிகளினுள்ளிருந்தும் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் 11098 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3500 வாக்குச்சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பிரதிநிதிகள் ஈடுபடுவர் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் (சி.எம்.ஈ.வி.) இணைப்பாளர் டி. திஸாநாயக்க கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணிகளில் எட்டு சுயாதீன அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பெப்ரல் அமைப்பு மற்றும் சி.எம்.ஈ.வி என்பவற்றின் பிரதிநிதிகள் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஏனைய ஆறு அமைப்புகளும் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் தேர்தல் ஆணையாளர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பெப்ரல் மற்றும் சி. எம். ஈ.வி. பிரதிநிதிகள் அளிக்கும் தேர்தல் கண்காணிப்பு அறிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் விசேட கவனம் செலுத்தி முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகையில் பெப்ரல் இயக்கம் வட மாகாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 829 வாக்குச்சாவடிகளையும் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது என்று அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கூறினார்.

அதேநேரம் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் 30 வீதத்தை வாக்குச் சாவடிகளினுள் இருந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இன்று 352 வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நால்வர் இப்பணியில் ஈடுபடுவர். அத்தோடு, பிரதேச செயலக மட்டத்தில் அமைக்கப்படும் பலகட்சி செயற்பாட்டு நிலையங்களிலும் எமது பிரதிநிதிகள் 332 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தேர்தல் ஆணையாளரின் ஏற்பாட்டில் இந்த நிலையங்கள் இன்று காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இயங்கும் என்றும் அவர் கூறினார்.

சி. எம். ஈ. வி. பிரதிநிதிகள் 235 வாகனங்களில் வாகனத்துக்கு இருவர்படி தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அதன் இணைப்பாளர் குறிப்பிட்டார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •