வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

சிறந்த கல்வியை வழங்கி புத்திஜீவிகளை உருவாக்குவதில் அரசு அர்ப்பணிப்பு

சிறந்த கல்வியை வழங்கி புத்திஜீவிகளை உருவாக்குவதில் அரசு அர்ப்பணிப்பு

திக்வெல்லையில் ஜனாதிபதி

நாட்டில் சகல மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்கி அவர்களை புத்திஜீவிகளாக உருவாக்குவதில் அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிள்ளைகளை புத்தகப் பூச்சிகளாக அன்றி அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டியதன் பொறுப்பு பெற்றோர்களையும் ஆசிரியர்களையுமே சாரும். கிராமிய சிறுவர்கள் நகரத்தை ஆக்கிரமிப்பது போன்று முழு உலகத்தையும் ஆக்கிரமிக்கக் கூடிய அறிவையும் தெளிவையும் அவர்கள் பெறுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் சிங்கள மாணவனும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவனும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசிலில் முதலிடம் வகிப்பது எமது வெற்றிகரமான கல்விச் செயற்பாடுகளுக்கான சிறந்த சான்றாகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் திக்வெல்ல விஜித மத்திய கல்லூரியில் 200 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடம் விளையாட்டு மைதானம் மற்றும் நிர்வாக செயலகம் ஆகியவற்றை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கல்லூரி நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தார்.

அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த, காமினி லொக்குகே, டளஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த அமரவீர உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரி வித்ததாவது, திக்வெல்ல விஜித மத்திய கல்லூரிக்கு வருமாறு கடந்த ஆறு மாதங் களுக்கு முன்னரே அமைச்சர் டளஸ் அழகப்பெரும எனக்கு அழைப்புவிடுத்தார். நான் அப்போது வந்திருந்தால் அது பொருத்தமாக இருந்திராது. இந்த கல்லூரி யின் பெயர் விஜித என்பதால் நான் பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றியோடு இங்கு வருவதே பொருத்தமானதாகும்.

இக்கல்லூரிக்கு நான் வருகை தரும்போது இலவசக் கல்வியின் தந்தையாகப் போற்றப்படும் சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்ன ங்கரவை நினைவு கூருகிறேன். இக்கல்லூரி யின் ஆரம்ப கால மாணவர்களுள் எமது சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகரவும் அடங்குகிறார் என்பதை அறிய முடிகிறது.

கல்லூரியின் பழைய மாணவராக எமது மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஹிந்த அமர வீரவும் இருந்துள்ளார். அதேபோன்று இன்னும் பலர் தேசிய, சர்வதேச ரீதியில் உயர் பதவிகளை வகிப்பது மகிழ்ச்சி தருகின்றது.

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் தற்போது கிராமப்புறங்களிலும் சிறந்த கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கொழும்பு உட்பட நகர்ப் புறங்களிலேயே சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகள் இருந்தன. கிரா மிய மாணவர்கள் நகருக்குக் கற்கச் செல் லும் யுகம் அது. இன்று அந்நிலை மாற்ற மடைந்து கிராமப் புறங்களிலும் சிறந்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கல்வியை எவராலும் களவாட முடியாது. கல்வியோடு தாய் நாட்டுக்கு அன்பு செய் யும் பிள்ளைகளை உருவாக்குவது அவசி யம். அத்தகையவர்களை உருவாக்குவது சகலரினதும் பொறுப்பாகும்.

எமது பிள் ளைகளை சிறந்த கல்விமான்களாக உருவாக்குவதில் அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

இன்று சர்வதேச ஆசிரியர் தினமாகும். மதத்தலைவர்களுக்கு அடுத்தபடியாக நாம் வணங்கும் கெளரவத்திற்குரியோராக ஆசி ரியர்கள் திகழ்கின்றனர்.

அவர்கள் அதற்குப் பொருத்தமானவர்களாக இருப்பது முக்கியம்.

எமது பிள்ளைகளுக்குக் கல்வியைப் போன்றே சமூக அறிவையும், வெற்றி தோல்வியை உணரும் மனநிலையையும் அத்துடன் ஆரோக்கியத்தையும் வழங்குவது அவசியம். கல்வி மட்டுமன்றி இதர விடயங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

திக்குவல்லை விஜித கல்லூரியைப் பொறுத்தவரை தேசிய, சர்வதேச ரீதியில் மேலும் விளையாட்டு வீரர்களை இக் கல்லூரி உருவாக்க வேண்டும்.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு கல்வியைப் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவதிலும் அவர்களது திறமையைப் பாராட்டுவதிலும் முன்னிற்க வேண்டும். அவர்களது வெற் றியில் நீங்களும் அவர்களோடிருப்பது அவசியம்.

அத்துடன் வர்த்தகமயமான உலக வளர்ச்சியில் பிள்ளைகளின்பால் பெற்றோர் மிக் கவனமாக செயற்பட வேண்டியுள்ளது.

பேதங்களைக் கடந்து கெளரவமாக சகலரும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •