புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லாத சகலவிதமான தகவல்களையும் மக்கள் அறிந்துகொள்ளலாம்

பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லாத சகலவிதமான தகவல்களையும் மக்கள் அறிந்துகொள்ளலாம்

29 ஆம் திகதி புதிய திருப்பம் ஏற்படும் என்கிறார் ஊடகத்துறை அமைச்சர்

“நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத சகல தகவல்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் உரிமையுள்ளது. தகவல் அறியும் சுதந்திரம் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்தியாவில் இந்த தகவல் அறியும் சுதந்திரம் உள்ளது.

அதனைவிட அதிக பயன்உள்ள தகவல் அறியும் சுதந்திர சட்டம் மூலம் அரச கணக்குகள், டென்டர்கள் பற்றிய விபரங்களைக்கூட ஒரு விண்ணப்பப் படிவம் மூலம் சாதாரண மக்களும் அறிந்து கொள்ள முடியும்” இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகத்தகவல் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க. கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் செய்து அஸ்கிரிய, மல்வத்த மகாநாயக்கர்களை தரிசித்து ஆசிபெற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில்:-

ஊடகவியலாளர் பலாத்காரமாக தலைமயிர் வெட்டப்பட்ட சம்பவம் கை, கால்கள் உடைக்கப்பட்ட சம்பவம் கொலை செய்யப்பட்ட சம்பவம், தாக்கப்பட்ட சம்பவம், வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவங்கள் ஊடகத் துறையினரை அச்சப்படுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றன.

இந்த அரசு இவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதோடு ஊடக சுதந்திரத்தினை சிறப்பாகப் பேனவும், உலக நாடுகளில் நூற்றுக்கு நூறு வீதம் ஊடக சுதந்திரமுள்ள நாடாக கருதும் அளவுக்கு நாம் இதனை செய்யவுள்ளோம்.

29ம் திகதி இந்த நாட்டில் ஒரு மாற்றம் புதிய திருப்பம் ஏற்படும். மக்களுக்கு அத்தியாவசிய தேவையான 10 பொருட்களின் விலை குறைக்கப்படும். எரிசக்தியின் விலை குறைப்பு மூலம் பெருந்தொகையான விலை குறைந்த சாதனையினை நாம் படைத்துள்ளோம். அதிக விலைகுறைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அரச ஊடகங்களிலும் ஊழல் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இது பற்றி பூரண விசாரணைகள் நடத்தப்படும். தேடுதல் நடத்தப்படும்.

முன்னர் அறிவித்தபடி அடுத்த தேர்தல் நடக்கும். இதில் தனித் தனியாகப் போட்டியிவோம். ஜனாதிபதி ஒரு பொது ஜனாதிபதியாக செயற்படுவார். வெற்றி பெறும் கட்சியில் பிரதமரும், இரண்டாவது கட்சியில் உபபிரதமரும் நியமிக்கும் வகையில் அரசியல்மாற்றம் ஏற்படும். அரச ஊடகங்கள் கடந்த காலங்கள் மக்களை விட்டு வெளியே நின்றது.

அதனை ஒழித்து மக்கள் ஊடகம் செயற்படுத்தப்பட வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் அரச ஊடகங்கள் மக்கள் மயப்படுத்தப் படும். அதற்கான முகாமைத்துவம் அமைக்கப்படும். புதிய முகாமைத் துவத்தினால் இவை வழி நடத்தப் படும். பாரிய மாற்றங்களை செய்ய உள்ளோம்.

தனியார் ஊடகங்களும் உண்மையுடன் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும். சுதந்திர ஊடகங்களாக செயற்பட வேண்டும் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.