வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

கற்பித்தலில் புதிய அணுகுமுறை பகிர்ந்து வாசித்தல்

கல்வி - கற்றல் - கற்பித்தல்

கற்பித்தலில் புதிய அணுகுமுறை பகிர்ந்து வாசித்தல்

மாணவர் கல்வியில் மேலோங்குவதற்கு தாம் கற்கும் ஊடக மொழியில் நிறைவான பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாதது.

இவ் ஊடக மொழியை இலகுவாகக் கையாளும் திறனற்றோர் கல்வியில் பின்னடைவுகளை எதிர்நோக்குவதுடன் கற்பிப்பதிலும் இடர்படுகின்றனர். இவர்களுக்குக் கற்பிப்பதும் சிரமமானதொன்றாக அமைந்துவிடுகின்றது. எனவே இவ்வாறு ஊடக மொழியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு எவ்வகையிலாவது பரிகாரம் காண வேண்டும்.

எமது கல்வியமைப்பில் மாணவர்கள் மொழியின் வாயிலாகவே தமது திறன்களையோ, ஆற்றல்களையோ வெளியிடுவது பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இம் மொழியை இலாவகமாகக் கையாளும் திறன் பெற்றோர் மொழிப் பாடத்தில் மட்டுமன்றி ஏனைய பாடங்களிலும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குகின்றனர். மொழியின் அடிப்படைத் திறன்களான செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு, எழுத்து என்பவற்றில் செவிமடுத்தல் மூலமும் வாசிப்பு மூலமும் கிரகித்துக்கொண்ட விடயங்களில் பெரும்பாலானவற்றை எழுத்து மூலமே வெளியிடுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் பேச்சுமூலமான வெளியீடும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியானது அவர்களைச் சுயாதீனமான கற்போராக்குதல் வேண்டும். ‘பாடசாலைகள் படிக்கிற வழக்கத்தை உண்டாகக் வேண்டும்’ என்பதே கல்வியாளர்களின் முடிந்த முடிவாகும். இப்படிக்கின்ற வழக்கம் மாணவரிடையே ஏற்பட அவர்கள் வாசிப்பதில் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

பகிர்ந்து வாசித்தல் என்றால் என்ன?

வாசிப்புக் கற்பித்தலில் பகிர்ந்து வாசித்தல் முறையானது எமது வகுப்பறைகளில் பெருமளவு வெற்றியளித்துள்ளது. குறிப்பாக மொழியின் பின்னடைவான மாணவர்களுக்கு பரிகாரக் கற்பித்தல் முறையாக இதனைப் பின்பற்றலாம்.

இம்முறையானது கற்றல் கற்பித்தலை இலகுவாக முன்னெடுப்பதற்கும்; அடைவின் தரத்தை உயர்த்துவதற்கும்; மொழியைப் பயன்படுத்துவதில் பிள்ளைகளின் நம்பிக்கையைக் கட்டி வளர்ப்பதற்கும் உதவுகின்றது.

சுருங்கக் கூறின் பகிர்ந்து வாசித்தல் என்பது ஒரு பொருத்தமான கதையை, அல்லது பாடலை அல்லது சுவாரஸ்யமான ஒரு விடயத்தை வகுப்பொன்றுடன் அல்லது மாணவ குழுவொன்றுடன் பல தடவைகள் அதனைப் பகிர்ந்து சுவாரஸ்யமாக முன்னெடுத்தலாகும்.

பகிர்ந்து வாசித்தலுக்கான புத்தகங்களைத் தெரிவு செய்தல்

பிள்ளைகள் இயல்பாகவே கதைகளை விரும்புகிறார்கள். கதைகளுக்கு நல்ல நல்ல துலங்கல்களைக் காட்டிப் பகிர்ந்து கொள்வதால் விரைவாகக் கற்றுக்கொள்கின்றனர்; வாசித்தல் மகிழ்ச்சி தரக் கூடியது என்பதை உணர்ந்து கொள்கின்றனர்; இதனால் வாசித்தல் என்பது ஆயுட்காலப் பழக்கமொன்றாக அவர்களிடையே அமைந்து விடுகின்றது. இதனால் வாசித்தல் மட்டுமன்றி செவிமடுத்தல், பேசுதல், எழுதுதல் என்பனவும் விருத்தியடைகின்றன.

பகிர்ந்து வாசித்தலுக்கான புத்தகங்களைத் தெரிவு செய்யும் போது, மாணவர்கள் வகுப்பறைகளில் வழமையாகப் பயன்படுத்தும் பாடநூல்களைத் தெரிவு செய்ய வேண்டியதில்லை.

இச்செயற்பாட்டிற்கென நல்ல கதையம்சமுள்ள, கவர்ச்சிகரமான படங்கள் உள்ள, மாணவர்களுக்குப் பரிச்சயமான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களைத் தெரிவு செய்யலாம். இப்புத்தகங்கள் நகைச்சுவை, கற்பனை வளம், ஆச்சரிய உணர்வு, ஆகியவற்றுடன் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியனவாகவும், ஒரே அமர்வில் வாசிக்கக் கூடியனவாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பகிர்ந்து வாசித்தலுக்கான வகுப்பறை ஒழுங்கமைப்பு :

மாணவர்களை அரைவட்டமாக தரையில் அல்லது கதிரையில் அமரச் செய்யலாம். மாணவர் எண்ணிக்கை ஒரு அரைவட்டத்தினுள் அடக்க முடியாதவிடத்து ஒன்றிற்கு மேற்பட்ட அரைவட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அரைவட்டத்தின் மையத்தில் உள்ள ஆசிரியரை மாணவர்கள் பார்க்கக் கூடியவாறு வகுப்பறை ஒழுங்கமைப்பை வகுப்பறைக்கு வெளியே மர நிழலிலும் ஏற்படுத்திக்கொள்ளலாம். மாணவர்களின் அமருகைக்கு ஏற்ப ஆசிரியரும் தரையில் அல்லது கதிரையில் அமர்ந்துகொள்ளலாம்.

பகிர்ந்து வாசித்தலை நடத்துவது எவ்வாறு?

(1) முதலில் கற்கவுள்ள மாணவர்களின் வாசிப்புத் தரத்திற்கேற்ப பொருத்தமான கதைப் புத்தகமொன்றைத் தெரிவுசெய்தல் வேண்டும். இப்புத்தகத்தில் உள்ள சொற்கள், வசனங்களின் எண்ணிக்கை, எழுத்தின் பருமன் என்பன மாணவர்களின் வாசிப்புத் தரத்திற்கேற்ப அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

(2) மாணவர்கள் அனைவரும் பார்க்கக் கூடியவாறு புத்தகத்தை கைகளில் அல்லது மார்புப் பகுதியில் வைத்து கொண்டு செயற்பாட்டை முன்னெடுக்கலாம். கதை வரிகளையோ படங்களையோ சுட்டிக்காட்ட கைவிரலை அல்லது பென்சிலை அல்லது குச்சியொன்றைப் பயன்படுத்தலாம்.

(3) முதலில் அட்டைப்படம், கதைத் தலைப்பு, நூலாசிரியர் என்பன பற்றிக் கலந்துரையாடலாம். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எமது நடவடிககைகள் அமைதல் வேண்டும். ஆரம்ப உரையாடலில் குறித்த விடயந்தொடர்பாக மாணவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இடமளிக்கலாம்.

(4) தொடர்ந்து கதைத் தலைப்புக்கேற்ப ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெறும் படங்களைக் காட்டி மாணவரிடம் விளக்கம் கேட்கலாம்; கலந்துரையாடலாம். ஆனால், கதையின் முடிவினைத் தெரிவிக்கும் படத்தை மாணவர்களு க்குக் காட்டலாகாது.

ஆரம்பத்தில் இருந்து படங்களைப் பார்த்துச் செல்லும்போது மாணவர்களின் கவனம், ஆர்வம் என்பன அதிகரித்தே செல்லும், இந்நிலையில் கதையின் முடிவு எவ்வாறு இருக்கும் என அவர்களிடம் அபிப்பிராயம் கேட்கலாம். ஷிநிவினைக் கூறாது, முடிவு எவ்வாறு அமையுமென வாசித்துப் பார்ப்போம் என மாணவரை வழிப்படுத்த வேண்டும்.

(5) இவ்விடத்தில் கதையின் முடிவினை அறியும் ஆவலில் மாணவர் இருப்பர். இந்நிலையில் ஆசிரியர் கதைத் தலைப்பிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள கதை வரிகளை மாணவர் பார்க்கக் கூடியவாறு ஒவ்வொரு வரியையும் பொருத்தமான முகபாவங்களுடன், ஏற்ற உணர்ச்சிகளுடன் மாணவர் கேட்கக் கூடியவாறு உரத்து வாசித்தல் வேண்டும். கதையின் முடிவினை அறியும் ஆவலில் உள்ள மாணவர்கள் கவனமாக இதனைச் செவிமடுப்பர். தொடர்ந்து கதையின் முடிவுற்கு முன் சற்று இடைநிறுத்தி, இறுதியில் முடிவினையும் வாசிக்கலாம்.

