வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் 233 ஓட்டங்களுக்கு பின்வாங்கியது

இந்தியா - பங்களாதேஷ் 2வது டெஸ்ட் போட்டி

முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் 233 ஓட்டங்களுக்கு பின்வாங்கியது

இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இந்திய 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மிர்புரில் தொடங்கியது.

இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தில் இருந்து மீண்ட கப்டன் டோனி, ஹர்பஜன்சிங் மீண்டும் அணிக்கு திரும்பினார்கள். மேலும் தமிழகத்தின் முரளி விஜய், ஓஜா ஆகியோரும் ஆடும் லெவன் அணியில், வாய்ப்பு பெற்றனர். முதல் டெஸ்டில் ஆடிய தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ராவுக்கு இடம் கிடைக்கவில்லை.

காயம் காரணமாக வீ.வீ.எஸ். லட்சுமண், ஸ்ரீசாந்தும் ஏற்கனவே நீக்கப்பட்டு இருந்தனர். பங்களாதேஷ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஷரியர் நபீசுக்கு பதிலாக ஜூனைட் சித்திக் சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த பங்களாதேஷ் அணியின் கப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார். முதல் இன்னிங்சில் குறைந்தது 350 ஓட்டங்கள் எடுப்போம் என்று எதிர்பார்ப்பதாக டாஸ் வென்ற பிறகு அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அவரது இலக்குக்கு ஏற்றபடி பங்களாதேஷ் துடுப்பாட்டக்காரர்கள் ஆடவில்லை. தொடக்கத்திலேயே அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள் காத்திருந்தன. இந்திய வேகப்பந்து வீச்சாளர் சாஹிர்கானும், இஷாந்த் ஷர்மாவும் தங்களது தொடக்க பகுதியில் சூப்பராக பந்து வீசி பங்களாதேஷ் துடுப்பாட்ட வரிசையை சீர்குலைத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் இம்ரூல் கேயஸ் (0) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் டோனியிடம் பிடிகொடுத்தார். ஆனால் டி.வி.ரீப்ளேயில் அவருக்கு நடுவர் பில்லி பவுடன் தவறான அவுட் கொடுத்திருப்பது தெரியவந்தது. பந்து துடுப்பாட்டக்காரரின் கையுறையில் உரசவில்லை.

அவரது பேட்டில் மட்டும் பட்டிருப்பது தெரிந்தது. இதனால் ஏமாற்றத்துடன் கேயஸ் பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் (0), சாஹிர்கான் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதை தொடர்ந்து ஜூனைட் சித்திக் (8), ரகிபுல் ஹசன் (4) ஆகியோரையும் இந்திய வேக கூட்டணி வெளியேற்றியது.

அதிரடியாக ஆடிய முகமது அஷ்ரபுல் தனது பங்குக்கு 39 ஓட்டங்கள் (31 பந்து, 6 பவுண்டரி) எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆனார். இதனால் 51 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பங்களாதேஷ் பரிதவித்தது.

இதன் பின்னர் கப்டன் ஷகிப் அல் ஹசன், முதல் டெஸ்ட்டில் சதம் அடித்த முஷ்பிகிர் ரகிம் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்கள். அணியை சற்று நிமிர்த்திய அல் ஹசன் (34 ஓட்டங்கள்), முஷ்பிகிர் (30) இருவரும் அடுத்தடுத்து, வீழ்ந்ததால் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டது அப்போது 7 விக்கெட் டுக்கு 127 ஓட்டங்களுடன் தவித்த பங்களாதேஷ் 200 ஓட்டங்களை கடப்பதற்கான அறிகுறி குறைவாக தென்பட்டது.

இந்த சூழலில் 8வது வரிசையில் இறங்கிய 23 வயதான முகமது மக்முதுல்லா சிறப்பாக விளையாடி தங்கள் அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தினார். அவரது துணையுடன் 9 வது விக்கெட்டுக்கு 58 ஓட்டங்களும் கடைசி விக்கெட்டுக்கு 20 ஓட்டங்களும் எடுக்கப்பட்டன.

என்றாலும் கடைசியில் விக்கெட் இல்லாமல் போதனால் தூரதிஷ்டவசமாக மக்முதுல்லாவால் தனது முதலாவது சதத்தை எட்ட முடியாமல் போனது. முடிவில் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மக்முதுல்லா 96 ஓட்டங்களுடன் (156 பந்து, 13 பவுண் டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெ ட்டுகளும், சாஹிர்கான் 3 விக்கெட் டுகளும் வீழ்த்தினர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •