புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 

கால்நடைப் பண்ணையாளர்களுக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படு;த்தும் கால்-வாய் நோய்

கால்நடைப் பண்ணையாளர்களுக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படு;த்தும் கால்-வாய் நோய்

தற்போது நாட்டின் சில மாவட்டங்களில் கால்நடைகளில் மிகவும் வேகமாக பரவிவரும் நோயாக கால் - வாய் நோய் காணப்படுகின்றது. இந் நோய் பற்றிய விழிப்புணர்வை கால்நடைப் பண்ணை யாளர்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் ஏனைய பிரதேசங்களுக்கு நோய் பரவுவதை ஓரளவு தடுக்க முடியும்.

கால்-வாய் நோயானது தீவிரமானதும் விரைவாகப் பரவக் கூடியதுமான ஒரு வைரஸ் நோயாகும். உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த நோய்த் தாக்கம் காணப்படுகின்றது. இந்த வைரசானது பசுக்கள், பன்றிகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் மான்கள் போன்ற பிளவுபட்ட குளம்புகளைக் கொண்ட மிருகங் களில் அதிகளவிலான தாக்கத்தை ஏற்படுத்து கின்றது.

பொதுவாக இந்நோய்த் தாக்கத்திற்கு உள் ளான விலங்கானது அதிகரித்த பொதுவாக இந்நோய்யைக் கொண்டதாகவும் (காய்ச்சல் தன்மை), வாய் மற்றும் வாயைச் சூழவுள்ள பகுதிகள், நாக்குகள், பால்மடி, கால்பாத குளம்புகளைச் சூழவுள்ள பகுதிகளில் கொப்புளங்களைக் கொண்டவையாகவும் காணப்படும். கொப்புளங்கள் அதிகளவில் நீர்த்தன்மை கொண்டவையாகவும் சிவப்பு நிறமாக மாற்றமடைந்தும் காணப்படும். இவற்றின் வலி, சீழ்த்தன்மை வெளியேற்றம் மற்றும் அசெளகரியம் காரணமாக கால்நடை கள் அமைதியற்று காணப்படும். உணவை உள்ளெடுக்க முடியாமல் அவதியடையும், வாயிலிருந்து நுரை போன்ற உமிழ்நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டுக் கொண்டி ருக்கும் மற்றும் நடக்கவும் எழுந்து நிற்கவும் முடியாமல் அவதியுறும். இந்த நோயினால் இறப்பு என்பது குறைவாக இருந்தாலும் கால் நடைகளின் உற்பத்தியில் பாரியளவு வீழ்ச்சி ஏற்படுகின்றது. இதனால் கால்நடைப் பண்ணையாளர்கள் அதிகளவு பாதிப்படை கின்றனர்.

இது வைரஸ் காரணியால் ஏற்படுகின்றது. கால்நடைகளில் தொற்று ஏற்பட்டு 2 முதல் 14 நாட்களுக்குள் நோய்க்கான அறிகுறி தோன்றும். பொதுவாக உயிருள்ள இழையங் கள், உமிழ் நீர், பாதிக்கப்பட்ட விலங்கு களின் கழிவுகள் (சாணம், சலம்) என்பவற்றில் இந்த வைரசானது உயிர் வாழும். அத்தோடு சாதகமான சூழல் காணப்படும் போது பல மாதங்கள் உயிர் வாழக் கூடிய தன்மையைக் கொண்டது. இந்த வைரசானது 7 பிரதான வகையையும் 60 இற்கு மேற்பட்ட உப வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.