(6) அடுத்த கட்டமாக கதை வரிகளை ஆசிரியர் சுட்டிக்காட்டியவாறு மாணவர்களுடன் சேர்ந்து வாசிப்பார். சேர்ந்து வாசித்தலில் மாணவர் அனைவரும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதுடன், ஆசிரியர் தமது குரலைத் தாழ்த்தி மாணவர்கள் வாசிக்க இடமளிக்க வேண்டும்.

(7) அடுத்து ஆசிரியரின் துணையின்றியே அவர் கதை வரிகளைத் தொட்டுக் காட்டியவாறு செல்ல மாணவர் சேர்ந்து வாசிப்பர். மாணவர் வாசிப்பதில் இடர்படும் இடத்தில் மட்டும் ஆசிரியர் அவர்களுக்கு உதவலாம்.

(8) இதன் பின்னர் மதிப்பிடல் நடவடிக்கையாக, கதை வரிகளை மூவர் அல்லது நால்வர் கொண்ட குழுக்களாக வாசிக்கவிடலாம். இவ்விடத்திலும் ஆசிரியரே கதை வரிகளைத் தொட்டுச் செல்வார். தனியொரு மாணவனையும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தலாம்.

(9) மதிப்பிடலில் சிறப்பான துலங்கலை வெளிப்படுத்தாத மாணவர்களை மீத்திறன் மாணவர்களுடன் சேர்த்துநால்வர் கொண்ட குழுக்களாக்கி அவர்கள் சுற்றி நெருக்கமாக அமர்ந்து வாசிப்பு முயற்சியில் ஈடுபடலாம். இவ்விடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட குழுக்களாயின் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அன்று கற்பித்த கதையின் ஒன்றிற்கு மேற்பட்ட பிரதிகளைப் பயன்படுத்த வேண்டும்.

பகிர்ந்து வாசித்தலின் பின்னூட்டல் செயற்பாடுகள்

(1) கதையை நாடகமாக்குதல். கதையில் வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு மாணவர்கள் விரும்புவர். அவர்கள் விரும்பும் பாத்திரங்களை வழங்கி நாடகமாக நடிக்க வைக்கலாம். நாடகத்திற்கான வசனங்களாக கதைப் புத்தகத்திலுள்ள வசனங்களை அப்படியே பயன்படுத்தலாம். பாத்திரங்கள் பயன்படுத்துவது தவிர மேலதிகமாக உள்ள வசனங்களைப் பேச ‘ஒழுங்குபடுத்தினர்’ என ஒரு மாணவனைப் பயன்படுத்தலாம். ஒரு குழு நடிக்கும்போது மற்றையவர்கள் அவதானிப்பர்.

(2) கதையைச் சொந்த மொழியில் மீளக் கூறலாம். வகுப்பறையில் கதையைக் கூறும்போது ஏனையோர் கவனமாகச் செவிமடுப்பர்.

(3) கதையை மீள எழுதலாம். இவ்விடத்தில் மாணவர் புத்தகத்தில் உள்ள சொற்களையோ அல்லது சொந்த மொழி நடையையோ பயன்படுத்த அனுமதிக்கலாம். குறித்த கதையை வித்தியாசமான முடிவுகளுடனும் மீள எழுதலாம்.

(4) கதையில் விருப்பமான பகுதிகளை வரையலாம். நிறந்தீட்டலாம். விபரிக்கலாம். தாம் வரைந்த படங்களுக்கான தலைப்புக்களை இடலாம். பொருத்தமான வசனங்களை எழுதலாம். அதனை ஏனையோருக்கு வாசித்துக் காட்டலாம். வகுப்பறைகளின் காட்சிப்படுத்தலாம்.

(5) மாணவர்கள் இணைந்து தாம் கற்ற கதைப் புத்தகத்தின் பிரதியொன்றினையும் ஆக்கிக்கொள்ளலாம். இம் முயற்சியில் மாணவர் குழுவாக ஈடுபடுதல் நன்று. பகிர்ந்து வாசித்தல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அடுத்து வரும் நாட்களில் இடம்பெறலாம்.

ஒரு புத்தகம் நிறைவுபெற்ற பின்னர் அடுத்த புத்தகத்தைப் பயன்படுத்தலாம். படிப்படியாக மாணவரின் கற்றல் தரத்திற்கேற்ப புத்தகங்களையும் மாற்றிச் செல்லலாம். இங்கு கதைப் புத்தகம் மாத்திரமன்றி பாடல் மற்றும் சுவாரஸ்யமான புத்தகங்களையும் கருத்திக்கொள்ளலாம்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •