ஹிஜ்ரி வருடம் 1432 ரமழான் பிறை 02
கர வருடம் ஆடி மாதம் 18ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, AUGUST 03, 2011
வரு. 79 இல. 182
 
ஆதிவாசிகளின் பாரம்பரியங்களை பேணிப் பாதுகாப்பதில் அரசு உறுதி

ஆதிவாசிகளின் பாரம்பரியங்களை பேணிப் பாதுகாப்பதில் அரசு உறுதி

ஆதிவாசிகளின் உரிமை களையும் அவர்களுக்கு பூரண பாதுகாப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் சகல நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் வாகரையில் நடைபெற்ற உலக ஆதிவாசிகள் தினத்தில் தெரிவித்தார்.

சுமார் 57 வேடுவ கிராமங்கள் ஒன்றிணைந்து வாகரை பனிச்சங்கேணி, சல்லித்தீவில் உலக ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தோ, வேடுவ சமூகத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அவுஸ்திரேலிய ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒருவரும் கலந்து கொண்டனர்.

வேடுவர் சமூகத்தின் முதலாவது ஒன்றுகூடல் கொண்டாட்டம் இலங்கையின் கிழக்கில் நடைபெற்றது. உலகின் ஆதிக் குடிகளின் சர்வதேச தினத்தையொட்டி இம்மாதம் 30, 31 ஆம் திகதியன்று எங்கள் நாட்டின் வேடுவர் சமுகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னி லாகே அத்தோ தலைமையில் இந்த ஒன்றுகூடல் நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு டில்மா கன்சவேஷன் அமைப்பு அனுசரணை வழங்கியது.

பூர்வீகமும் வரலாறும்

வேடுவ சமூகத்தின் வரலாறு பல்வேறு கட்டுரை வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. இவை தொடர்பான பல உண்மை மற்றும் கற்பனை கதைகளும் உல்லாசப் பிரயாணத்துறை பற்றிய பதிவுகளும் இருக்கின்றன. குவேனி என்ற நம் நாட்டு பெண் விஜயன் என்ற இந்திய இளவரசரை மணமுடித்தார். இந்த இளவரசர் விஜயன் இந்திய உப கண்டத்தில் இருந்து இலங்கைக்கு வந்த போதே, இந்தத் திருமணம் நிகழ்ந்தது. குவேனியின் இரண்டு பிள்ளைகள் பிறந்ததை அடுத்தே வேடுவ சமூகம் தோன்றியதாக வர லாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. வேடுவ சமூகத்திற்கும் பலாங்கொடை யில் உள்ள மனித சமூகத்திற்கும் இடை யில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெருக்கமான தொடர்புகள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.

ஊவா மாகாணத்தில் இருக்கும் பின்தன்ன என்ற உப பிரிவே வேடுவ சமூகத்தின் தலைமையகமாக விளங்கியது. இதனை வேடுவர் தேசம் அல்லது ‘வெதி ரட்ட’ என்றும் அழைப்பார்கள். அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வேடுவ சமூகத்தினர் இருந்ததாக வரலாற்று நூல்களில் இருந்து தெரியவந்துள்ளது. இன்று வேடுவர் சமூகத்தினர் தம்பான, ஈனனிகல, திம்புலாகல, ரத்துகல, பொல்பத்த, வாகரை உட்பட கிழக்கு மாகாணத்தின் சில கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் தங்கள் பண்டைய பாரம்பரியத்திற்கு அமைய ஒரு விநோதமான இந்திய ஆரிய மொழியுடன் கலந்த மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் தங்கள் மூதாதையர்களின் ஏவல்களுடன் இணைந்திருப்பதாகவும் அதனால் அவர்கள் பண்டைய தெய்வ நம்பிக் கைகளில் நம்பிக்கை கொண்டிருப்பதாக வும் அதற்கமையவே அவர்களும் பூஜை வழிபாடுகள் ‘கிரிகொரஹா’ என்ற வகையில் அமைந்துள்ளது.

தலைமைத்துவம்

ஊரு குலத்தைச் சேர்ந்த வன்னிலா அத்தோ இலங்கையிலுள்ள பழங்குடி சமூகத்தின் தலைவராக இருக்கிறார். இவருக்கு நல்ல ஆளுமை இருப்பதுடன் தமது சமூகத்தின் தலைவராக இருந்து உள்ளுர் சமூகத்தவர்களையும், வெளிநாட்டு சமூகத்தவர்களையும் மகிழ்ச்சியடைய செய்யக்கூடிய வகையில் தனது பணிகளை செய்து வருகிறார். இவர் தனது சமூகத்தின் உரிமைகளை பேணிப் பாதுகாக்கும் ஒரு தலைவராகவும் இலங்கையின் காட்டு வளங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் ஒரு பணியையும் மேற்கொண்டு வருகிறார். ஊரு குலத்தைச் சேர்ந்த திஸ்ஸ ஹாமி என்பவர் வேடுவர் சமூகத்தின் முன்னைய தலைவராக இருந்தார். அரசாங்கங்கள் கடந்த நூற்றாண்டில் வேடுவ சமூகத்தை காடுகளில் இருந்து விரட்டியடிப்பதற்கு எதிராக போராடி சமூகத்தின் உரிமையை பாதுகாத்த ஒரு தலைவர் என்று வரலாற்று புத்தகங்களில் இவரது பெயர் எழுதப்பட்டுள்ளது.

மொழி

தற்போது வேடுவ சமூகத்தினர் மிகவும் எளிமையான தங்கள் மொழிப் பிரயோகத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களின் தாய் மொழியுடன் சிங்கள மொழி பிரயோகத்தையும் செய்வதுண்டு. ஆயினும் கடற்றொழிலில் ஈடுபடும் வேடுவ சமூகத்தின் பண்டைய மொழிப் பிரயோகம் படிப்படியாக அழிந்துவிட்டது. இன்று அவர்கள் தமிழ் மொழியையே பேசுகிறார்கள். தங்களது மூதாதையர் அன்று வேடர் சிங்களத்தை அல்லது வெதி சிங்க ளத்தை பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் தங்களிடமிருந்து மரணித்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் இந்த மொழியையே பிரயோகித்து வழிபாடு செய்கிறார்கள்.

சமயமும் நம்பிக்கையும்

வேடுவர்கள் இராட்சத அல்லது அரக்கர் குலத்திலிருந்து தோன்றியவர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இவர்கள் தங்கள் மகிழ்ச்சியை இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் பங்கு போட்டுக்கொண்டு மகிழ்வார்கள். இவர்கள் பொதுவாக காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் குன்றுகள் மற்றும் பாரிய மரங்கள் உள்ள பிரதேசங்களிலும் வாழ்கிறார்கள். தங்களின் மரணித்த உறவுகள் தங்களுடன் வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள் என்று வேடுவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். இவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர்கள் சமீபத்தில் மரணித்த குடும்ப அங்கத்தவர்களின் ஆவிகள் தங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். வேடுவ சமூகத்தினர் ‘கொண்டே முல்பொல வன்னியா, கலுபண்டா தெவியன், இந்திகொல்ல ஆவி, எல்லே பேய்கள், கலா ஆவி’ ஆகிய பேய்களை வணங்கி வழிபடுவதுண்டு.

வேட்டையாடும் போது போதியளவு மிருகங்களை பிடிப்பதற்கு வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன் தங்களுக்கு காடுகளில் ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் இந்த வேடுவ சமூகத்தினர் தங்களின் மரணித்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு பிரார்த்தனைகளையும் நடத்துவார்கள். ‘முக்கல்ய மலல்லிய, மல் மாதுவ, கொல மாதுவ, புலத் யஹான, கம்பா கணுவ மற்றும் கிரிகொரா ஆகிய இடங்களில் இந்த மறைந்தவர்களின் ஆவிகளுக்கு அவர்கள் தின்பண்டங்களை வைத்து நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனையை நடத்துவார்கள். இந்த ஒவ்வொரு வகையான பிரார்த்தனைகளுக்கும் வெவ்வேறு விதமான மேளவாத்திய ஒலிகளும், பிரார்த்தனைப் பாடல்களும் இடம்பெறுவதுண்டு. இவற்றில் ஆத்மா என்பது பிரதான பிரார்த்தனை முறையாகும். கிழக்குப் பிரதேசத்தில் உள்ள கடற்றொழிலில் ஈடுபடும் வேடுவர்கள் மத்தியில் வேற்று நம்பிக்கைகள் இருக்கின்றன. இவர்கள் தமிழ் சமூகத்தினர் வைத்திருக்கும் மத மற்றும் ஏனைய நம்பிக்கைகளுக்கு மாறுபட்ட விதத்தில் நடந்து கொள்வார்கள். அவர்களுடைய தெய்வ நம்பிக்கை தமிழ் சமூகத்தின் தெய்வ நம்பிக்கைக்கு முற்றாக மாறுபட்டதாக இருக்கும். அவர்களுடைய தெய்வம் கடல் தெய்வத்தை கடல் தேவன் என்று அல்லது கடல் கடவுள், கப்பல் பேய் அல்லது கப்பல்களின் பேய், குமார தெய்வம் அல்லது கடல் இளவரசன் என்றும் அழைப்பார்கள். இவர்களின் நம்பிக்கைக்கு அமைய அன்று போர்த்துக்கேயர் இலங்கையின் கடற்கரையில் முதல் தடவையாக கால் எடுத்து வைத்தனர். அதையடுத்து ஒல்லாந்தரும் பின்னர் ஆங்கிலேயரும் இலங்கையின் கிழக்கு கடற்கரை யோரத்தில் வந்திறங்கினார்கள். ஐரோப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்திறங்கிய போது இலங்கையில் வேடுவர்கள் இருந்ததை இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. தெய்வ இளவரசன் என்று அழைக்கப்படும் ஒரு சக்தி நாட்டின் மத்திய பிரதேசத்தில் உள்ள வேடுவர்களை ஆக்கிரமித்திருந்தது. இந்த தெய்வத்தின் மீது நாட்டின் மத்திய பிரதேசத்தில் உள்ள வேடுவர்களும் கடல் பிரதேசத்தில் உள்ள வேடுவர்களும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். கடல் வேடுவர்க ளைப் போன்று உள்நாட்டில் உள்ள வேடுவர்களும் இத்தகைய புத்த மைவுகளை கடைப்பிடிக்கத் தவறுவதில்லை. இதன் மூலம் இவ்விரு வேடுவ சமூகங்களுக்குள் வரலாற்று காலம் முதல் இருந்து வரும் தொடர்பை நாம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும் இன்று கடற்றொழிலில் ஈடுபடும் வேடுவர்கள் தமிழ், இந்துக்களின் பாரம் பரியங்களையும் அவர்களில் வேறுசிலர் கிறிஸ்தவ மத போதகர்களின் வழியிலும் மத வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். இத்தகைய புதிய செல்வாக்குகள் பண்டைய கடல் வேடுவர்களின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைப்பதாக அமைந்துள்ளது.

வீடுகள்/ இருப்பிடங்கள்

வேட்டையாடும் தொழிலை மேற்கொள்ளும் போது வேடுவர்கள் சிறு குழுக்களாக வேறிடத்திற்கு பயணிப்பார்கள். அப்போது அவர்கள் கருங்கல் குகைகளையும், மரங்களின் கீழும், இலை குழைகளினால் வேயப்பட்ட கூரைகளையுடைய சிறு வீடுகளை கட்டி வசித்தார்கள். ஆரம்ப காலத்தில் வேடுவ சமூகத்தினர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இத்தில் வேட்டையாடி வந்த காரணத்தினால் அவர்களுக்கு நிரந்தரமான வீடுகள் தேவைப் படவில்லை. (தொடரும்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி