ஹிஜ்ரி வருடம் 1432 ரமழான் பிறை 02
கர வருடம் ஆடி மாதம் 18ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, AUGUST 03, 2011
வரு. 79 இல. 182
 

இந்தியா 319 ஓட்டங்களால் தோல்வி; இங்கிலாந்து 2-0 முன்னிலை

இந்தியா 319 ஓட்டங்களால் தோல்வி; இங்கிலாந்து 2-0 முன்னிலை

இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா 319 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வெற்றி இலக்கான 478 ஒட்டங்களைத் துரத்திய இந்தியா 2வது இன்னிங்சில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது.

அடுத்து 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. ஜுலை 29 ஆம் திகதி தொடங்கிய இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 221 ஓட்டங்கள் இந்தியா 288 ஓட்டங்கள் எடுத்தன. முதல் இன்னிங்சில் 67 ஓட்டம் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 441 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பிரையா 64, பிரெஸ்னன் 47 ஓட்டங்கள் நேற்று முன்தினம் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

அந்த அணி 2வது இன்னிங்சில் 120.2 ஓவரில் 544 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.

பிரையர் 73, பிராட் 44, பிரெஸ்னன் 90 (118 பந்து, 17 பவுண்டரி), ஸ்வான் 3 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் பிரவீன் 4, இஷாந்த், ஸ்ரீசாந்த் தலா 2, யுவராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா 2வது இன்னிங்சில் 478 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் துரத்தலை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக முகுந்த், டிராவிட் களமிறங்கினர். டிராவிட் 6 ஓட்டம் எடுத்து பிராட் வேகத்தில் விக்கெட் காப்பாளர் பிரையரி வசம் பிடிப ட்டார். லஷ்மன் 4 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் அண்டர்சன் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து முகுந்த் 3, ரெய்னா 1 ஓட்டம் எடுத்து பிரெஸ்னன் வேகத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 15.5 ஓவரில் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் சச்சின் – யுவராஜ் ஜோடி கடுமையாகப் போராடி யது. சிறிது நேரம் தாக்குப் பிடித்த யுவராஜ் 8 ஓட்டங்களில் வெளியேறினார். தலைவர் டோனி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இந்தியா தேநீர் இடைவேளையின் போது 6 விக்கெட் இழப்புக்கு 68 ஓட்டம் எடுத்து தோல்வியின் பிடியில் தத்தளித்தது.

சச்சின் 35, ஹர்பஜன் 10 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் சச்சின் அரைச்சதம் அடித்தார். மறு முனையில் ஹர்பஜன் அதிரடியாக விளையாடி ஓட்டம் எடுத்தார்.

இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 52 ஓட்டம் சேர்த்தது.

சச்சின் 56 ஓட்டம் (86 பந்து, 8 பவுண்டரி) எடுத்து அண்டர்சன் வேகத்தில் எல்.பி.டபுள்யு ஆகி வெளியேறினார்.

பிரெஸ்னன் ஓவரில் 4 பவுண்டரி விளாசிய ஹர்பஜன் 46 ஓட்டம் (44 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவரது பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

பிரவீன் 25, ஸ்ரீசாந்த் ஓட்டம் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

இந்தியா 47.4 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இஷாந்த் 8 ஓட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்து வீச்சில் பிரெஸ்னன் 5, அண்டர்சன் 3, பிராட் 2 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2 - 0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது டெஸ்ட் பர்மிங்காமில் 10ம் திகதி தொடங்குகிறது.

இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியின் முதனிலை அந்தஸ்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி