ஹிஜ்ரி வருடம் 1432 ரமழான் பிறை 02
கர வருடம் ஆடி மாதம் 18ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, AUGUST 03, 2011
வரு. 79 இல. 182
 

என்னுடைய போராட்டம் அரசுக்கு எதிரானது; பாராளுமன்றத்திற்கு எதிரானதல்ல

என்னுடைய போராட்டம் அரசுக்கு எதிரானது; பாராளுமன்றத்திற்கு எதிரானதல்ல - அன்னா ஹசாரே

மாதிரி வாக்கெடுப்பில் பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு

பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, டில்லியில் நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் 82 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த பரபரப்பான மாதிரி வாக்கெடுப்பு மத்திய அமைச்சர் கபில் சிபலின், சாந்தினி சவுக் தொகுதியில் எடுக்கப்பட்டது. உயர் பதவியில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும் லோக்பால் அமைப்புக்கு பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளாததால், வரும் 16ம் திகதி முதல் டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

லோக்பால் அமைப்பு வரைவு மசோதா குழுவில் அரசு சார்பில் இடம்பெற்றிருந்த மத்திய அமைச்சர் கபில் சிபலின், டில்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இக்கருத்து கணிப்பில் 8.2 சத வீதம் பேர், பிரதமரை விசாரிக்க அதிகாரம் லோக்பால் அமைப்பு க்கு அளிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கபில் சிபல் குறிப்பிடுகையில், "100 சதவீதம் பேர் இதற்கு ஆதரிக்கவில்லை. எனவே, மக்கள் நடுநிலையில் தான் உள்ளனர்' என கிண்டலடித்துள்ளார்.

டில்லியில் நிருபர்களிடம் நேற்று முன்தினம் அன்னா ஹசாரே கூறியதாவது, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்கலாம் என, மன்மோகன் சிங் முன்பு ஒப்புக் கொண்டிருந்தார். அவரே தற்போது அது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். அரசில் உள்ள நிறைய பேர் பொய் சொல்கின்றனர். ஆனால், நல்ல மனிதரான பிரதமர் மன்மோகன் சிங்கே பொய் பேசலாமா? அவரே பொய் சொன்னால் என்ன ஆவது? லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரை சேர்க்கக்கூடாது என மன்மோகன் சிங்கே கூறுவது துரதிஷ்டவசமானது.

இதுவரை நானும், மக்களும் அவரை மரியாதைக்குரியவராகத் தான் கருதி வந்தோம். ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டம் கொண்டு வர போராட்டம் நடத்தும் என்னை அனுமதிக்காவிட்டால், சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன். போராட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட இடம்தான் தேவை என, நான் வற்புறுத்தவில்லை.

என்னுடைய போராட்டத்தின் போது வரும் கூட்டத்தினருக்கு ஏற்ற இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் நல்லது. என்னுடைய போராட்டம் பாராளுமன்றத்திற்கு எதிரானதல்ல; அரசுக்கு எதிரானது தான், இதை நான் விளக்கி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதன் பிறகும் அவர் இப்படி கூறியிருப்பது தான் வருத்தமளிக்கிறது. பொலிஸார் எங்களுக்கு எந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்தாலும் ஏற்கத் தயார். எங்களுடைய குறிக்கோள் போராட்டம் நடத்தும் இடமல்ல. லோக்பால் தான் எங்கள் நோக்கம். நான் அரசை, மிரட்டவில்லை. வலுவுள்ள லோக்பால் அமைப்பை உருவாக்கத் தான் போராடுகிறேன். அவர்கள் தான் என்னை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வழி செய்துள்ளனர். மக்களின் குரலை செவிமடுத்திருந்தால், பெரிய அளவில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் ராஜா அல்ல ஊழல் செய்வதற்கு. இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி