வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

நிய+ஸிலாந்தை வீழ்த்தி மீண்டும் சம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்:

நிய+ஸிலாந்தை வீழ்த்தி மீண்டும் சம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் 6வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆபிரிக்காவில் கடந்த 22ம் திகதி தொடங்கி நடந்தது.

8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியாவும் 2000ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

பட்டம் வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

தசைப்பிடிப்பு காரணமாக நியூசிலாந்து அணி கப்டன் விக்டோரி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். மெக்கலம் கப்டனாக செயல்பட்டார். விட்டோரிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜீதன் பட்டேல் சேர்க்கப்பட்டார். அவுஸ்திரேலியா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நாணயச் சுழற்சியில் ஜெயித்த நியூசிலாந்து அணி கப்டன் மெக்கலம் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்கலம், ரெட்மாண்ட் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

அவுஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். இதனை சந்திக்க முடியாமல் மெக்கலம் தடுமாறினார். 14 பந்துகளை சந்தித்த மெக்கலம் ஓட்டம் எதுவும் எடுக்காமல் பீட்டர் சிடில் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் டிம் பெய்னிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 3.2 ஓவர்களில் 5 ஓட்டமாக இருந்தது.

அடுத்து மார்ட்டின் கப்தில், ரெட்மாண்டுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் அதே நேரத்தில் அடித்தும் ஆடி ஓட்டம் சேர்த்தனர். ஸ்கோர் 18.3 ஓவர்களில் 66 ஓட்டமாக உயர்ந்த போது ரெட்மாண்ட் (26) நாதன் ஹவுரிட்ஸ் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் டிம் பெய்னிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் சேர்த்தது.

நிலைத்து நின்று ஆடிய கப்தில், ஹவுரிட்ஸ் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். கப்தில் 64 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 40 ஓட்டம் எடுத்தார். இதை தொடர்ந்து ரோஸ் டெய்லர் (6) , கிரான்ட் எலியட் (9) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள். 6.4 ஓவர்களில் நியுசிலாந்து 5 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

6வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் பிராங்ளின், நீல் புரூமுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு நிலைத்து நின்று அடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 40.5 ஓவர்களில் 159 ஓட்டமாக இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. நீல் புரூம் 62 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ஓட்டம் எடுத்த நிலையில் ரன் - அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே பிராங்ளினும் ஆட்டம் இழந்தார். பிராங்ளின் 43 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 33 ஓட்டம் எடுத்தார் இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.

2வது மற்றும் 6வது விக்கெட் இணை மட்டுமே சற்று நேரம் நிலைத்து நின்று ஆடி ஓட்டம் எடுத்தது. அடுத்து வந்த இயான் பட்லர் 6 ஓட்டத்திலும் மில்ஸ் 12 ஓட்டத்திலும் ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியுசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டம் எடுத்தது. ஜீதன் பட்டேல் 16 ஓட்டத்துடனும் ஷேன் பொன்ட் 3 ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் ஹவுரிட்ஸ் 3 விக்கெட்டும் பிரெட்லீ 2 விக்கெட்டும் பீட்டர் சிடில் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 201 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் 1 ஓட்டத்திலும் அடுத்து களம் இறங்கிய கப்டன் ரிக்கி பொன்டிங் 1 ஓட்டத்திலும் ஆட்டம் இழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 2.2 ஓவர்களில் 6 ஓட்டமாக இருந்தது.

அடுத்து கமரூன் ஒயிட் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஷேன் வாட்சன் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஒயிட் 102 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 62 ஓட்டம் எடுத்த நிலையில் மில்ஸ் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த மைக் ஹஸ்ஸி 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அவுஸ்திரேலிய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டம் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்ட த்தை கைப்பற்றியது. ஷேன் வாட்சன் 129 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹோப்ஸ் 22 ஓட்டத்துடன் களத்தில் இருந்தார். அவுஸ்திரேலியா மீண்டும் சாம்பியன்.

சாம்பியன்ஸ் கோப்பையை அவுஸ்ரேலியா அணி தொடர்ந்து 2வது முறையாக கைப்பற்றியது. இதற்கு முன்பு 2006 ம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு ரூ. 3.60 கோடி பரிசாக கிடைத்தது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •