புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
'இனி நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம் இது எமது அரசு, அதில் நானும் இருக்கிறேன்'

'இனி நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம் இது எமது அரசு, அதில் நானும் இருக்கிறேன்'

அரசியல் தமிழ் பெண்கைதிகளுக்கு நேரில் சென்று விஜயகலா ஆறுதல்

கடந்த ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி உட்பட ஏனைய கைதிகளையும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இனி நீங்கள் எதற்குமே பயப்படத் தேவையில்லை, இது எமது அரசாங்கம். ஜனாதிபதி, பிரதமர். எல்லோருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவர்கள்.

அத்துடன் எமது இந்த அரசாங்கத்தில் நானும் அமைச்சராக இருப்பதால் நிச்சயம் உங்களது பிரச்சி னைகளைத் தீர்த்து வைப்பேன் எனவும் அவர்களிடம் உறுதியளித்தார்.

மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்தார்.

வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற அவர் பெண்கள் பிரிவுக்குச் சென்று ஜெயக்குமாரி உட்பட ஏனைய தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்கா, முன்னாள் சிறைச்சாலை புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், வெலிக்கடை சிறைச்சாலையின் பொறுப்பாளர் எமில்.ஆர்.லியனகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் பெண் அரசியல் கைதிகளை நேரில் பார்த்து உரையாடியிருந்தார். அச்சந்திப்பில் கைதிகள் தங்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர். தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.

அத்துடன் சிறைச்சாலை வளாகத்தில் ஆலயம் ஒன்று அமைத்துத் தரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த எட்டுப் பேர்களில் கிளிநொச்சி புதுக்குடியிருப்பு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டோர் உள்ளடங்குகின்றனர்.

பெண் அரசியல் கைதிகள் அனைவரும் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதி அமைச்சர் விஜயகலாவிடம் கோரியுள்ளனர். இவர்களுடன் நீண்ட நேரமாகக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் குறித்த கைதிகளின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.