பொதுவாக கால்நடைகளின் நேரடியான தொடர்பினால் இவை அதிகளவில் பரவுகின் றது. காற்றின் மூலமும் அதிகளவு தூரத்திற்கு பரவக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. அத்தோடு தொற்று ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உள்ள இடத்தில் விலங்குகளைக் காட்சிப் படுத்தும் போதும், பார்வையாளர்களின் மற்றும் ஊழியர்களின் ஆடைகள், காலணிகள் மூலமாகவும், வைரஸ் தொற்றுடைய குடிநீர் மூலமாகவும் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட விலங்கிலிருந்து பெறப்பட்ட விந்தணுக்களை செயற்கை முறைச் சினைப்படுத்தலில் பயன்படுத்ததும் போதும் இந்த நோய் பரவுவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது.

வாய் மற்றும் வாயைச் சூழவுள்ள பகுதிகள், நாக்குகள், பால்மடி மற்றும் குளம் புகளைச் சூழவுள்ள பகுதிகளில் அதிகளவு நீர்த்தன்மை யான கொப்புளங்கள் காணப்படும். அத்தோடு கால் - வாய் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான கால்நடைகள் பின்வரும் அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.

* 2-3 நாட்களுக்கு அதிகளவிலான உடல் வெப்பநிலை உயர்வு

* கொப்புளங்கள் உடைந்து வெளியேறிய திரவங்களின் பரவுகை, சிவப்பு நிறமான காயங்கள்.

* தொடர்ச்சியான ஒட்டும் தன்மை கொண்ட நுரை போன்ற உமிழ்நீர் வெளியேற்றம்

* கொப்புளங்களினால் ஏற்படும் வலி காரணமாக உணவு உள்ளெடுத்தலில் குறைவு.

* வாய்ப்பகுதி மற்றும் நாக்கில் காணப்படும்.

* நடப்பதற்கும் எழுந்து நிற்பதற்கும் சிரமப்படல்

* கருச்சிதைவுகள்

* பால்மாடுகளில் சடுதியான பால் உற்பத்திக் குறைவு

* சில வேளைகளில் இளம் கன்றுகளில் இறப்பு ஏற்படல்

நோய் காரணமாக நிறை, பால் உற்பத்தி குறைவு என்பனவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல மாதங்கள் ஏற்படுகின்றது. அத்தோடு நோய் வரமுன் பெறப்பட்ட உற்பத்தியின் அளவைப் பெற முடியாத நிலை ஏற்படும்.

பொதுவாக தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் காணப்படுகின்றது. ஆனால், ஒரு வகையான வைரஸிற்கு எதிராக கொடுக்கப் படும் தடுப்பு மருந்தானது மற்றைய வைர ஸிற்கு எதிராக பயனைத்தராது. ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில் பொதுவாகக் காணப் படும். வைரஸின் வகையைக் கருத்திற் கொண்டே தடுப்பு மருந்து ஏற்படுகின்றது.

பண்ணைகளில் கால்-வாய் நோய் பரவு வதைத் தடுப்பதற்கு பண்ணையாளர்கள் பின்வரும் நடைமுறைகளைத் தொடர்ந்து கடைபிடித்தல் வேண்டும்.

v கடுமையான உயிர்ப்பாதுகாப்பு முறை களைக் கையாளுதல் வேண்டும்.

v புதிதாக கால்நடைகளைக் கொண்டு வரும் போது கொள்வனவு செய்யப்பட்ட இடம் கால்-வாய் நோய் அற்றதென்பதை உறுதி செய்தல் வேண்டும். அத்தோடு புதிய விலங்கை சில கிழமைகள் தனித்து வைத்து அவதானித்தல்

v பண்ணைக்கு வரும் பார்வையாளர்களைக் குறைத்தல் அல்லது கட்டுப்படுத்தல்.

v தூய்மையான ஆடைகள் மற்றும் காலணிகளைப் பயன்படுத்தல்.

v தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தல்

v கால்நடைகளைத் தொடர்ச்சியாக அவதானித்தல்.

பண்ணைகளில் கால்-வாய் நோய் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் உடனடியாக கால்நடை வைத்தியரை அணுகுவதன் மூலம் இந்நோய் பரவுவதை விரைவில் தடுக்க முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.