புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
பொதுவேட்பாளர் என்ற சொற்பதத்திற்கு பின்னால் சில கட்சிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்

பொதுவேட்பாளர் என்ற சொற்பதத்திற்கு பின்னால் சில கட்சிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்'வை வெற்றிகொள்ள எவருக்கும் முடியாது

பொது வேட்பாளர் என்பவர் யார்? இப்படியான ஒரு வேட்பாளர் இப்போது அவசியம்தானா? அல்லது பொது வேட்பாளர் எனும் பெயரில் சில கட்சிகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற முற்படுகின்றனவா?

பொது வேட்பாளர் என்பவர் யார்? எந்த ஒரு அரசியல் கட்சிக்கு கட்சி கொள்கைக்கு உட்பட்ட வகையில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியுமா? உண்மையில் முடியாது. இது யதார்த்தத்திற்கு புறம்பானது. நல்ல பெறுமதியான சொல் பதம். ஆனால் அதற்கான பொருளை முழுமையாக உணர்த்தும் ஒரு செயலை வெளிகாட்டுவது கடினம். எந்த ஒரு வேட்பாளரும் சிறிதளவேனும் தனது கட்சி சார்ந்து அல்லது மதம் சார்ந்து அல்லது இனம் சார்ந்து இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு கட்சியும் பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை முன்னெப்போதும் நிலைநிறுத்தவில்லை. பொதுவேட்பா ளருக்கான தேவையும் இருக்கவில்லை. மக்களின் பொதுத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒருவரே பொதுவேட் பாளராக இருப்பார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுவேட்பாளருக்குரிய தாத்பரியத்தை கொண்டிருக்கவில்லை. பொதுவேட்பாளர் என்பது ஒரு உயர்மட்ட பெறுமதி வாய்ந்த சொற்பதமாகும். ஆனால், சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் தமது சுயலாபத்திற்காக இந்த சொற்பதத்தை பயன்படுத்துகின்றனர். பொதுவேட்பாளர் என்ற சொற்பதத்திற்கு பின்னால் சில காட்சிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களே காணப்படுகின்றன. இதனை பொதுமக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.

பொதுவேட்பாளர் என்ற போர்வையில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் சில அரசியல் கட்சிகளின் பின்னணியை உற்று நோக்கினால் அந்தக் கட்சிகள் கடந்த பல தேர்தல்களில் படுதோல்வி அடைந்திருந்தன என்பது தெளிவாக தெரியும்.

எனவே, சாதாரண பல தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து புதிய கண்டுபிடிப்பாக பொதுவேட்பாளர் என்ற சொற்பதத்தை அறிமுகம் செய்துள்ளன. பொதுவேட்பாளர் என்ற சொற்பதத்திற்கு ஏற்ற வகையில் ஒரு வேட்பாளரை எதிர்க்கட்சிகளால் கண்டிபிடிக்க முடியாது. இருந்த போதிலும் யாரோ ஒருவரை பொதுவேட்பாளர் என்ற போர்வையில் தேர்தலில் நிறுத்துவதே இந்த கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே இந்த வாங்குரோத்து அரசியல் கட்சிகளின் பிரதான நோக்கமாக உள்ளது.

எனவே, இது ஒரு பொது வேட்பாளருக்குரிய பண்பாக அமையாது. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே ஒரு பொது வேட்பாளரின் நோக்கமாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முற்படுவது பொதுவேட்பாளர் சொற்பதத்திற்கு ஏற்ற செயற்பாடு அல்ல. எதிர்க்கட்சிகள் தமது நோக்கத்தை பொதுமக்களுக்கு முழுமையாக வெளிக்காட்ட வேண்டும். அதனை வெளிக்காட்ட எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன.

ஒருவரை பதவியிலிருந்து கவிழ்ப்பது என்பது பொதுநலன் சார்ந்த விடயமாக அமையாது. ஆனால் இதுவே சில வங்குரோத்து அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. 1980களிலிருந்து இன்று வரை மாறிவரும் ஆட்சியாளர்களுக்கு இருந்த ஒரேயொரு சவால் யுத்தமாகும். ஆனால் இந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. இத்தகைய பாரிய சவால் ஒன்றை வெற்றி கொண்ட ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு நாட்டின் ஏனைய சவால்கள் பெரிய சவால்களாக அமையாது. யுத்தத்தைத் தவிர, அன்றியிலிருந்து இன்று வரை நாட்டில் வெவ்வேறு பிரச்சினைகள் இருந்தது உண்மை. அந்தப் பிரச்சினைகள் யாவும் யுத்தம் காரணமாக மூடிமறைக்கப்பட்டன.

யுத்தம் முடிவடைந்ததும், இந்தப் பிரச்சினைகள் வெளிவரத் தொடங்கின. இத்தகைய பிரச்சினைகள் இன்று தோன்றவில்லை. அன்றிலிருந்த ஆட்சியாளருக்கும் இந்தப் பிரச்சினைகள் தெரியாமலில்லை. பொருள் விலையேற்றம், மரக்கறி விலை ஏற்றங்கள், கல்விசார்ந்த பிரச்சினைகள், தொழிலாளர்கள் பிரச்சினை, மத நல்லிணக்கம் சார்ந்த சில முரண்பாடுகள் இப்படி சில பிரச்சினைகளை நாங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றை மட்டும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இங்கே குறிப்பிட்ட ஏனைய பிரச்சினைகள் குறித்து சுதந்திரமாக பேசுவதற்கும், அது தொடர்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் இந்த நாட்டில் ஒரு நல்ல அமைதி சூழல் இருக்கிறது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் இவ்வாறு பிரச்சினைகள் இருந்தும், மக்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில், அந்த ஆர்ப்பாட்டங்களை செய்ய முற்பட்டால், அதுவே பாதுகாப்பு தரப்பினருக்கு ஒரு இடையூறாக அமைந்துவிடும். மேலும் அந்தக் காலத்தில் மக்களுக்கு வாய் திறந்து பேசுவதற்கான சுதந்திரம் இருக்கவில்லை. சந்தேகம் புரையோடிப் போயிருந்தது.

உயிராபத்து தரும் அச்சங்களும் காணப்பட்டன. அத்தகைய ஒரு கொடிய யுத்த காலத்தை தாண்டி வந்துள்ள இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் இந்த யுத்த அகோரத்தை மறக்க மாட்டார்கள். எனவே, இத்தகைய யுத்தத்தை எத்துனை செலவு செய்தேனும் முடிவிற்குக் கொண்டு வந்த நாட்டின் ஆட்சியாளரையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த யத்தமானது கடந்த காலங்களில் பல அரசியல் தலைவர்களை காவு கொண்டிருக்கிறது. பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இந்த யுத்தத்தினால் பல ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஏன்? அயல் நாடான இந்தியா விலும் பல அரசியல் மாற்றங் களை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியான ஒரு யுத்தத்தில் தனது ஆட்சி பொறுப்பு கேள்விக் குறியாகிவிடும் என்ற நிலையி லிருந்தும் கூட அதனையும் பொருட்படுத்தாமல், தனக்குள்ள உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல், 2009 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றரை வருடங்கள் எனும் குறுகிய காலத்திற்குள் 30 வருட கால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்தமை என்ற ஒரு காரணமே. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பொதுவேட்பாளராக இருப்பதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுத் தருகிறது.

இதனை இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நன்கு உணர்ந்துள்ளன. யுத்தம் என்பது ஒரு பொது பிரச்சினையாகும். இன்று எதிர்கால தேர்தலுக்கான பொதுவேட்பாளர் பற்றி பேசுகின்றவர்கள் முன்னிறுத்துகின்ற வேட்பாளர்கள் பற்றி சிந்தித்துப் பார்த்தால், அவர்களில் ஒருவர் இந்த நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதியாவார். இவர் ஒரு பெண். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாளர் என்பதை நேரடியாகக் குறிப்பிடலாம்.

இவரது ஆட்சிக் காலத்திலும் யுத்தம் இடம்பெற்றது. யுத்தம் என்ற அந்தப் பொதுப் பிரச்சினையை அவரால் முடிவிற்குக் கொண்டு வர முடியவில்லை. அதேபோன்று பொது வேட்பாளர் எனக் கூறிக் கொள்ளும் மற்றுமொருவர் இன்னுமொரு அரசியல் கட்சியின் அரசியல் பிரமுகராவார். இவர் கடந்த பல தேர்தல்களில் படுதோல்வியடைந்து சாதனை படைத்தவர். ஆனால் இவருக்கும் 2002/2004 காலப் பகுதியல் பிரதமராக இருக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. ஆனால், அந்தக் காலத்தில் இவர் செய்யதது என்ன? யுத்தம் செய்த எல்ரிரிஈ இயக்கத்தோடு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார். நீங்கள் ஒரு பகுதியை ஆட்சி செய்யுங்கள், நான் ஒரு பகுதியை ஆட்சி செய்கிறேன். இதுதான் ரணில் விக்கிரமசிங்கவும், எல்ரிரிஈ தலைவர் பிரபாகரனும் செய்து கொண்ட உடன்படிக்கை.

இந்த உடன்படிக்கை பொதுமக்கள் நலன்கருதி மேற்கொள்ளப்பட்டது இல்லை. தங்களுடைய சுயலாப அரசியலுக்காகவும், பதவியை தக்கவைத்துக் கொள்ளவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இன்னும் சிலரது பெயர்கள் பொது வேட்பாளர் எனும் வகைக்குள் வெளிப்படுத்தப்படுகின்றன. சில மதங்களை சேர்ந்தவர்களும், அதேபோன்று ‘சில இடதுசாரி அரசியல்வாதிகளும் பொது வேட்பாளர்களாக போட்டியிடக்கூடுமென எதிர்வுகூரப்படுகிறது. அந்த சிலரும் இந்த நாட்டை ஒருமுறையாவது ஆட்சி செய்யவில்லை. யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை. இத்தகைய அரசியல் பிரமுகர்கள் தங்களை பொது வேட்பாளர் என அடையாளப்படுத்துவது பிழையாகும். இவர்கள் பொது வேட்பாளர்களா அல்லது சுயநல வேட்பாளர்களா என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.